எடை எந்திரம்

நாத்திக இராமனும், அவனது நண்பர்கள் சிலரும் வெளியூர் செல்வதற்காக ரயில் நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு அருகேயே ஓர் எடைபார்க்கும் எந்திரம் இருந்தது.

நண்பர்கள் ஒவ்வொருவராக அதில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தி தங்கள் எடையை சோதித்துக்கொண்டார்கள். அவர்கள் எடையை சோதித்தறிந்து கொண்டதைவிட மிக ஆர்வமாக அதில் குறிப்பிட்டிருந்த அதிர்ஷ்ட மொழியை அறிந்து கொள்வதில் குறியாக இருந்தார்கள்.

அந்தச் சின்ன அட்டையில் குறிப்பிட்டிருந்த அதிர்ஷ்ட வாக்கியம் தங்களுக்கு மிகவும் ஒத்து வருவதாக ஒவ்வொருவரும் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே கவனிக்காததுபோல நாத்திக இராமன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்பன் நாத்திக இராமனை வம்புக்கிழுத்து அவனது அதிர்ஷ்டத்தை சோதனை செய்யுமாறு கையைப் பிடித்து இழுத்தான்.

நாத்திக இராமன் தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று சொல்லிப்பார்த்தும் அவர்கள் விடுவதாக இல்லை. கண்டிப்பாக நாத்திக இராமனின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்தே ஆக வேண்டும் என்று விடாப் பிடியாகச் சொன்னார்கள்.

பொறுத்துப்பார்த்த நாத்திக இராமன் இறுதியில் வாருங்கள் பார்க்கலாம் என்று இயந் திரத்தின் அருகில் சென்றான். ஆனால், இயந் திரத்தில் அவன் ஏறி நிற்பதற்குப் பதிலாக அருகிலிருந்த அவர்களின் சுமைகளில் ஒன்றை எடுத்து வைத்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை இயந்திரத்திற்குள் செலுத்தினான்.

அந்தச் சுமையின் எடையைக் காட்டிய துடன் அதில் இவ்வாறு அச்சிட்டிருந்தது,. நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தினால் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிலையில் இருக்கின்றீர்கள்.

இந்த வாக்கியத்தை நாத்திக இராமன் உரக்க வாசித்ததும் அவ்வளவு நேரம் கேலி பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் வாயடைத்துப் போனதுடன் தங்கள் செயலுக்காக நாணம் கொண்டு சிரித்துக் கொண்டார்கள்.

நாத்திக இராமன் சொன்னான்: இந்த இயந்திரத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அட்டைகளில் மனிதர்களுக்குப் பொதுவாகப் பொருந்தி வரக்கூடிய வாக்கியங்களைத்தான் அச்சிட்டு வைத்திருக்கின்றார்கள். எந்த நபரும் தனது எடையை ஒருமுறை மட்டுமே சோதித்து அறிந்து கொள்வான். நீங்கள் வேண்டு மென்றால் பத்து ரூபாய் நாணயங்களை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக இந்த எந்திரத்தில் செலுத்தி சோதித்துப் பாருங்கள். இந்த இயந்திரம் மூலம் செய்யப் படும் மோசடியைப் புரிந்துகொள்வீர்கள். மேலும் திருஷ்டம், திருஷ்டி என்றால் வடமொழியில் பார்வை என்று பொருள். அதிர்ஷ்டம் என்றால் குருட்டுத் தன்மை என்று பொருள். உங்களது குருட்டுத்தனத்தைப் புரிந்துகொண்டு உங்களை ஏமாற்றவே இந்த ஏற்பாடு என்று விளக்கினான்.

- ச. கந்தசாமி, அருப்புக்கோட்டை

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008