நாத்திகராமன் கதைகள்

இனிக்கும்... பிடிக்கும்...

நாத்திகராமன் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அந்த இடத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவினர் ஒரு நிகழ்ச்சிக்காக, பயணிகளிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சூட்டிகையான ஒரு பெண் கையில் மைக்-கை பிடித்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் உங்களுக்கு எந்தக் கடவுள் பிடிக்கும் என்று கேட்டு, அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப ஏதோ ஒரு கடவுள் கற்பனையை தங்களுக்குப் பிடித்ததாகக் கூறவும், அவ்வாறு பிடித்திருப்பதாக சொல்வதற்கான காரணத்தையும் கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

இதைப்பார்த்த நாத்திகராமன் உலகத்தில் ரொம்ப முக்கியமான பிரச்சினை என்று தலையிலடித்துக்கொண்டு இங்கே அந்த இடத்தில் தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் நாத்திகனான தன்னிடமும் இதே கேள்வியை கேட்டு வம்பிழுப்பார்களோ என்று நினைத்து மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகரத் தொடங்கினான்.

பேட்டி எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண், நாத்திகராமன் அந்த கூட்டத்திலிருந்து நழுவுவதைப் பார்த்து, அவனை விடாமல் வழிமறித்துக்கொண்டாள். நாத்திகராமனிடமும் அதே கேள்வியை கேட்டாள். நாத்திகராமன் எந்தத் தர்மசங்கடமான நிலை ஏற்படக்கூடாது என்று நினைத்தானோ அது நடந்தே விட்டது.

மற்றவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நாத்திகராமனிடமும் அந்த இளம்பெண் கேட்டாள். இராமன் தான் ஒரு நாத்திகன் என்றும் தனக்கு இந்தப் பொய்யான கடவுள் கொள்கைகளில் நம்பிக்கையில்லை என்றும் தெளிவாகச் சொன்னதற்குப் பின்னரும் அந்தப்பெண் விடாப்பிடியாக இந்தக் கேள்விக்கு இராமனிடமிருந்து பதில் பெற்றுவிடவேண்டும் என்று ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

கடைசியாக நீங்கள் எப்போதிருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டாள். அதற்கு இராமன், எனது சித்தப்பா, தந்தை பெரியார் கருத்துகளை அறிமுகம் செய்ததிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னான்.

உடன் அந்தபெண், அதற்கு முன்னாள் கடவுள் நம்பிக்கை உடையவராகத்தானே இருந்திருப்பீர்கள், அப்போது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று ஒன்று இருந்திருக்குமே அதைச் சொல்லுங்கள் என்று மடக்கினாள்.

சற்றே யோசித்த இராமன், நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது எங்கள் வீட்டில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மட்டுமே கொண்டாடுவோம். அன்றைய தினம் பொங்கலிட்டு பல்வேறு வகையான காய்கனிகளையும் சூரியனுக்குப் படைத்துப் வழிபடுவார்கள். அந்தப் படைப்பில் ஒரு அச்சு வெல்லத்தை வைத்து அதற்குப் பொட்டிட்டு, சிறிய பூ வைத்து வெல்லப் பிள்ளையார் என்று சொல்வார்கள். அதைத்தான் எனக்குப் பிடிக்கும் என்று கூறினான்.

உடனே பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண் நாத்திகனான இராமனிடமிருந்தே தனது கேள்விக்கு பதில் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில், ஏன் அந்தக் கடவுளைப் பிடிக்கும் என்று தொடர்ந்து கேட்டாள்.

அந்த வெல்லக்கட்டியைத் தின்றால் இனிக்கும், அதனால் எனக்குப் பிடிக்கும் என்று இராமன் கூறியதைக் கேட்டு சுற்றி நின்ற அனைவரும் சிரித்தார்கள்.

- ச. கந்தசாமி, அருப்புக்கோட்டை

Archives

?பெரியார் பிஞ்சு

2008