ஈசாப் கதைகள்

நரிக்கு அழகு மூளை

ஒரு முறை, நரிக்கும் சிறுத் தைப் புலிக்கும் யார் மிக அழகு என்பதில் போட்டி வந்தது. சிறுத் தைப் புலி தன் உடம்பிலுள்ள புள்ளிகளை ஒவ்வொன்றாகக் காட்டி தான்தான் அழகு என்று சொன்னது. அதற்கு நரி, “உனக்குத் தோல்தான் அழகு, எனக்கோ மூளை அழகு” என்றது.

 

அடக்கத்தின் மதிப்பு

அதிகமாக எண்ணெய் ஊற்றப்பட்ட ஒரு விளக்கு மிகச் சுடர்விட்டு எரிந்தது. தான் சூரியனைக் காட்டிலும் அதிக வெளிச்சம் தருவதாகக் கர்வப்பட்டுக் கொண்டது. அப்போது காற்று வேகமாக வீசியதும் விளக்கின் சுடர் அணைந்து போனது.
விளக்கின் உரிமையாளர் மீண்டும் விளக்கை ஏற்றி விட்டுச் சொன்னார், “அதிக மாகத் துள்ளாதே, அடக்கமாக வெளிச்சம் கொடுக்கப் பழகிக் கொள். அடக்கமாக ஒளி வீசுவதால் தான் நட்சத் திரங்கள் அணைந்து போவ தில்லை.”

நாரை கொடுத்த நல்ல பதில்

ஒரு மயில் தனது வண்ணமயமான சிறகை விரித்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே போன ஒரு நாரையைப் பார்த்து, அதன் சாம்பல் நிற இறக்கையைக் குறித்து கேலி பேசியது. ஒரு அரசனைப் போல், நீலமணிகளும் தங்கமும் இழைத்த மேலங்கியாக விளங்கும் இறக்கையோடு, நான் இருக்கிறேன். அதில்வான வில்லின் வண்ணங்கள் மின்னுவதைப் பார். இதில் ஒரு சிறு துளியாவது உன் இறக்கையில் உண்டா என மயில் நாரையைக் கேட்டது, அதற்கு நாரை, உண்மை தான் மயிலே. ஆனால், நான் வானத்தின் உயரத்திற்கு எழும்பிப் பறப்பேனே; நட்சத்திரங்களுக்கும் கேட்கிற மாதிரி உரக்கக் குரல் எழுப்புவேனே; உன்னால் முடியுமா? நீ சேவலைப் போலத் தரையோடு நடக்கிற பறவைதானே, குப்பை மேட்டில் கொத்தித் தின்கிற கூட்டத்தில் சேர்ந்த பறவைதானே என்று பதிலடி கொடுத்தது.

நினைப்பில் மண் விழுந்தது

ஒரு வியாபாரியிடம் ஒரு கோவேறு கழுதை இருந்தது. அதை அவன் எந்த வேலைக்கும் பயன் படுத்தவில்லை; அதற்கு நிறையத் தீனி கொடுத்தான். அது எந்த வேலையும் செய்யாமல் நன்கு உண்டு கொழுத்தது. ஆகவே அது, எனது தந்தை நிச்சயம் உயர்தரமான பந்தயக் குதிரையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நான் வேகமும் பலமும் உடையவனாக இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொண்டது.
மறுநாளே, அந்த வியாபாரி அதை நீண்ட தூரப் பயணத்திற்குப் பயன்படுத்தினான். கடுமையான உழைப்பினால் அது மிகக் களைப்படைந்து போனது. இப்போது அது, என் தந்தை உயர்தரமான குதிரை என்று நினைத்தது தவறு. கேவலம், அது ஒரு கழுதையாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று ஆற்ற மாட்டாமல் புலம்பி வருந்தியது.