உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் - 23
பேரரசர் அகஸ்டஸ் சீசர்

கு.வெ.கி.ஆசான்

ஓர் ஆண்டிற்கு உரிய மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஜீலை, ஆகஸ்ட் என்பவை ஏழாவது, எட்டாவது மாதங்கள். அவற்றில் ஒன்று ஜுலியஸ் சீசர் பெயரிலும், மற்றொன்று அகஸ்டஸ் சீசர் பெயரிலும் அமைந்தவை. பண்டைக் காலத்தில் ரோம் பேரரசை நிறுவியதில் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஜுலியசின் ஒன்றுவிட்ட பேரன்

அகஸ்டஸ் என்பது பட்டப்பெயர். அவருடைய இயற்பெயர் ஆக்டேவியன். சீசர் என்பது குடும்பப் பெயர். ஜுலியஸ் சீசருக்கு ஆண் வாரிசு இல்லை. ஆகையால், தம்முடைய அண்ணாரின் மகள் வழிப் பேரனாகிய ஆக்டேவியனைத் தமது மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். போரை நடத்துதல், மற்றும் நிருவாகம் செய்தல் முதலியவற்றில், ஒன்றுவிட்ட பேரனாகிய ஆக்டேவியனுக்கு ஜுலியஸ் சீசர் தகுந்த பயிற்சி அளித்தார்.

கி.மு.63 இல் பிறந்து, கி.பி.14 இல் மறைந்த அகஸ்டஸ் எனும் ஆக்டேவியன் 77 ஆண்டுகள் வாழ்ந்தார்.வாழ்நாளில், கி.மு.29 முதல் கி.பி.14 வரை, 43 ஆண்டுகள் ரோம் பேரரசைத் திறம்பட ஆட்சி செய்து புகழ் பெற்றார்.

உள்நாட்டுப் போர்

ஆக்டேவியன் தொல்லைகள் பலவற்றைக் கடந்து ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது. அவருடைய ஒன்றுவிட்ட பாட்டனாராகிய ஜுலியஸ் சீசர், கி.மு.44 மார்ச் 15_இல் கொல்லப்பட்டார். அதை அடுத்து உள்நாட்டுப் போர் மூண்டது. புரூடஸ், கேசியஸ் முதலிய சதிகாரர்கள் ஒரு புறமும், மார்க் ஏன்டனி, ஆக்டேவியன் முதலியோர் மறுபுறமும் இருந்து போரிட்டனர். ஃபிலிப்பி என்ற இடத்தில் நடந்த போரில், சதிகாரர்கள் தோற்றனர், இறந்தனர். ஏன்டனி, ஆக்டேவியன், ஆகியோருடன் லெபிடஸ் என்பவரும் இணைந்து மூவர் ஆட்சி ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்பு, மார்க் ஏன்டனியும் ஆக்டேவியனும் ஆட்சிப் பகுதி-களைப் பிரித்துக்கொண்டனர். கிழக்குப் பகுதியை ஏன்டனியும், மேற்குப் பகுதியை ஆக்டேவியனும் ஆண்டனர். பேரரசின் தென் கிழக்குப் பகுதியாக எகிப்து இருந்தது. கிளியோபாட்ரா என்ற அழகி அதன் அரசி, அவளுடைய மய்யலில் முன்பு ஜுலியஸ் சீசர் மயங்கியதைப் போன்றே, ஏன்டனியும் மயங்கினார்; ஆட்சிப் பொறுப்பில் தவறினார்.

ஆக்டேவியன் இதற்கு மாறான இயல்பினர்; கட்டுப்பாடும், கடமையுணர்வும் மிக்கவர்; காலத்தை வீணாக்காமல், அதை வென்று நின்றவர். இதை வெளிப்படுத்தும் வகையில், தம்முடைய Antony and Cleopatra எனும் நாடகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஷேக்ஸ்பியர் அமைத்திருக்கிறார். கப்பல் ஒன்றில் கேளிக்கை விருந்து நடக்கிறது; மார்க் ஏன்டனி உள்ளிட்டோர் அதில் கலந்து மூழ்கியுள்ளனர். ஆக்டேவி-யன் மட்டும் தனித்த நிலையில் இருக்கிறார். கேளிக்கை விருந்துக்கு வருமாறு அவரை ஒருவர் அழைக்கிறார்: நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் (Be a Child of time), என வேண்டுகிறார். அதற்கு ஆக்டேவியன், காலத்தின் கைப்பிள்ளையாக மாட்டேன்; அதைக் கைக்குள் அடக்குவேன் (Possess it) என மறுமொழி கூறுகிறார்.

ஏன்டனியும் ஆக்டேவியனும் தவிர்க்க முடியாத வகையில் எதிரிகள் ஆகின்றனர். ஏக்டியம் என்ற இடத்தில் கி.மு.31 இல் அவர்-களுடைய கப்பற்படைகள் மோதுகின்றன. ஏன்டனியின் படை தோற்கிறது; அதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்குப் பின்பு கிளியோபாட்ராவும் தற்கொலைப் பாதையில் சென்று மறைகிறார்.

எதிர்ப்பில்லாத அதிகாரம்

ஜுலியஸ் சீசருக்கு முன்பு இருந்தே பல ஆண்டுக்காலம் ரோம் பேரரசு உள்நாட்டுப் போரினால் அலைக்கழிக்கப்பட்டது, மக்கள் மிகப் பெரும் இடர்களுக்கு ஆட்பட்டனர். ஆக்டேவி-யன் உறுதியான வகையில் ஆட்சிப் பீடம் ஏறினார்; அமைதியை ஏற்படுத்தினார். அவர் தன்னைச் சர்வாதிகாரி என்றோ, அரசர் என்றோ அறிவித்துக்கொள்ளவில்லை. குடியரசு முறைக்கு உரிய சட்டமன்றம், ஆட்சிமன்றம்(செனட்) ஆகிய-வற்றைக் கலைக்கவில்லை. அந்த மன்றங்களும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நடக்க-வில்லை. மக்கள் நலம் நாடிய மா மன்னர் போன்றே நடைமுறையில் அவர் ஆட்சி செய்தார். அவருக்கு அகஸ்டஸ்(பெருமிதமானவர்) என்ற பட்டத்தைச் செனட் சபை அளித்தது.

பொற்காலம்

பேரரசு மேலும் விரிவடைய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ந்து போர்களை நடத்துவதை அகஸ்டஸ் நிறுத்திக்கொண்டார். மேற்கில் அய்பீரியன் தீபகற்பம் (ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளைக் கொண்டது), வடக்கில் ரைன், மற்றும் டான்யூப் ஆறுகள், கிழக்கில் கருங்கடல், தென்-கிழக்கில் யூப்ரடிஸ் ஆறு, அரேபியா, தெற்கில் சகாரா பாலைவனம் ஆகியவை ரோம் பேரரசின் நிலையான எல்லைகள் ஆயின. அகஸ்டஸ் ஏற்-படுத்திய அமைதி 200 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ரோம் பேரரசின் மாநிலங்களில் நிருவாகம் சீர்பெற்றது, ஊழல் ஒழிந்தது, திறமை மிகுந்தது; சிறந்த சாலைகள் போடப்பட்டன.

நேர்த்தியான பலவகைக் கட்டடங்களால் ரோம் நகரம் அழகும் பொலிவும் பெற்றது. உழவும் தொழிலும் வாணிகமும் வளர்ந்தன; வாணிகத் தொடர்பு தமிழகம் வரை நீண்டது.

லத்தின் மொழி இலக்கியம் பொற்காலம் கண்டது. ஏனியஸ் எனும் வீரனின் சாகசங்களைக் கூறும் ஏனீத் என்ற காவியத்தை வெர்ஜில் படைத்-தார். ஹொரேஸ், மற்றும் ஓவிட் என்ற பெருங்-கவிஞர்கள் எழுதினர். லிவி எனும் வரலாற்றா-சிரியர் வாழ்ந்த காலமும் இதுவே.

ரோம் பேரரசின் கிழக்கு எல்லையில் இருந்த அதன் மாநிலம் பாலஸ்தீனம். அகஸ்டஸ் ஆண்ட காலத்தில், அங்கு பெத்லகாம் என்ற இடத்தில் உலகம் மறவாத ஒரு பெருமகன் பிறந்தார்; அவர் தாம் யேசு கிறிஸ்து!

Bookmark and Share

Archives


Warning: include(archive/2009/archive.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/pinju/public_html/2010/june/page05.php on line 115

Warning: include() [function.include]: Failed opening 'archive/2009/archive.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/pinju/public_html/2010/june/page05.php on line 115