ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

சின்னக்கதை

வேண்டாம் சாமி! - ச. கந்தசாமி, விருதுநகர்

 

நாத்திக இராமனின் உண்மையான பெயர் இராம சாமி. தன் வாழ்வில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கின்ற காரணத்தால், மற்றவர்கள் விளையாட்டாக நாத்திக இராமன் என அழைக்கத் தொடங்க, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

நாத்திக இராமனுக்கு சுப்பையன் என்று ஒரு நண்பன் இருந்தான். சுப்பையன் இரா மனுக்கு நேர் எதிர். தீவிரமான கடவுள் பக்தன். எப்போது பார்த் தாலும் கோயில், குளம் என்று சுற்றுவது தான் சுப்பையனுக்கு வேலை.

நாத்திக இராமனும் சுப்பையனும் நேரெதிர்க் கொள்கைகளை உடையவர்களாக இருந்த போதும் அவரவர் கொள்கை, நட்புக்குத் தடையாக இல்லை. இருவரும் தங்கள் இளமைக்கால நட்பை மறவாமல் எப்போதும் நல்ல முறையிலேயே பழகி வந்தார்கள்.

நாத்திக இராமன் கடவுள் மறுப்புக் கொள்கையைக் குறித்து நிகழ்கின்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் - கழக மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கும் தவறாது சென்று வருவான். ஆனால், எப்போதும் தனது நண்பனான சுப்பையனை இதுபோன்ற கூட்டங்களுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துவது கிடையாது.

ஒரு சமயம் நாத்திக இராமன், சுப்பையன் இருவருமாக வெளியூர் சென்று திரும்பும் வழியில் கழகக் கூட்டத்திற்கு சுப்பையனையும் அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

சுப்பையனும் நிலைமையைப் புரிந்து கொண்டு அந்தக் கூட்டத்தில் என்னதான் பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந் தான். சுப்பையனுக்கு இது புதிய அனுபவம்.

கூட்டம் முடிந்து இருவரும் ஊர் திரும்பும் வழியில் சுப்பையன் நாத்திக இராமனிடம் கேட்டான், சாமி இல்லை என்று இவ்வளவு தீவிரமாக நீங்கள் எல்லோரும் பேசுகின்றீர்கள். ஆனால், உன் பெயரிலேயே சாமி இருக்கிறதே. உன் இயற்பெயரான இராமசாமியில் உள்ள சாமியை முதலில் நீக்கிவிட வேண்டியது தானே.

அப்போது நாத்திக ராமன் பார்த்தாயா! ஒரே ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த உனக்கே சாமி வேண்டாம் என்று தோன்றிவிட்டது. நாங்களும் பெரியார் காலத்திலிருந்து சாமி வேண்டாம் என்றுதான் சொல்லிக் கொண்டு வருகிறோம். நீயும் அதையே தான் சொல்கின்றாய் என்று சொல்லிச் சிரித்தான்.

சுப்பையன் இதற்கு என்ன மறுமொழி சொல்வது என்று புரியாமல் விழித்து நின்றான்.