கலைஞர் பிறந்தநாள் ஜூன் - 3
கலைஞர் தாத்தா சொல்லிய கதைகள்
உனக்கு வயதென்ன?
90 வயது கிழவன் ஒருவன் தோட்டத்திற்குள்ளே குழிதோண்டி ஒரு மாங்கொட்டையைப் புதைக்கும் போது, என்ன கிழவா? உனக்கு வயதென்ன? இன்னும் இரண் டாண்டோ, அய்ந்தாண்டோ? இருக்கப் போகிறாய், இந்த மாங்கொட்டையைப் புதைக்கிறாயே, என்றைக்கு இது செடியாகி, மரமாகி, கிளை விடுத்து, இலை தழைத்து, பூவாகி, காயாகி, கனியாகி, அந்தப் பழத்தை நீ சாப்பிடப் போகிறாய்? என்று சிலர் கேட்டனராம். அப்போது அந்தக் கிழவன், இப்படி என் தாத்தா எண்ணியிருந்தால் நான் அந்த மாமரத்தின் பழத்தினை சாப்பிட்டிருக்க முடியாது. எனவே, எதிர்காலத்திலே என்னுடைய பேரன் பேத்திக்காக, என்னுடைய சந்ததிக்காக இதைச் செய்கிறேன் என்று சொன்னானாம்.
அத்திரி பாச்சா
பையன் ஒருவன் பக்கத்து ஊர் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தான். அங்கே பாட்டி கொழுக்கட்டை சுட்டுக் கொடுத்தாள். அதைச் சுவைத்துத் தின்ற பேரன், இதுக்குப் பேர் என்ன பாட்டி? என்று ஆவலுடன் கேட்டான். இதுதான் கொழுக்கட்டை என்றாள் பாட்டி. நான் ஊருக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லி எங்கள் வீட்டிலும் இதை செய்யச் சொல்லப் போகிறேன் என்று கூறிய பேரன், தனக்கு அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்பதற்காக, கொழுக்கட்டை கொழுக்கட்டை என்று மந்திரம் உச்சரிப்பது போல உச்சரித்துக் கொண்டே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
கொழுக்கட்டை! கொழுக்கட்டை! என்று முணுமுணுத்துக்கொண்டே வந்தவனின் முன்னே, வழியில் ஒரு சிறிய வாய்க்கால் - அதை ஒரே தாண்டாகத் தாண்டினான். அப்படித் தாண்டும்போது அத்திரிப் பாச்சா என்று அவன் கூச்சலிட்டுக் கொண்டு தாண்டியதுதான் தாமதம்; உடனே அவனுக்குக் கொழுக்கட்டை மறந்து விட்டது. அத்திரிப் பாச்சா அத்திரிப் பாச்சா என்றே உச்சரித்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்து, தாயாரிடம் அம்மா எனக்கு அத்திரி பாச்சா சுட்டுக் கொடு என்று அடம் பிடித்தான். அம்மா எதுவும் புரியாமல் விழித்தாள்.
இப்படியொரு வேடிக்கைக் கதை சிறு வயதில் கேட்டது.
இடிக்குப்பின் மழை
கிரேக்க நாட்டுத் தத்துவஞானி சாக்ரட்டீசைப் பற்றி படிக்கிறோம். அவர் பொது மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, எங்கே மக்களைச் சந்திக்கிறாரோ, அந்த இடத்திலெல்லாம் அந்தக் கிழவன் தன்னுடைய கருத்துகளைச் சொல்லத் தவறுவதில்லை. வீட்டு வாயிலில் நின்று கொண்டு தெருவிலே போவோர் வருவோரையெல்லாம் இழுத்து நிறுத்தி தன்னுடைய கருத்துகளை, தத்துவங்களை பொழிந்து கொண்டே இருப்பார். ஆனால், அவருடைய
நாக்குத் தமிழ் மணக்கும்
காளமேகப் புலவர் கேள்விப்பட்டிருப்பாய்! சிலேடையாகப் பாடல் புனைவதில் சிறந்த மேதை! அவர் ஒரு சமயம் யாத்திரை புறப்பட்டு பல ஊர்களையும் கடந்து வந்தபோது நாகைக்கு வந்தாராம்! புலவருக்கு நல்ல பசி! எங்கேயாவது ஓர் உணவுக்கடையில் சோறு வாங்கிச் சாப்பிடலாம் என்ற நினைவில், அங்கே கோயிலருகே கோலி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, தம்பி சோறு எங்கே விற்கும்? என்று கேட்டிருக்கிறார். உடனே ஒரு குறும்புக்கார இளைஞன் சோறு தொண்டையிலே விக்கும் என்று கூறி சிரித்திருக்கிறான். சினம் கொண்ட காளமேகப் புலவர் அந்த இளைஞர்களைச் சபிப்பதற்காக ஒரு கரித்துண்டை எடுத்து சுவரில் எழுதினார்.
பாக்கடிக்கும் பாலகர்க்கு நாக்கு...
என எழுதி முடிப்பதற்குள் கோயில் மணி அடிக்கவே, காளமேகம் கோயிலுக்குச் செல்லும் பரபரப்பில் எழுதியதை சுவரில் அப்படியே விட்டு விட்டுப் போய்விட்டார். கோயிலில் உணவு வாங்கிச் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து, அந்த இளைஞர்களுக்கு தான் இடப்போகும் சாபத்தைப் பூர்த்தி செய்ய, மீண்டும் கரித்துண்டை எடுத்து சுவர் அருகே சென்றார். ஆனால் அவருக்கு முன்பே அந்த இளைஞர்கள் அந்த வாசகத்தைப் பூர்த்தி செய்திருந்தார்கள்.
பாக்கடிக்கும் பாலகர்க்கு
நாக்குத் தமிழ் மணக்கும் நன் நாகை
என்பதாக!
அந்த இளைஞர்களைத் தண்டிக்க நினைத்த காளமேகமே, அவர்களின் தமிழ்ப்புலமை கண்டு பூரித்துப் போனார்.