புதன், 17 ஜனவரி 2018
அன்பு மடல் 6
Print E-mail

சுகாதாரப் பொறியாளர்கள்

பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே,

என்ன பள்ளிகள் எல்லாம் திறந்து அங்கே வகுப்பிற்குப் போகத் துவங்கிவிட்டீர்களா?

பள்ளிப் பேருந்துகளிலோ, வேன்களிலோ ஏறிடும்போதோ, அமர்ந்து பயணம் செய்த பிறகு வீட்டிற்கு முன்பு இறங்கும்போதோ, மிகுந்த கவனத்துடன் சாலையின் இருபுறங்களையும் நின்று, நன்கு கவனித்து குறுக்கே சாலையைக் கடக்கலாம் என்று தெளிவான பின்னரே, வீட்டுக்குள் செல்லவேண்டும்.

கண்மண் தெரியாது அசுர வண்டி ஓட்டும் சில வாகன ஓட்டுநர்கள் எதிரே வரும் குழந்தைகளைக்கூட பார்க்கத் தவறும், பார்வையற்ற படுமோசமானவர்கள் சிலர்; அவர்களால் விபத்துக்கள் சர்வசாதாரணமாக நாளும் ஏற்பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் அதிலும் இளங்குருத்துகளும், தளிர்களும் பலியாவதைத் தொலைக்காட்சிகளில் காணும்போதோ, வானொலியில் கேட்கும்போதோ, செய்தித் தாள்களில் படிக்கும்போதோ நம் நெஞ்சமெல்லாம் பதை பதைக்கிறது!

எனவே, பள்ளி வாகனத்தில் செல்லும்போதும் சரி, ஏறி இறங்கும்போதும் சரி மிகுந்த கவனத்துடன் செல்லுங்கள் கண்மணிகளே! இணைய தளத்தில் ஒரு செய்தியை டாக்டர் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி படிக்கச் செய்தார்; நல்ல முத்துக்களையெல்லாம் இப்படி மூழ்கி எடுத்து எம்மைப் போன்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற பரந்த நோக்கில் அனுப்பி வைப்பார். அந்தச் செய்தி உங்களில் பலருக்கும் வியப்பாக இருக்குமே!

ஜப்பான் எவ்வளவு தொழிற்புரட்சியால் வளர்ந்த நாடு; உங்களுக்குத்தான் தெரியுமே! அதுமட்டுமா?

அடிக்கடி பூகம்பம்; ஆழிப்பேரலை என்கிற சுனாமி போன்ற சோகங்களும், ப்யூஷியுமா அணுஉலை போன்றவை வெடித்து பல மக்கள் உயிர், உடைமை, வாழ்வைப் பறிகொடுத்த நிலையிலும் மன உறுதியை கொஞ்சமும் இழக்காமல் பதற்றமின்றி அடுத்து வாழவேண்டிய நிலையில் செய்யும் கடமைபற்றி யோசிக்கும் பண்பாளர்கள்; பொறுமையின் சின்னம்!

நம்மை வரவேற்று வணக்கம் கூறும்போதுகூட மிகவும் குனிந்து அடக்கமாக மிகவும் பவ்வியமாக வணக்கம் தெரிவிப்பார்கள்; உரையாடலில்கூட மிகவும் ஓசை அதிகம் இல்லாது மெல்லிய குரலில்தான் - மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றுபோல இருக்கும் வண்ணம் பேசிடும் பழக்கம் உடையவர்கள்!

அந்த நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும், வகுப்பறைகளுக்கு அருகில் பள்ளியில் உள்ள கழிப்பறைகளை ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி கழுவி தூய்மைப்படுத்தும் தொண்டறப் பணியில் ஈடுபடுவதை வாடிக்கையான கடமையாகக் கொண்டு செய்துவிட்டே வீட்டிற்குத் திரும்புகின்றனராம்!

ஜப்பானில் கழிப்பறைகளில் மலம், சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் அளவுடன் பீச்சிக் கொண்டு மலங்கழித்த பகுதியை தானே தூய்மையாக்கிடும் தானியங்கி கழிவறைகள் (Auto Lavatories)  இருக்கின்றன என்பதையும் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதை, நானே சென்ற ஆண்டு அமெரிக்காவின் ரோட்அய்லாண்ட் (Rhode Island) மாநிலத்தில்  உள்ள மனிதநேய  மாண்பாளரான பிரபல மருத்துவ வல்லுநர் டாக்டர் திருஞானசம்பந்தம் அவர்களது இல்லத்தில் கண்டேன்; வியந்தேன்! அப்படி மாணவச் செல்வங்கள் கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தும்போது, ஆசிரியப் பெருமக்களும் உடனிருக்கிறார்கள்.

1. இப்படிச் செய்வதன்மூலம் எங்கும் எதையும் தான் பயன்படுத்துபவைகளைத் தூய்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உள் உணர்வு அக்குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலேயே உள்ளத்தில் ஊற ஆரம்பித்து, வாழ்க்கையை செம்மையாக செதுக்கிடத் துணை நிற்கிறது என்பது ஒருபுறம்.

2. வள்ளுவர் குறளில் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள்)

என்பதில் இந்த இந்த செயல்கள் தொழில்களாக்கப் பட்டதோடு, இழிவான தொழில் என்று முத்திரை குத்தப்பட்டு, இழிஜாதிகளாகவே அந்த மலம் எடுக்கும் நம் தொழிலாளத் தோழர்களை, தோழியர்களை அருவருப்புக் குரியவர்களாக்கி ஒதுக்கி வைக்கும் சமூக இழிவு வேதனையானதல்லவா!

நம் வீட்டுக் கழிப்பறைகளை நாம் சுத்தம் செய்து கழுவுவது கேவலமா? இல்லையே!

அதுபோலத்தானே நமது பள்ளியில் அரை மணிநேரம் இப்படிப்பட்ட பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது மேலானது அல்லவா!

பிரியமுள்ள பேரன், பேத்திகளே அதுமட்டுமா?

மேலும் கேளுங்கள்... சொல்லுகிறேன்.

3. எந்த ஜப்பானில் குடிமகன் மகளாக இருப்பினும் அவர்கள் செல்ல நாய் வளர்த்தால், அதனை வெளியே நடைபயிற்சியின்போது அழைத்துச் சென்றால், ஒரு சிறிய பை ஒன்றைக் கையுடன் எடுத்துச் சென்று, அது இடையில் பாதையில் மலங்கழித்தால் அதனை எடுத்து வாரி, இந்தப் பைக்குள் வைத்துக்கொண்டு வந்து, எங்கு கொட்டி அழிக்கவேண்டுமோ அங்குதான் செய்வார்களாம்!

அவ்வளவு தூய்மை உணர்வு பராமரிக்கப்படுவதால் அந்த நாடு மிகவும் ஆரோக்கியமான நாடாகத் திகழ ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பைச் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொண்டுள்ளார்களே, இது எவ்வளவு சிறப்பு பார்த்தீர்களா!

4. நம் நாட்டில் துப்புரவுத் தொழிலாளியை ஜாதிப் பட்டம் கூறி கேவலமாகப் பேசுகிறோமே, ஒதுக்குகிறோமே அதுபோலவா அங்கு?
எதிர்மாறான - மனிதநேய - நாகரிகமும், பண்பும் பொங்கிடும் வண்ணம் அந்தப் பணிபுரிவோரை சுகாதார இஞ்சினியர்கள்  (Health Engineers) என்று அழைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு ஊதியமும்கூட மிகவும் அதிகம்; 5000 அமெரிக்க டாலர்கள் முதல் 8000 அமெரிக்க டாலர்களை ஒரு மாதச் சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.

ஒரு டாலர் இப்போது 58 ரூபாய் இதைப் பெருக்கிப் பாருங்கள்

58 x 5000 = 2,90,000 சுமார் மூன்று லட்சம்
58 x 8000 = 4,64,000 சுமார் 4.6 லட்சம்

என்ன மயக்கம் வருகிறதா?

அமெரிக்காவில்கூட துப்புரவுத் தொழிலாளர்த் தோழர்களுக்கு ஊதியம் அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இதைப்பற்றி அடுத்த பிஞ்சு இதழில் மேலும் பலசுவையான செய்திகளைக் கூறுவேன்.

சந்திப்போமா? படிப்பைவிட இப்படி பண்பைக் கற்றிட, பழகிட வேண்டும் பிள்ளைகளே!

பிரியமுள்ள,
தாத்தா

Share