செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09
உன்னையே நீ அறிவாய் - சிறுநீரகம்! - கவிஞர் செவ்வியன்
உடலின் நடுநாயகமாய், வயிற்றுப் பகுதியில் தண்டுவடத்தின் இருபக்கமும், அவரை விதை போல கருஞ்சிவப்பாய் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைப் பகுதியே சிறுநீரகம் எனப்படும். அவை இரண்டும் ஒரே நேர் கோட்டில் இல்லாமல், வலப் பக்க சிறுநீரகம் சிறிது கீழிறங்கியும், இடப்பக்க சிறுநீரகம் சிறிது உயரத்திலும் உள்ளன. ஒவ்வொன்றும் 10-12 செ.மீ நீளமும், 8-9 செ.மீ அகலமும் உடையது. உயிர் வாழ்க்கைக்கு ஒரு சிறுநீரகம் போதுமான தெனினும், பாதுகாப்புக் கருதியே இயற்கை இரண்டு சிறுநீரகங்களைப் படைத்தளித் துள்ளது. இதிலிருந்தே, சிறுநீரகம் உயிர் வாழ்க்கைக்கு அவசியம் தேவை என்பது தெரிகிறது அல்லவா?
இந்தக் குறைந்த கொள்ளளவைக் கொண்ட அறைக்குள் தான் 1,00,000 சிறுநீர் உற்பத்திக் களன்கள் (நெப்ரான்கள்) அடுக்கப் பட்டுள்ளன. இவைகள் ஒரு நிமிடத்தில் 125 மில்லி இரத்த நீரில் 124 மில்லி மீண்டும் உட்கிரகிக்கப்பட்டு, 1 மில்லி லிட்டர் மட்டுமே சிறுநீராக வெளி வருகிறது. நெப்ரான்களின் அடிப்படை வேலை என்பது இரத்தத்தைச் சுத்திகரிப்பதுதான்.
உடலுக்குத் தேவையற்ற அனைத்துப் பொருள்களும் முக்கியமாக யூரியா கிரியேட்டி னின். உடலிலுள்ள பிற நச்சுப் பொருள்கள் எல்லாமே சிறுநீர் மூலமாக வெளியேற்றப் படுகின்றன.
சிறுநீர் நீண்ட நேரம் வெளியேறாமல் சிறுநீர்ப் பையில் தங்கியிருப்பதால், இதிலுள்ள தாதுப் பொருட்கள் ஒன்று சேர்ந்து சிறு, சிறு கற்களாகும் வாய்ப்பு உள்ளது. புரோட்டின் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவுகளை உட்கொள்வதால் சிறுநீர்ப் பையினில் கற்கள் உருவாகுகின்றன. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு அவர் தம் உடற்கூறே காரணம் எனலாம்.
அரியானா மாநிலத்தில் ஏழை மக்களை ஏமாற்றி, சிறுநீரக மோசடி செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்த டாக்டர் அமித்குமார் நேபாளத்தில் பிடிபட்டார். அவரிடமிருந்து 18,900 அமெரிக்க டாலரும், 1,45,000 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்.
உத்தரப் பிரதேசத்தில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு. திருடியவர்களில் பெண் மருத்துவர் சபானா கைது; மற்றொரு மருத்துவர் கம்ரானை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். பல கோடி ரூபாய் சிறுநீரக மோசடி செய்த அரியானா டாக்டர் அமித்குமாருக்கு உதவிய செவிலியர் லிண்டாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
அரியானா மாநிலத்தில் குர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட டாக்டர் உபேந்திராவை பிப்ரவரி 2008ல் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரை விடுவிக்க ரூ.19 லட்சம் கையூட்டு (இலஞ்சம்) தருமாறு கோரினர். இதையடுத்து அந்தக் குற்றவாளியின் கார் டிரைவர் அப்பணத்தைப் போலீசாருக்கு அளித்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்தர்சிங்கும் இதர ஆறு போலீசாரும் அந்தக் குற்றவாளியை எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.
இந்த ரகசியம் அம்பலமானவுடன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் ஆறு போலீசாரையும் தேடி வருகின்றனர்.
மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்து வன :- 1. உயிர் வாழ சிறுநீரகத்தின் முக்கியத்துவம்
2. மாற்றுச் சிகிச்சைக்கு தேவை 1000 சிறுநீரகங்கள் எனில், நன்கொடைகள் மூலம் கிடைப்பது 400 சிறுநீரகங்கள்.
3.பற்றாக்குறையைப் பயன்படுத்தி சம்பல்வெளிக் கொள்ளையர்களைப் போல, மருத்துவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு கோடிகள் பல குவிப்பது.
4. திருட்டு மருத்துவர்களிடம், காவல்துறை இலட்சக் கணக்கில் கையூட்டுப் (இலஞ்சம்) பெறுவது.
எனவே, மாணவர்களே நீங்கள் உங்கள் சிறுநீரகங்களைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதோடு, நீங்கள் உங்கள் சிறு நீரகங்களைப் பழுதின்றிப் பேணிக் காத்திடவும் வேண்டும். அதற்கு,
1. சிறுநீரை அதிக நேரம் சிறுநீர் பையில் தேங்கி இருக்க அனுமதிக்கக் கூடாது.
2. ஒரு நாளைக்கு 4-5 லிட்டர் சுத்தமான நீரை குடிக்க வேண்டும்.
3. புரோட்டின் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவைத் தவிர்ப்பது.
உடல் நலமாக இயங்க. சிறுநீரகங்களை கண்ணெனப் போற்றிப் பாதுகாப்போமா?