நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க

முட்டாள்கள் தினமா?

ஏப்ரல் - 1

ஏப்ரல் 1. இந்நாளை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பயின்ற காலத்தில் தொடங்கி பத்திரிகைகள் வரை பிறரை ஏமாற்றுவதற்காக இந்நாளில் ஏதேனும் ஒரு செயலைச் செய்கிறார்கள். அதாவது, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி நம்மை அதன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்து ஏமாளியாக்குவார்கள். இதைச் செய்யும் நாள்தான் முட்டாள்கள் தினம்.
அறிவாளிகள் தினம் என்ற ஒன்றை இதுவரை யாரும் ஏற்படுத்திடவில்லை. மாறாக முட்டாள்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அனுசரிப்பது சரிதானா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவும் ஆசியாவின் சிறந்த நாடுகளில் முதலிடம் பெற்றும் விளங்கி வரும் சிங்கப்பூர் நாட்டில் இந்த ஏப்ரல் ஒன்றாம் நாளில் பல திட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். சிங்கப்பூர் அரசும் மக்களும் ஏப்ரல் 1இல் முட்டாள் தினத்தில் தொடங்குகிறோமே என்றெல்லாம் கவலைப் படவில்லை. மாறாக உழைப்பு அதன் மூலம் வளர்ச்சி என்பது மட்டுமே அவர்களின் இலக்காக இருக்கிறது. அதனால்தான் எந்த வளமும் இல்லாத அந்த நாடு இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஏப்ரல் 1இல் சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் இதோ:
- 1824இல் சிங்கப்பூரில் தெரு விளக்குகள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது எண்ணெயில் எரியும் விளக்குகளை அமைத்தார்கள்.
- 1984இல் சிங்கப்பூர் அரசு மருத்துவ மனைகளில் குடிமக்கள் குடும்பத்துடன் மருத்துவம் செய்து கொள்ள மெடி சேவ் (Medisave) திட்டம் தொடங்கப்பட்டது.
- 1988இல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் முதல் புகைபிடிக்க முடியாத விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது.
- 1998இல் உலகிலேயே முதலாவதாக எனக் கருதப்படும் மின்னியல் சாலைக்கட்டண முறையை (Electronic Road Pricing) சிங்கப்பூர் நாடு அறிமுகப்படுத்தியது.
இவையெல்லாம் சிங்கப்பூருக்கும் ஏப்ரல் 1க்கும் உள்ள தொடர்புகள்.
ஏப்ரல் 1இல் உலகில் நிகழ்ந்த நமக்குத் தெரியவந்துள்ள சில நிகழ்வுகள்:
- 1578இல் இங்கிலாந்து நாட்டின் வில்லியம் ஹார்வி (William Harwey) உடலின் இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தார்.
- 1904இல் ஹன்றி ராய்ஸ் (Henry Royces) என்பவர் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட மகிழுந்துவை (Car)த் தயாரித்தார். இதன் விற்பனை உரிமையை சார்லஸ் டுவார்ட் ரோல்ஸ் (Charles Duard Rolls) என்பவர் பெற்றார். இந்த மகிழுந்தின் பெயர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) என்பதாகும்.
- 1935இல் இந்திய மாநிலங்களில் ஒன்றான பிகாரில் (Bihar) இருந்து ஒரிசா (Orissa) பிரிக்கப்பட்டு தனி மாநிலமானது.
- 1979இல் ஈரான், இஸ்லாமியக் குடியரசு நாடாக அயதுல்லா கொமேனியால் அறிவிக்கப்பட்டது.
- 1987இல் ஸ்டீவ் நியூமேன் (Steve Newman) என்பவர் உலகை முதன் முதலாக நடந்தே கடந்தவர் எனற பெருமையைப் பெற்றார். நான்கு ஆண்டுகளில் இவர் நடந்தே கடந்து சென்ற தொலைவு 35 ஆயிரம் கிலோ மீட்டர்.
- மணிமகன்