செவ்வாய், 12 டிசம்பர் 2017
பிஞ்சுகளின் நெஞ்சு
Print E-mail

- சிகரம்

மனித உடலின் வளர்ச்சியைப் போலவே உள்ளத்தின் வளர்ச்சியும் வயது ஆகஆக முதிர்ச்சியடையக் கூடியது. நெஞ்சு என்பது இங்கு நெஞ்சாங்கூட்டைக் குறிப்பதல்ல; உள்ளத்தைக் குறிக்கிறது.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதில் நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிக்கும். நெஞ்சுக்கு நீதி என்பது கலைஞரின் தன் வரலாற்று நூல். அதிலும் நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறித்தே அமைகிறது.

உள்ளம் என்பது அறிவியல்படி மூளையையே குறிக்கும். உள்ளம் என்பது இதயம் என்று கொள்ளப்படுவது அறியாமை.  கல் நெஞ்சு, கல் இதயம் என்பதெல்லாம் உள்ளத்தைச் சுட்டுவன. உறுப்பைச் சுட்டுவன அல்ல.

மனதில் பதிய வை, உள்ளத்தில் பதிய வை, நெஞ்சில் பதிய வை, இதயத்தில் பதிய வை என்று எப்படிக் கூறினும் அது மூளையில் பதிய வை என்றே பொருள். நினைவுகள் மூளையில்தான் பதியப்படுகின்றன. அதனால்தான் மூளையில் அடிபட்டால் நினைவு மறக்கிறது. ஆக, உள்ளம் என்பது மனம் என்பது மூளை என்பதையே உண்மையில் குறிக்கிறது என்பதை பிஞ்சுகள் மூளையில் கொள்ள வேண்டும்.

இந்த உள்ளம் என்பது உடலைவிட போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். உடல், உள்ளம் இரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. உடல் கெட்டால் உள்ளம் கெடும். உள்ளம் கெட்டால் உடல் கெடும். எனவே, இரண்டும் ஒருசேரக் கெடாது நலத்துடன் காக்கப்பட வேண்டும்.

இளமையில் தரும் ஊட்டம் எப்படி வாழ்நாள் வரை உடலின் நலம் காக்கிறதோ அதேபோல், இளமையில் கொடுக்கப்படும் உள்ளத்திற்கான ஊட்டம் இறுதிவரை உள்ளத்தை நலமுடன் வைத்திருக்க உதவும்.

1.    பிஞ்சுகளின் உள்ளம் தனித்தன்மை வாய்ந்தது. அது எதையும் ஆழமாகப் பதிவு செய்யும் இயல்புடையது. எனவே, இளமையில் எவ்வளவு கற்கிறோமே அது இறுதிவரை நினைவில் நிற்கும். எனவேதான் இளமையில் கல் என்றனர்.

2.    இளமையில் பதியும் இயல்புகள் இறுதிவரை வரும். எனவே, நல்ல வழக்கம், நல்ல எண்ணம், நல்ல பேச்சு இவற்றை இளமையிலே கற்று பின்பற்ற வேண்டும்.

3.    இளமையில் பெறுகின்ற பயிற்சியும் இறுதிவரை ஆற்றல் தரும். எனவே, எல்லாத் திறனும், கலையும் இளமையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

4.    சூழ்நிலையால் பிஞ்சு உள்ளம் எளிதில் மாறும். உண்மையில் இயற்கையாய் பிஞ்சுகளின் உள்ளம் தூய்மையானது. சூது, வாது, கள்ளம், கபடம் இல்லாதது. அதில் ஏற்றப்படுபவை எளிதில் பதிந்துவிடும். மாற்றுவது கடினம்.

மழைநீர் தூய்மையாய் வருகிறது. ஆனால், அது கரிசல் மண்ணில் வீழ்ந்தால் கருப்பாகவும், சுண்ணாம்பு மண்ணில் வீழ்ந்தால் வெண்மையாகவும், செம்மண்ணில் விழுந்தால் சிவப்பாகவும் மாறுவதுபோல், சேருகின்ற, வளருகின்ற, பழகுகின்ற இடம், ஆள், சூழலைப் பொறுத்து பிஞ்சுகளின் உள்ளம் திரியும் (மாறும்). எனவே, இளமையில் நல்லவர்களுடன், நல்ல சூழலில், நல்ல பழக்கங்களையே கற்றுக் கொள்ள வேண்டும்.

5.    கவர்ச்சி நாட்டம் பிஞ்சுகளுக்கு மிகவும் அதிகம். குறிப்பாக, தீய வழக்கங்கள் எளிதில் கவரும். தீயவை எளிதில் பிடிக்கும். எனவே, கவர்ச்சி வழி நாட்டம் கொள்ளாது, எது நல்லது எது கெட்டது என்று பிஞ்சுப் பருவத்தில் பெரியோர் பயிற்றுவிக்க வேண்டும். பிள்ளைகளும் நல்லதையே ஏற்க வேண்டும்.

6.    வீரமும் கோழைத்தனமும் இளம் வயதில் ஏற்றப்படுவதைப் பொறுத்தே அமையும். மீனவப் பிள்ளைகள் எல்லோரும் கடலில் நீந்துவதுபோல, நகர்ப்புறத்துப் பிள்ளைகள் நீந்தாததற்குக் காரணம், இளம் வயதில் துணிவு ஏற்றப்படாததுதான். எனவே, தன்மானம், தன்னடக்கம், துணிவு, கருணை முதலியவை பிஞ்சு உள்ளத்திலே ஏற்றப்பட வேண்டும்.

தொண்டு செய்யப் பழக்கப்படுவதும், உதவி செய்யப் பழக்கப்படுவதும் பிஞ்சுப் பருவத்திலே நிகழ்த்தப்பட வேண்டும். இதில் ஒரு முதன்மையான கருத்தைப் பெரியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இளமையில் எல்லாம் ஏற்றப்படும் என்பதால் அளவிற்கு மீறி ஏற்றக் கூடாது. வயதுக்கு ஏற்றவாறு மெல்ல மெல்ல விரும்பிக் கற்குமாறு, விளையாட்டாய் கற்குமாறு, கசப்புக் கொள்ளாது பயிலுமாறு பயிற்றுவிக்க வேண்டும். ஆனால், தற்காலத்தில் பெற்றோர் பேராசையால் பிஞ்சுகளைக் கசக்கி, கருக்கி விடுகின்றனர். இது தவறு அல்ல, குற்றம்!

மூன்றரை வயதுக்குமுன் குழந்தைகளை விளையாட விடவேண்டும். விளையாட்டாக சுற்றுச் சூழலைச் சொல்லித்தர வேண்டும்.

Pre K.G. என்பது பித்தர்கள் செயல். 5 வயது வரை அடிப்படைக் கல்வி _ அடைக்கப்படாமல், விளையாட்டாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

5 வயதுக்கு மேல் அறிவுதரும் பல்துறைச் செய்திகளின் அடிப்படைச் செய்திகளைச் சொல்லித்தர வேண்டும். பிஞ்சுகளின் நெஞ்சு உறுதியுடன் உயர இவை போன்றவற்றை அறிந்து செயல்பட வேண்டும் பெரியவர்கள். பிஞ்சுகளும் புரிந்து நடக்க வேண்டும்.

Share