ஜூலை 2008 மலர் 5 இதழ் 8
உன்னையே நீ அறிவாய்...
மூளை பேசுகிறேன்... கொஞ்சம் கேளுங்களேன்...
- கவிஞர் செவ்வியன்
எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம், என்பர். அங்கிருந்து தான் நான் பேசுகிறேன். என்னோடு பிறந்த சிறுமூளை, முகுளம், தண்டு வடம் ஆகிய தம்பிகளுக்காகவும் பேசுகிறேன்.
நாங்கள் தனியுடைமையை வெறுப் பவர்கள்; பொதுவுடைமையைப் போற்றிப் பாதுகாப்பவர்கள். எனவேதான் எங்களுக்குள் பாகப்பிரிவினைகள் இல்லை. ஆனால், வேலைப் பிரிவினைகள் உண்டு. ஒருவர் வேலையில் மற்றொருவர் தலையிடுதலோ குறுக்கிடுதலோ இருக்கக் கூடாது என்னும் கொள்கையில் உறுதிப்பாட்டோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
![]() |
மனிதர்களே! உம்மில் எவராவது குற்றமி ழைத்து விட்டால், மூளை இருக்கிறதா? என்று சினத்தோடு கேட்கிறார்கள். பாதிக்கப் பட்டவரைப் பார்த்து அவன் மூளை இல்லாதவன்; தப்பு செய்து விட்டான்; மன்னித்து விடுங்கள், என்று ஆறுதல் கூறி அரவணைக்கிறார்கள்.
உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் 1.5 கிலோ எடையுள்ள மூளை இருக்கிறது. நான் இடும் ஆணைக்கு ஏற்றவாறு செயல்படாதவர்கள் குற்றமிழைப்பவர்கள். அவர்களைத்தான் நீங்கள் முட்டாள்கள் என்று அழைக்கிறீர்கள்.
என்னுடைய வளர்ச்சி திடீரென்று ஏற்பட்ட தல்ல. 50 கோடி ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்த நாங்கள் வளர்ந்து கொண்டும் இருக் கிறோம். இங்கு வளர்ச்சி என்பது பருமனிலோ எடையினிலோ அல்ல; செறிவினில் என்று பொருள்.
நீங்கள் ஒன்றைப் பார்க்கிறீர்கள். அதனுடன் பேசுகிறீர்கள். நடக்கவும் ஓடவும் செய்கிறீர்கள். சிந்திக்கவும், சில வேளைகளில் சண்டை இடவும் செய்கிறீர்கள். அவற்றை நீங்களா செய்கிறீர்கள்? அல்ல; அவைகள் நான் இடும் ஆணைகள். நானின்றி நீங்கள் இல்லை; உங்களின் இயக்கமில்லை. எனவே, அனைத்தும் நானே!
என் இயக்கத்தை முதன் முதலில் சரியாகப் புரிந்து கொண்டவர் ஹிப்போகிரேட்ஸ் என்ற மருத்துவர் மட்டுமே. அவர் தான் உங்களின் மகிழ்ச்சி, சிரிப்பு, வருத்தம், வலி, துக்கம், கண்ணீர் அனைத்துக்கும் மூளையே காரணம் என்று உங்களுக்குக் கூறினார்.
நான் முதன் முதலில் சிந்திக்கத் தொடங் கியது. உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்று வது, உங்களின் பசியைப் போக்க உணவிடங் களைத் தேடுவது ஆகிய இரண்டைப் பற்றியவையே.
கால விரிவில் நினைவுகள் விரிவடைந்தன; தேவைகள் பெருகின. என் சிந்தனை தொட ரோட்டமாயிற்று. புதியன பலப்பல கண்டு பிடித்தேன். உங்களின் தேவைகளை நிறைவு செய்ய தினம் தினம் ஓய்வின்றி உழைக்கிறேன். நான் சுயநலமற்ற தூய்மையான சமூகத் தொண்டன் எனப் பறைசாற்றிக் கொள்வது தற்பெருமைக்காக அல்ல.
கரு தோன்றிய இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் தோன்றுகிறோம். மூன்று மாதக் கருவின் எடையில் பாதி எடை என் எடையாகும்.
நீங்கள் தூங்கும் போது நாங்கள் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறோம். 24 மணி நேரமும் வெளிச்செயல்களை உள்வாங்கி மிகத் துல்லியமாக வடிகட்டி உங்களுக்குத் தேவை யானவற்றை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
உமது உடலுக்குள் இயங்கும் உறுப்புகள் அனைத்துமே எங்களது ஆணைக்கேற்பதான் இயங்குகின்றன. நாங்கள் பழுதுபட்டால், உடல் உறுப்புகள் எல்லாமே பழுதுபட்டு விடும். இதை நீங்கள் தெளிவாக உணர்தல் மிகமிக அவசியம்.
ஆணின் மூளையைவிட, பெண்ணின் மூளை அளவில் கொஞ்சம் சிறியது. ஆனால் ஒலிகளை மிக நுட்பமாய் உணர்ந்து செயல் படும் செயல் திறன் உடையது. நாட்டியம் ஆடும்போது ஆண்களைவிட, பெண்கள் தாளம் தவறாமல் ஆடுவதற்கு அதுவே காரணம்.
என்னுள் 100 மில்லியன் செல்களையும், 20 மில்லியன் நரம்புகளையும் அடைத்து வைத்துள்ளேன். அவைகளுக்குள் சண்டை இல்லை; போட்டிகள் இல்லை; பொறாமை இல்லை. அவைகள் உனக்காக நான் சேர்த்து வைத்துள்ள மிக்க மதிப்புடைய கருவூலம். அவற்றில் 10 விழுக்காட்டைக் கூட நீங்கள் பயன்படுத்தவில்லை. ஓரளவு பயன்படுத் தியவர்கள் தான் புதியன பலவற்றைக் கண்டு பிடித்தவர்களாவர்.
உடலின் எடையில் 1/40 பங்கு மட்டுமே உள்ள எனக்கு உடலில் ஓடும் இரத்தத்தில் 1/5 பகுதி தேவைப்படுகிறது. இதைத் தான் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு, என்று மார்க்சு மாமுனி கூறினார்.
உங்கள் உடலினுள் இயங்கும் உறுப்பு களில் எவையேனும் பழுதுபட்டால், அவைகள், தமக்கேற்பட்ட பழுதுகளைச் சீரமைத்துக் கொள்ளும், மாற்று உறுப்புகளைப் பொருத்தி, அவைகளை இயக்கும் அறிவையும் உமக்கு நான் அளித்துள்ளேன். ஆனால், என்னுள் பழுது ஏற்படின், உங்கள் கதி அதோகதி தான்! இறப்பு ஒன்றே முடிவாகும்.
நாங்கள் மட்டுமல்ல; எங்களால் இயக்கி வைக்கப்படும் உறுப்புகளும் உங்களுக்காகவே ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் எங்களது பணியைத் தடையின்றியும், செவ்வனேயும் செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.
1. புகைப்பதை, மது குடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை இரண்டும் எனக்கு மட்டுமல்ல, உடல் உறுப்புகள் எல்லாவற்றிற்கும் பகைவர்களாவர். போதைப் பொருட்கள் என்னுள் புற்று நோயை உண்டாக்குகின்றன; தண்டுவடத்தைத் தள்ளாடச் செய்கின்றன. எங்கள் செயல்பாடு களில் தடுமாற்றம் ஏற்படும்போது, இயங்கும் உறுப்புகள் எல்லாமே தடுமாறு கின்றன.
2. மன அழுத்தம், மனத் தொய்வு, தாழ்வு மனப்பான்மை, உற்சாகமின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!
3. இயற்கை உணவுகளை உண்ணுங்கள்; செயற்கை உணவுகளையும் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணா தீர்கள்!.
4. நரம்புகளுக்குப் பாதிப்புகளை ஏற் படுத்தும் நச்சுப் பொருள்களை தொடவே தொடாதீர்கள்!
5. உண்ணும் உணவில் 40-50 விழுக் காட்டளவு கார்போஹைட்ரேட் இருக்குமாறு உணவைத் தேர்வு செய்யுங்கள்!
6. சர்க்கரையைக் கொழுப்போடு கலந்துண்ணாதீர்கள்!
7. மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள பால், நெய், வெண் ணெய், முட்டை ஆகியவற்றை முற்றிலுமாகத் துறப்பீராக!
உங்களுக்காகவே உழைக்கும் எம்மை உழைக்க விடுங்கள். எமது இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் உங்களின் ஒவ்வொரு செயலும். நீங்கள் இறக்கும் நாளைத் துரிதப் படுத்துகின்றன என்பதை அறிவீர்களாக!
