Home
சனி, 20 ஏப்ரல் 2019
பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல்
Print E-mail

பொன்னூசல் எல்லோரும் ஆடுவமே - நல்ல

பொங்கற் புதுநாளைப் பாடுவோமே

தென்னாடு வாழிஎன் றாடுவமே - நல்ல

செம்பரிதி வாழிஎன் றாடுவமே!

- பொன்

கன்னடம் தெலுங்குமலை யாளம் துளுவம் - நல்ல

கன்னல்நிகர் செந்தமிழும் ஒன்றென்றே

மன்னிய திராவிடர்கள் எல்லோரும் - பிறர்

வந்தசைக்க ஒண்ணாத குன்றென்றே!

- பொன்

சந்தனப் பொதிகைமலை எங்கள் உடைமை - வெண்

சங்கெறியும் தென்குமரி எங்கள் உடைமை

வந்தசைக்க ஒண்ணாத மறவர் நிலம் - நல்ல

வங்கம்வரை எங்கள்நிலம் வாழிய என்றே!

- பொன்

முத்தெடுக்கும் மூன்றுகடல் நட்டநடுவில் - நல்ல

முல்லைமரு தம்குறிஞ்சி நெய்தல் கிடந்தே

மெத்தநலம் செய்திடும் திராவிடநிலம் - நன்கு

வெல்கவெல்க வெல்கவெல்க வெல்கஎனவே!

- பொன்

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பொங்கல் வாழ்த்துக் குவியல்

Share