ஜூலை 2008 மலர் 5 இதழ் 8

சிந்திப்போம்

 

பிச்சை

 

இனிய பிஞ்சுகளே,
அண்மையில் இணையதளத்தில் ஒரு செய்தி படித்தேன். அது மும்பையின் பிச்சைக் காரர்கள் பற்றியது. மும்பை இந்தியாவின் மாநகரங்களில் ஒன்று (Metropolitan City); பல்லாயிரங்கோடி புரளும் வணிகம் நடை பெறும் நகரம். பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் பெருமளவு வாழும் ஊர் அது. பணப் புழக்கத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். அங்கு உள்ள ஒரு அய்ந்து நட்சத்திர உணவகத்தின் வாசலில் மாசூ (வயது 60) என்கிற பிச்சைக்காரர் தினந்தோறும் 7 மணி நேரம் காத்திருந்து பிச்சையெடுக்கிறாராம். மிகவும் மோசமான கிழிந்த பழைய ஆடைகளை அணிந்துள்ள இவரின் நிலையைப் பார்த்து மனம் உருகி அங்கு வரும் சினிமாக்காரர்களும் பணக்காரர்களும் இவருக்குப் பிச்சை போடு கிறார்கள். இதன்மூலம் இவருக்குக் கிடைக்கும் வருவாய் நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை. வீட்டிலிருந்து நல்ல உடை அணிந்து தினந்தோறும் ஆட்டோவில் வரும் இந்த மாசூ வழியில் பிச்சைக்காரர் உடையை மாற்றிக் கொள்கிறாராம். இவருக்கு 2 சொந்த வீடுகள் உள்ளனவாம். இவரது சொத்து மதிப்பு ரூ. 30 இலட்சம். இது ஒரு உதாரணம் தான். இவரைப்போல பலர் இப்படி அங்கு இருக்கின்றார்களாம்.

பிச்சை எடுத்து வாழுதல் என்பது மனிதனின் தன்மானத்திற்கு எதிரானது. உழைத்து வாழுவதே உயரிய வாழ்க்கை முறையாகும். பசி என்று வருபவர்க்கு மீன் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்று ஒரு சீனப் பழமொழி உள்ளது. உழைக்கக் கற்றுக் கொடுத்து விட்டால் ஒருவன் தனக்கான உணவைத் தானே உழைத்துத் தேடிக் கொள்வான். மாறாக உணவு கொடுத்தாலோ, பணம் கொடுத்தாலோ அவன் சோம்பேறியாக மாறி நாட்டுக்குச் சுமையாக மாறிப்போவான்.
இல்லாதவர்களுக்கு கொடுத்தல் என்பது நல்ல பண்புதான். ஆனால் மும்பை மாசூ போல எத்தனையோ பேர் உருவாகி விடு கிறார்கள் பார்த்தீர்களா?
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையார் கூறியது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தவே இல்லாமல் பிச்சை எடு என்று சொல்லியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பல பெரிய நகரங்களில் பிச்சை எடுத்தல் ஒரு பெரும் தொழிலாகவே நடந்து வருகிறது. சிறு சிறு பிள்ளைகளைக் கடத்திச் சென்று பிச்சை எடுக்க வைத்து தொழில் செய்யும் கயவர்கள் இருக்கிறார்கள். மனிதர்களின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி இப்படித் தொழில் செய்கிறார்கள்.
இதே வேளையில் ஊடல் ஊனமுற்ற பலர் உழைத்து வாழ்ந்து உயர்ந்து வெற்றி பெற்று வருவதையும் பார்த்து வருகிறோம்.
நம்மால் இயன்றதை வழங்கலாம். அதை எப்படி அளிப்பது என வரையறுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவத்திற்கு, கல்விக்கு, வேலை வாய்ப்புக்கு, தொழில் தொடங்கு வதற்கு என பொருளுதவியோ, பண உதவியோ செய்யலாம். இப்படிச் செய்வதால் பலரை வாழவைக்கவும், அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கவும் முடியும். நமக்கும் மனம் மகிழ்ச்சி கிடைக்கும்; நாட்டுக்கும் நன்மை பயக்கும்.
உனக்குப் புகழ் வேண்டுமானால்; பெருமை வேண்டுமானால் பிறருக்குத் தொண்டு செய்வதன் மூலம் அதனைப் பெற்றுக்கொள் என்கிறார் பெரியார் தாத்தா. இந்தத் தொண்டு என்பது உழைப்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, பிச்சை அளித்து சோம் பேறிகளை வளர்ப்பதாக இருக்கலாமா?
- பிஞ்சு மாமா