Home காரணமின்றி ஏற்காதீர்கள்!
சனி, 22 செப்டம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

- சிகரம்

போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் உண்டு, பேச்சிலும் உண்டு, எழுத்திலும் உண்டு, உணர்விலும் உண்டு.

ஆம், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் போலியானவையாக இருக்கும். எனவே, உண்மை எது, போலி எது என்பதைப் பெற்றோர், ஆசிரியர், பெரியவர்களிடம் கேட்டறிந்து எவை போலிகள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கு நலம் தரும் என்று சொல்லி பல கருத்துகளை வஞ்சகமாக உங்கள் உள்ளத்தில் ஏற்றுவார்கள். எனவே, எவர் சொன்னாலும் அது உண்மையா? சரியா? என்பதை நன்கு சிந்தித்தே ஏற்க வேண்டும். அதற்கு பெற்றோர், ஆசிரியர், பெரியோரிடம் நிறைய கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

வேப்பமரத்தில் பால் வடிவது கடவுள் சக்தி என்பர்; கோயிலில் தீ மிதிப்பது கடவுள் பக்தியால் என்பர்; உடலில் அலகுக் குத்திக் கொள்வது கடவுள் சக்தியால் என்பர்; இரவில் பேய் நடமாடும் வெளியில் செல்லக் கூடாது என்பர்.

நீ பிறந்த நேரம் சரியில்லை, உனக்குப் படிப்பு வராது என்பர்; அவன் உயர்ஜாதிக்காரன் அவனுக்குத்தான் நன்றாகப் படிப்பு வரும்; நீ கீழ் ஜாதிக்காரன் உனக்கு படிப்பு வராது என்பர்;

நீ கடவுளை நம்பி, அவரை தினம் வேண்டினால் உனக்கு படிப்பு வரும், பணம் சேரும், நோய் தீரும் என்பர்.

இப்படிப் பலச் செய்திகள் உங்களிடம் அன்றாடம் பலராலும் சொல்லப்படும். கோயில் விழா, ஊர்வலம், திருவிழா என்று பல கவர்ச்சிகள் மூலம் இக்கருத்துகளை உங்களிடம் பரப்புவர்.

இவற்றைப் பார்க்கும்போதும், சாமியார்கள், படித்தவர்கள், பெரிய மனிதர்கள் என்று பலரும் இவற்றை நம்புவதை நீங்கள் பார்க்கும்போதும், இவை உண்மையாகத் தானிருக்கும் என்று உங்கள் பிஞ்சு உள்ளம் நம்பும்.

எனவே, நீங்கள் இவையெல்லாம் சரியா? தப்பா? என்பதை அறிய, அவற்றைப் பற்றிய உண்மைகளை அறிவியல் அடிப்படையில் அறிய முற்பட வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய கேள்விகளைக் கேட்டு விடை காண வேண்டும்.

பொன் போலியா, உண்மையா என்று அறிய உரசிப் பார்ப்பார்கள். அப்படி கருத்துகளின் உண்மையறிய எதையும் பகுத்தறிவோடு ஆராய வேண்டும்.

எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.

கோயிலில் தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா?

கீழே கிடக்கும் ஒரு சிறு நெருப்பை மிதித்தால்கூட “சுரீர்” என்று சுடுகிறது. அப்படி இருக்க இறைவன் அருள் இல்லாமல் எப்படி தீ மிதிக்க முடியும்? எனவே, தீ மிதிப்பது இறைவன் அருளால்தான் என்று பலர் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு.

கோயிலில் தீ மிதிக்கின்றவர்களை அழைத்து ஒரே ஒரு நெருப்புத் துண்டை சாம்பல் நீக்காமல் தரையில் போட்டு மிதிக்கச் சொன்னால் எப்படிப்பட்ட பக்தனாய் இருந்தாலும் சுட்டுவிடும், கால் வெந்துவிடும்.

பின் ஏன் தீக்குழியில் இறங்கி நடக்கும்போது சுடுவதில்லை?

தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்கும். 2. நெருப்பில் நீறுபூத்த சாம்பல் நீக்கப்பட்டிருக்கும். 3. கால் ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து மாறி மாறி எடுத்து வைக்கப்படும் (விரைந்து நடப்பர்).

இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீ மிதிக்கப்படுகிறது.

சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் முறத்தால் அல்லது வேப்பிலையால் விசிறி சாம்பலை நீக்குவார்கள்.

மேடு பள்ளமான நெருப்பில் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.

ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. அதனால்தான் விரைந்து ஓடிக்கொண்டே யிருக்கிறார்கள்.

உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்து மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. ஆனால், ஒரே உள்ளங்கையில் சற்று நேரம் நெருப்பை வைத்திருந்தால் சுட்டுவிடும்.

அடுப்பில் சிதறி விழும் தணல் நெருப்பைப் பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால், சாம்பல் பூத்த நெருப்பைத் தொடமாட்டார்கள். தொட்டால் சுடுவது மட்டுமல்ல; கொப்பளித்து விடும். சுடுசாம்பல் பசை போல் ஒட்டிக் கொள்வதே அதற்குக் காரணம்.

ஆக, இக்காரணங்களால்தான் தீ மிதிக்கும்போது சுடுவதில்லையே தவிர மற்றபடி இறைவன் அருளால் அல்ல. ஒரே இடத்தில் நின்று எந்த பக்தனாலும் தீ மிதிக்க முடியாது. பழுக்கக் காய்ச்சிய செப்புத் தகட்டில் எந்த பக்தனும் நடக்க முடியாது!

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்