மனித இன வரலாறு-44

உயர்குடிவீரன்

- மு.நீ.சிவராசன்

கி.பி. 1066இல் வடக்கு ஃபிரான்ஸ்ஸில் அமைந்துள்ள நார்மண்டி என்ற பகுதியின் மன்னர் டியூக் வில்லியம் என்பார் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். அவர் தம்முடன் குதிரைப்படை வீரர்களை அழைத்து வந்தார். அவர்கள் நைட்ஸ் (Knights) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டனர். அச்சொல்லுக்குப் பணியாளர் என்று பொருள்.

அக்காலத்தில் அய்ரோப்பாவில் நிலவி வந்த பிரபுத்துவ முறையில் பல படை வீரர்கள் பண்ணையில் குடியிருப்போராக ஆயினர்.

நாளாவட்டத்தில் அரசருக்கோ அல்லது ஒரு பிரபுவுக்கோ தொண்டு செய்யும் குதிரைப்படை வீரர் நைட் என்று அழைக்கப்பட்டார்.

மதிப்பு மிக்க இப்படைத் துறை பதவியாளர்கள் (நைட்ஸ்) ஒரு தனிப் பிரிவாக ஆயினர். அவர்கள் பிரபுக்களை விடச் சற்று தாழ்ந்த நிலையிலும், வாணிபம் செய்வோர், கைத்தொழில் வினைஞர்களை விட உயர்வாகவும் வைத்து எண்ணப்பட்டனர்.

இவர்களுக்குத் தனியாகச் சட்ட திட்டங்கள் உண்டு. சமூகத்தில் நலிந் தோரைப் பாதுகாப்பதே இவர்களின் வாழ்வின் நோக்கம். உயர்குடி வீரனாக ஆகும் முறை

நைட்ஸ்களாக விரும்பும் இளைஞர்கள் முதலில் பல ஆண்டுகள் ஓர் உயர்குடி வீரனிடம் வேலைக்கார சிறுவனாகப் பணியாற்ற வேண்டும்.

பின்னர் அவர் சிறிய நிலக்கிழாராக ஓர் உயர்குடி வீரனின் தனி உதவியாளராகப் பணியாற்றுவார். அவர் தன் எஜமானோடு போர்க்களம் சென்று பயிற்சி பெறுவார்.

இறுதியில் அவருக்குத் தனியான ஒரு சடங்கில் வாளின் முனையில் தோளைத் தட்டி உயர் குடிவீரன் என்ற பட்டம் வழங்கப்படும்.

ஓர் உயர் குடிவீரனின் முக்கியமான ஆயுதம் ஈட்டி. பிற குதிரைப்படை வீரர்களைக் கீழே வீழ்த்த அது பயன்படுத்தப்படும். வாள், தண்டாயுதம் மற்றும் கோடரி போன்றவை அவர்களின் பிற படைக்கலங்கள் ஆகும்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008