பிரதி எடுக்க

பாட்டுக்கதை

மச்சு வீட்டு திண்ணையிலே
மாலைநேர வேளையிலே
அச்சம் இன்றி ஒரு கிளியும்
அழகாய் பறந்து அமர்ந்தது

தச்சு மரச்சட்டத்திலே
சன்னல் வைத்த கூண்டுக்குள்
கீச்சு கீச்சு என்றுமே
கிளியும் ஒன்று கத்தியது

வந்த கிளியும் வாய்திறந்து
நலமா நண்பா என்றது அந்தக் கிளியோ கூண்டிலிருந்து
ஆமாம் என்று உரைத்தது

அடைந்து கிடக்கும் உனக்குமே
அடிமைப் புத்தி மாறாதா?
உடைத்துக் கூண்டை திறந்து
உடனே வெளியில் வாராயோ?

நடையை நடந்து கேட்டது
நக்கலாகப் பார்த்து சிரித்தது
விடையாய் கூண்டுக் கிளியுமே
விநோதமாக நிமிர்ந்து பார்த்தது.

எந்தன் எஜமான் நல்லவன்
என்னை வளர்க்கும் கண்ணவன்
மாந்தன் வாழ்வின் நடப்புகளை
மாறாது கணித்துச் சொல்பவன்

சீட்டை எடுக்கச் சொல்லிடுவான்
சிரித்தே நெல்மணிக் கொடுத்திடுவான்
காட்டை நோக்கி அனுப்பாமல்
கவனமாய் கூண்டில் அடைத்திடுவான்

ஏட்டைப் பிரித்து படித்திடுவான்
என்னை எப்பொழுதும் புகழ்ந்திடுவான்
வீட்டை விட்டு விரட்டாமல்
விழியைப் போலக் காத்திடுவான்

மழையும், வெய்யிலும் தொல்லையில்லை
மரமும் கூடும் தேவையில்லை
உழைக்கும் வேலை எனக்கில்லை
ஊர் ஊராக சுற்றிலாம்

கூண்டுக் கிளியின் வாதத்தை
குறித்து சுதந்திரக் கிளி நினைத்து
யாண்டும் இப்படி அடிமையாய்
இருப்பதில் ஒன்றும் பெருமையில்லை

வேண்டும் இடத்துக்குப் பறப்பதற்கு
வேண்டும் இறக்கைகள் இருக்கையிலே
மீண்டும் மீண்டும் அடிமையாக
நீண்டிட விழைவது மடமையன்றோ?

படைப்பின் பயனை அறிந்திடுவாய்
பறந்து திரிந்து மகிழ்ந்திடுவாய்
நடைப்பிண வாழ்க்கை நீக்கிடுவாய்
நம்மின மானம் காத்திடுவாய்

விடைபெற்று கிளியும் பறந்தது
வானில் வட்டம் அடித்தது
தடையை மீறி பறந்து செல்ல கூண்டுக்கிளி
திருமணம் பார்த்து இருந்தது.

- பொறிஞர் மு.பாலசுப்பிரமணியம் புதுச்சேரி