Home கானக்குயிலும் கனராஜனும்
திங்கள், 28 மே 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
கானக்குயிலும் கனராஜனும்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கனராஜன் தன் ஓர் ஆண்டு தூக்கத்தைக் கலைத்தார். நிம்மதியான உறக்கம். யாரும் வந்து தொந்தரவு செய்யவில்லை. தன் தலையினை ஓட்டுக்குள் இருந்து வெளியே நீட்டினார். பொழுது புலர்ந்து இருந்தது. தன் முதுகு பாரமாக இருப்பதை உணர்ந்தார் கனராஜன். பெயருக்கு ஏற்றாற்ப்போல கனராஜன் கனமானவர். அவர்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆமைக்கும் முயலுக்கும் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆமையார்.

அவர் ஓடு பாரமாக இருந்ததற்கு காரணம் நம் கானக்குயில்தான். காட்டில் இருந்து நாட்டிற்குப் பறந்து சென்ற கானக்குயில் அங்கே அழகிய வீடுகளைப் பார்த்தது. ஏன் ஒரு கூட்டிற்குள் வாழணும், மனிதர்கள் வசிப்பதைப்போல ஏன் அழகான வீட்டினைக் கட்டக்கூடாது என நினைத்தது. காட்டிற்கு வந்தது. இடம் தேடியது. பெரிய தட்டையான பாறை ஒன்றினைத் தேர்வு செய்தது. மனிதர்கள் வசிப்பதைப் போலவே இரண்டு மாடி வீடுபோல குச்சிகளை வைத்துக் கட்டியது. மரத்தினால் செய்யப்பட்ட வீடுபோலவே அந்தக் கூடு இருந்தது. உள்ளே ஒரு படுக்கை அறை, முதல் மாடியில் ஓர் ஊஞ்சல் இருந்தது.

கனராஜன் எழுந்து நகர்ந்தபோதுதான் ஒன்று  தெரிந்தது. கானக்குயில் கட்டிய வீடு கனராஜனின் ஓட்டின் மீதுதான். அட இதுகூட நன்றாக இருக்கின்றதே என மகிழ்ந்தது கானக்குயில். தன் முதுகின் மீது என்ன இருக்கின்றது என அந்த பெரிய ஆமைக்குத் தெரியவில்லை. கானக்குயிலே அந்தச் செய்தியையும் கனராஜனிடம் கூறியது. கானக்குயில் அற்புதமாகப் பாடும் சிறப்பினைப் பெற்று இருந்தது. பல பல கடினமான பாடல்களையும் சுவரங்களையும்கூட எளிதாகப் பாடும் வல்லமை பெற்றிருந்தது.

கனராஜன் எழுந்து நடமாடிய சில நாட்களிலேயே இருவரும் நல்ல நண்பர்-களானார்கள். ஆமைக்குத் தேவையான பழங்களையும் விதவிதமான தழைகளையும் குயில் எடுத்து வந்தது. மழை வரும்போது வீடு நனையாமல் இருக்க பாதுகாப்பான மரத்தின் கீழ் நின்றுவிடும் கனராஜன். இரவில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே கனராஜனின் பழைய பராக்கிரமக் கதைகளையும், முயலை வென்ற கதையையும், அதன்பிறகு நடந்த சம்பவங்களையும் கேட்கும். கனராஜனுக்குத் தூக்கம் வரவில்லை-யெனில் கானக்குயிலைப் பாடச்சொல்லும்.

இப்படியாக மகிழ்வாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில் வந்தது ஒரு வினை. கானக்குயில் கனராஜனைத் தேடித் திரும்பியபோது அதன் முதுகில் வீடு சிதைந்து இருந்தது. என்னாச்சு என பதறியபடி விவரத்தைக் கேட்டது குயில். தன் தாத்தாவிடம் அறைகுறையாக முயல், ஆமை போட்டியினைக் கேட்ட முல்லன் என்ற முயல் கனராஜனிடம் வந்துள்ளது. தன் முப்பாட்டனை வென்ற கனராஜன் மீது கடும் கோபம் அந்த முயலுக்கு! கனராஜனைத் தாக்க முடியாமல் அதன் மீது இருந்த வீட்டினைக் கலைத்துவிட்டது. நாளை காலை மீண்டும் முயலுக்கும் ஆமைக்கும் போட்டி எனச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளது.

நிலைமையைப் புரிந்து கொண்டது கானக்குயில். “நாளைய போட்டிக்கு முதலில் தயாராவோம்’’ என கனராஜனை உற்சாகமூட்டியது. “நாளை நான் வழிநெடுகிலும் பாடிக்கொண்டே வருகின்றேன், அந்த உற்சாகத்தில் நீ வென்றுவிடலாம்’’ என்றது. போட்டி நடக்கும் இடத்திற்கு அனைவரும் வந்தனர். காட்டினை ஒரு சுற்று சுற்றிவந்து ஆரம்பித்த இடத்திலேயே முடிக்க வேண்டும். முயலின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். ஆமைக்கு என்று குயில் மட்டுமே. பலரும் கனராஜனை அன்றுதான் பார்க்கின்றனர்.

போட்டி ஆரம்பமானது. முயல் கடகடவென ஓடியது. ஆமை மெல்ல மெல்ல அடியெடுத்து வந்து நகர்ந்தது. குயில் பாடிப்பாடி அதனை உற்சாகப் படுத்தியது. இடையில் தண்ணீர் குடித்துவருகின்றேன் என்று சில நிமிடங்கள் மட்டுமே கனராஜனை விட்டு விலகி இருந்தது. கனராஜன் தோற்றாலும் எல்லை வரை முடித்திட வேண்டும் என்று தீர்க்கமாக முன்னேறியது. எப்படியும் முயல் எல்லையை பல மணி நேரம் முன்னரே முடித்திருக்கும் என நினைத்தது.

ஆனால் எல்லையை நெருங்கியபோது அங்கு முல்லனைக் காணவில்லை. ஓர் அடி எடுத்து வைத்தால் எல்லைக்கோடு. குயிலைப் பார்த்து, “எங்கே முல்லன்? வெற்றி பெற்று வீட்டிற்கு போய்விட்டதா?’’ எனக் கேட்டது. குயில் பதில் எதுவும் சொல்லவில்லை. “பறந்து சென்று எங்கே முல்லன் எனப் பார்த்துவிட்டு வா” என்றார் கனராஜன். குயில் தான் செய்த காரியத்தைக் கூறியது. “மன்னித்துவிடு நண்பா! நான் ஒரு தவறு செய்துவிட்டேன். தண்ணீர் தாகம் எடுக்க நீரைப்பருக சென்றபோது முயலும் அங்கே தண்ணீர் பருக வந்தது. நான் தூங்க வைக்கும் பாடல் ஒன்றினைப் பாடி முயலைத் தூங்க வைத்துவிட்டேன்” என்று வருந்தியது.

“அடடா... முல்லன் ஏற்கனவே கோபத்தில் இருக்கின்றான். இப்படிச் செய்துவிட்டாயே. போய் எழுப்பி வா காத்திருக்கின்றேன்” என்றது கனராஜன். குயில் முல்லனை பாட்டுப்பாடி எழுப்பி எல்லைக்கு அழைத்து வந்தது. “முல்லன் வா! இருவரும் ஒன்றாக எல்லைக் கோட்டினைத் தொடுவோம்” என இருவரும் ஒன்றாகக் கால்வைத்து இருவரும் வென்றனர். “என்னை மன்னித்து விடுங்கள் கனராஜா, மன்னித்து விடுங்கள்’’ என்றது முல்லன். முல்லனும் அவன் நண்பர்களும் சேர்ந்து கானக்குயிலுக்கு வீடு கட்டிக்கொடுத்தனர். அதன் பின்னர் கானக்குயிலின் மகிழ்வான பாடல் காடு முழுக்கக் கேட்டது. எல்லோரும் மகிழ்வாக வாழ்ந்து வந்தனர்.

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்