மேழித் திருநாள்! | |||
|
மஞ்சுவும் பனியும் மூடும் மார்கழி பைய மறையும்! பஞ்சமும் பசியும் ஓடும் பாதையும் தையில் தெரியும்!
அஞ்சுதல் பகைமை போகி அனலிடை வெந்து மடியும்! நெஞ்சுரம் செயலில் வேகம் நிம்மதி வந்து படியும்!
நஞ்சையை உழுது வாழை நட்டசெந் நெல்லும் விளையும் இஞ்சியும் மஞ்ச ளோடு இட்ட செங் கன்னல் இளையும்!
செஞ்சுடர்க் கதிரும் வானில் சேர்ந்துள கங்குல் களையும்! பஞ்செனும் நுரையும் பானைப் பாலுடன் பொங்கி வழியும்!
துஞ்சிடாத் தொழிலாய் *மேழித் தொழிலதும் மண்ணில் திகழும்! வஞ்சனை அறியா ஞாலம் வணங்கியே என்றும் மகிழும்! தளவை இளங்குமரன், திருநெல்வேலி * மேழி = ஏர் கலப்பையின் ஒரு பகுதி.
|