புதன், 17 ஜனவரி 2018
நிலவுலகின் விண்மீன் சிசிலியா பெய்ன் (CECILIA PAYNE 1890-1979)
Print E-mail

- சாரதாமணி ஆசான்

உலகிற்கு ஒளியைக் கொடுக்கும் ஞாயிறின் (சூரியன்) ஆற்றலையும் - அதன் குடும்பம் சார்ந்த விண்மீன்களின் அளவற்ற ஆற்றலையும் வியந்து போற்றாதார் எவரும் இலர். அப்பேராற்றலுக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து ஞாயிறும், விண்மீன்களும் எந்த மூலக்கூறுகளால் இயங்கிக் கொண்டுள்ளன என்பதை முதன்முதலில் உலகிற்கு வழங்கியவர்தான் சிசிலியா பெய்ன்.

வானவியல் துறையில் முதன்முதலில் டாக்டர் பட்டம் (Ph.D.) பெற்ற தலைசிறந்த ஆராய்ச்சியாளர் இவர். இவரது கண்டுபிடிப்பிற்குப் பின்னர் பலர் இத்துறையில் தொடர்ந்து பல முன்னேற்றங்களைத் தொட்டவண்ணம் உள்ளனர் என்பது இவரது கண்டுபிடிப்பிற்குக் கிடைத்த பெருமை ஆகும்.

பிறப்பும் படிப்பும்: 1900ஆம் அண்டு மே மாதம் 10ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் வென்டோவர் (Wendover) எனும் இடத்தில் சிசிலியா பிறந்தார். இவரது குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்களும், பெற்றோர்களும் இங்கிலாந்து நாட்டில் உள்ள நுண்அறிவாளர் பலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இந்த உண்மையை இவர்தம் பெற்றோருக்கு வந்த கடிதத் தொகுப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

அதில் முதன்மையானவர்களாக சார்லஸ் டார்வின் (Charles Darwin) மற்றும் புவியியல் உண்மைகளைக் கண்ட சார்லஸ் லையில் (Charles Lyell) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அறிவிற்கு மதிப்பளிக்கும் குடும்பமாக இவரது குடும்பம் அமைந்தமையால் சிசிலியா இளம் வயதிலேயே பல புதிய அறிவியல் சார்ந்த செய்திகளை அறிய வாய்ப்பாக அமைந்தது.

இத்தகு அடித்தளம் அமைக்கப் பெற்ற சூழலில் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை ஒருசேரக் கொண்டுள்ள பட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1923ஆம் ஆண்டு இவர் இப்பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்; எனினும் அக்காலத்தில் பெண்களுக்குப் பட்டம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், தமது தாய்நாட்டில் மேற்படிப்பு தொடர வாய்ப்பு அரிதாயிற்று.

விண்வெளியில் முனைவர் பட்டம்:-

இவர் பட்டப்படிப்பு பயிலும் காலத்தில் இயற்பியல் பாடத்திலும், குறிப்பாக விண்வெளித் துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதை உணர்ந்த இவரது கல்லூரிப் பேராசிரியர் எடிங்டன், (Arther Stanley Eddington) இவரது ஆர்வத்திற்கு ஏற்ற விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) தொடர வழிவகுத்தார்.

1924ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விண்வெளி (Astronomy) ஆராய்ச்சி முனைவர் படிப்பில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகாலத் தொடர் ஆராய்ச்சியின் முடிவாக ஸ்டெல்லார் அட்மாஸ்பியர் (Stellar Atmospheres) அதாவது விண்மீன் மண்டலம் பற்றிய ஆராய்ச்சிக்காக 1925ஆம் ஆண்டு முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். உலகிலேயே இத்துறையில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் இவரே.

தொடர் விண்வெளி ஆராய்ச்சி:_ இப்பட்டத்தைத் தொடர்ந்து, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விண்வெளி கூர்நோக்கு (Observatory) மய்யத்தில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். 1956ஆம் ஆண்டு விண்வெளித் துறையில் முதல் பெண் பேராசிரியராக இணைந்து பணியாற்றினார். பல அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்க வாய்ப்பாக இப்பணி அமைந்தது.

இளம் வயதிலிருந்தே இவருக்கு விண்மீன்கள் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தது. 1938ஆம் ஆண்டு விண்மீன்களின் வகைப்பாடுகள் பற்றிய  அரிய நூல் ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து (Galactic Structure) பால்வெளியின் அமைப்பு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார்.

அரிய கண்டுபிடிப்பும் பயனும்:-

ஒளிக்கதிர்களைத் தொடர்ந்து உமிழும் விண்மீன்களின் உட்கட்டமைப்பு ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஹீலியம் (Helium) என்னும் வாயுக்களால் ஆனவை என்று முதன்முதல் கண்டறிந்தார். பால்வெளியில் (Milky way) மிகுந்துள்ளதும் இந்த மெல்லிய தனிமங்கள்தான் என்பதை உணர்த்தினார். சூரியனின் மய்யத்தில் உள்ள ஹைட்ரஜன் கருக்கள் ஒன்றிணைவதால் ஹீலியம் உருவாகிறது.

இவ்வினையின்போது வெளிவரும் ஆற்றலே நம் கண்ணுக்குப் புலனாகும் ஒளியாகும். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் விண்மீன்களின் வகைப்பாடுகள் பற்றியும் - விண்மீன்களின் குடும்பங்கள் பற்றியும் இந்த அண்டத்தைப் (Universe) பற்றியும் தெளிவான முடிவுகளை எடுத்தனர்.

விண்வெளியில் உள்ள விண்மீன்கள் கணக்கற்றவை என்றும் பால்வெளியின் எல்லை முடிவில்லாதது என்றும் உணர்ந்தனர். ஓர் ஆராய்ச்சியாளர் ஓயாது உழைத்துக் கண்டுபிடிக்கும் உண்மைகளுக்கு என்றும் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பது சிசிலியாவின் விருப்பம்.

ஓர் ஆராய்ச்சி என்பது ஒருவரால் தனித்து நின்று செய்யக் கூடியது அல்ல என்பதும் - ஒரு ஆராய்ச்சியாளர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து வேறு ஒருவர் அதைப் பின்தொடர்ந்து பல அரிய உண்மைகளைக் காணமுடியும். சிசிலியா பெயின் அவர்களின் விண்வெளி ஆராய்ச்சிகள் ஒவ்வொருவரையும் எல்லையில்லா ஆராய்ச்சிகளுக்கும் - கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பது உறுதி.

Share