செவ்வாய், 12 டிசம்பர் 2017
சூழல் காப்போம்-13
Print E-mail

மிதிவண்டி இருக்கு புகை கக்கும் வாகனம் எதற்கு?

- பிஞ்சண்ணா

மிதிவண்டிகளின் நலன் பற்றிப் பேசும்போது, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பற்றிப் பேசினோமில்லையா? அது என்ன தெரியுமா?

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சைக்கிள் மயமாகிவிட்டது. பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே எங்கு சென்றாலும் மிதிவண்டியிலேயே செல்லலாம். நுழைவாயில் தொடங்கி முதன்மைக் கட்டடம், உள்ளரங்கம், தங்குமிடம் என ஆங்காங்கே மிதிவண்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.

பல்கலைக்கழகத்திற்குள் எங்கே தேவையோ அதுவரை பயன்படுத்திவிட்டு அங்கேயே வைத்துவிட்டுச் செல்லலாம். யாரும் எங்கிருக்கும் மிதிவண்டியையும் பயன்படுத்தலாம். ரொம்பவும் வசதியான ஏற்பாடு பல்கலைக்கழகம் முழுக்க உள்ளது. ஆசிரியர் தாத்தாதான் இதனைத் தொடங்கி வைத்தார்.

தூய்மையான காற்றுடன் பச்சைவெளியாக இருக்கும். பல்கலைக்கழகத்தின் தூய காற்றைச் சுவாசிக்கவும் இந்த மிதிவண்டிப் பயணம் பயன்படுகிறது. இதை நாம் நம்மிடங்களில் முயற்சிக்கலாமே!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஆசிரியர் தாத்தா துவக்கி வைத்த மிதிவண்டிப் பயணம்

உலகம் ழுழுக்க இன்று இது பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. லண்டனில் நூறு ஆண்டுகளுக்கு முன் குதிரை வண்டியில் செய்த பயணத்தைவிடக் குறைவான வேகத்தில்தான் இன்று போக்குவரத்து நடக்கிறதாம். காரணம், பல்கிப் பெருத்துவிட்ட வாகனங்கள். உலகம் முழுக்க இன்று 10 கோடிக் கார்கள் இருக்கின்றன. இதுவே 2050இல் 40 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தனை கார்கள் வந்தால் என்ன செய்வது?

அவை செல்வதற்கு இடம்? நிறுத்த இடம்? அவற்றின் புகை? வேகமாகச் செல்லக் கண்டுபிடித்த வசதிகளே வேகத்தைக் குறைத்துவிடுகின்றனவே!

கடந்த 2010 ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட ஒரு போக்குவரத்து நெருக்கடி எவ்வளவு தூரம் நீடித்தது தெரியுமா? 4 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டரல்ல! 100 கிலோ மீட்டர். அந்த நெரிசல் சரியாக 12 நாட்கள் ஆயின. இந்த நிலைமை ஒரு மாதிரி (Sample)தான். இதே வேகத்தில் கார்கள் பெருத்தால் நாளும் நடக்கப் போவது இதுதான். பிறகெதற்கு இத்தனை வாகனங்கள் என்று சிந்தித்தால் தீர்வு தானே வரும்!

இதுமட்டுமல்ல...

காற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்.

சர்க்கரை நோய், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்டவை பற்றிய பயத்தை நீக்கக்கூடியது.

ஓரிடத்தில் இறங்கி மாற வேண்டிய அவசியமோ, எங்கோ நிறுத்திவிட்டு நடக்க வேண்டிய அவசியமோ இல்லை. போக வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் சென்று நிறுத்தலாம்.

பெருநகரங்களின் போக்குவரத்து நெருக்கடிகளில் யாரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம் / காரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம்.

காப்போம்...

சூழல் காப்போம்-12

Share