Home கோமாளி மாமா-4
சனி, 19 செப்டம்பர் 2020

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16 கே.பாண்டுரங்கன் பெரியார் பிஞ்சுகளே! அருமை நெஞ்சங்களே! மீண்டும் நம் நினைவுக்கு .... Coordinating Conjunctions = ஒத்துழைப்பு இணைப்புச... மேலும்
தைக்காத சட்டை! தைக்காத சட்டை! நெய்யும் எந்தத் துணியும் இல்லா நேர்த்தி யான சட்டை! மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே மிளிர்வ தான சட்டை!   பொய்யும் இல்லை புழுதி மண்ணும் ப... மேலும்
”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” ”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா” பெரியார் பிஞ்சுகளே... அடுத்த மாதம் நம் பெரியார் தாத்தா பிறந்தநாள் வருகிறது அல்லவா? அந்த இதழில் இடம்பெறும் வகையில், “எனக்குப் பிடித்த பெர... மேலும்
மெய் சொல்லல் மெய் சொல்லல் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி! மெய் சொல்லல் நல்லதப்பா! கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் - நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்... மேலும்
கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா? விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒருவரையும் காணோம். சரி குழந்தைக... மேலும்
கோமாளி மாமா-4
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஓவியம், கதை: மு.கலைவாணன்

விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர். கதை சொல்வதற்கு கோமாளி மாமாவும் வந்துவிட்டார். ஆனால், எப்போதும் நேரத்தோடு வரும் மல்லிகா மட்டும் வரவில்லை. எல்லோரும் மல்லிகாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வேகவேகமாக ஓடிவந்தாள் மல்லிகா.

“எப்பவும் சீக்கிரமா வர்ற நீ, இன்னைக்கு என் இவ்வளவு நேரம் கழிச்சு ஓடி வர்றே?’’ என்றார் கோமாளி.

“நான் வர்ற வழியில கண் பார்வை இல்லாத ஒருத்தர் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் போக தடுமாறிக்கிட்டு இருந்தாரு. அவர் கையப் புடிச்சு சாலையக் கடந்து அந்தப் பக்கம் கூட்டிப்போயி பஸ்ல ஏத்திட்டு வந்தேன். அவரு இதுக்கு முந்தின ஸ்டாப்பிங்கிலேயே இறங்கணுமாம்... எவ்வளவோ சத்தம் போட்டும் பஸ்சை ஸ்டாப்பிங்ல நிறுத்தாமக் கொண்டு வந்து இங்கே இறக்கி விட்டுட்டாங்களாம்... ரொம்ப தடுமாறிப் போயிட்டாரு... அவருக்கு உதவி செய்யப் போனதாலதான் இங்க வர நேரமாயிடுச்சு...’’ என்று மூச்சிறைக்கச் சொல்லி முடித்தாள் மல்லிகா.

“நல்லவேலை செய்தாய் மல்லிகா’’ என்றான் மாணிக்கம்.

“க்கூம்... கண் பார்வை இல்லாதவருன்னு தெரிஞ்சும் அவரைக் கொண்டு வந்து அடுத்த ஸ்டாப்பிங்ல இறக்கிவிட்டா எவ்வளவு சிரமம்... ச்சே இவங்கள்லாம் மனுசங்கதானா? இதுக்குத்தான் அடுத்தவங்களை நம்பக் கூடாதுன்னு சொல்றாங்க போல இருக்கு’’ என்றான் செல்வம்.

“அப்படி சொல்லிடாதே செல்வம். ஒரு மனுசன் தப்பு செய்தாலும் மல்லிகா மாதிரி ஒருத்தரால வழி காட்ட முடிஞ்சுது இல்லையா? அதனால ஒவ்வொரு மனிதனும் அடுத்த மனிதனை நம்பித்தான் வாழ வேண்டி இருக்கு. நமக்குப் பசிச்சா... சோறு வேணும். சோறு சமைக்க அரிசி வேணும். அரிசியை யாரோ எங்கேயோ பயிரிடணும். அதை ஒருத்தர் கடையில கொண்டு வந்து விக்கணும். அதை விலை கொடுத்து வாங்கி நாம சமைக்கணும்; சாப்பிடணும். இப்படி ஒவ்வொரு செயலுக்குப் பின்னாடி ஓராயிரம் மனிதர்கள் இருக்காங்க. அதனால கட்டாயம் அடுத்த மனிதனை நம்பணும் அடுத்தவங்களும் நம்பிக்கைக்கு உரியவங்களா வாழப் பழகணும்’’ என்றார் கோமாளி.

“மாமா நாங்க உங்களை நம்பி வந்திருக்கோம். நீங்க கதையைச் சொல்லுங்க மாமா’’ என்றான் மாணிக்கம். “மாவீரன் அலெக்சாண்டர் தெரியுமா?’’ எனக் கேட்டார் கோமாளி.

“போன வாரம் பாத்தேன் மாமா’’ என்றாள் மல்லிகா. பலமாகச் சிரித்தபடி மல்லிகாவைப் பார்த்து “அலெக்சாண்டர் இவங்க வீட்டுப் பக்கத்துல புதுசா குடிவந்திருக்காரு போல!’’

“செல்வம், என்னை முழுசா சொல்லவிடு... மாமா, போன வாரம் ஊருல இருந்து வந்த எங்க சித்தப்பா  இங்கிலீஷ் புத்தகம் ஒன்னு வச்சு இருந்தாரு. அதுல குதிரை மேலே கம்பீரமா கையில கத்தியோட அலெக்சாண்டர் உட்காந்திருக்கிற படத்தைப் பார்த்தேன்னு சொல்ல வந்தேன்’’ என்றாள் மல்லிகா.

“மாமா, நீங்க கதையைச் சொல்லுங்க மாமா’’ என ஆர்வமாய்க் கேட்டான் மாணிக்கம். “மாசிடோனியாவின் தலைநகர் பெல்லாவில் கி.மு.356இல் பிறந்தவரு அலெக்சாண்டர். அவருடைய அப்பா, மன்னர் இரண்டாம் ஃபிலிப் இறந்துட்டதுனால 20 வயதிலேயே கிரேக்க நாட்டின் மன்னர் ஆனாரு அலெக்சாண்டர். இருபது வயதிலே ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் அவருடைய வாழ்வும் ஆளுமையும் கம்பீரமானதா இருந்தது. அவர் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் நம்மள வியக்க வைக்குது. அவரு முப்பத்திரெண்டு வயசு வரையிலதான் வாழ்ந்தாரு. அதுல பதினோரு ஆண்டுகள் போரிலேயே ஈடுபட்டு இருந்தாரு. ஆனா ஒரு போருலகூட அவரு தோல்வி அடையல. அவரு நாடு புடிக்கிற ஆசையில பல நாடுகள் மீது படையெடுத்து வெற்றியும் பெற்றார். அவரு தோற்கடிச்ச பகைவர்கள்கிட்டகூட கருணையோட நடந்துக்கிட்டாரு. உலகின் மிகப் பெரிய தத்துவ ஞானிகளில் ஒருத்தரான அரிஸ்டாட்டில்தான் அவருடைய ஆசிரியர்.

மாவீரன் அலெக்சாண்டர் ஒரு முறை தன்னோட முப்பத்தி அய்யாயிரம் படைவீரர்களோட பாரசீக நாட்டுமேல படையெடுத்துப் போனாரு. ஆனா பாரசீக நாட்டில் உள்ள படை வீரர்கள் இதைவிட ரொம்ப அதிகம். அதனால படைகளோட போயி சிட்னிஸ் நதிக்கரையில தங்கிட்டாரு. அங்கே இருந்து நதியைக் கடந்து போயி எப்படி எப்படி தாக்கி நாட்டை கைப்பத்துறதுன்னு தன் தளபதிகளோட திட்டம் போட்டாரு. அந்த நேரத்துலெ அலெக்சாண்டருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. அவர்கூட வந்த கிரேக்க வைத்தியர்கள் அவரை சோதிச்சப் பார்த்தாங்க. அது விசித்திரமான காய்ச்சலா இருந்தது. “கிரேக்க நாட்டுச் சூழ்நிலை மாதிரி பாரசீக நாட்டுச் சூழ்நிலை இல்லை. அதனால இந்தக் காய்ச்சலுக்கு நம்மால சரியான மருந்து தயாரிச்சுத் தர முடியாது. பாரசீகத்து அரண்மனை வைத்தியர் வந்து மருந்து தந்தாதான் இது குணமாகும்னு சொல்லிட்டாங்க.’’ உடனேகூட வந்த தளபதிங்க கோவப்பட்டு, “படையெடுத்து வந்து எதிரி நாட்டிலயிருந்து வைத்தியரைக் கூட்டி வந்தா பெரிய ஆபத்தாச்சே’’ன்னு பதறுனாங்க.

பாரசீக வைத்தியரால் அலெக்சாண்டர் உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோன்னு பயந்து பாரசீக வைத்தியர் வேண்டாம்னு சொன்னாங்க.

“உயிருக்குப் பயந்தால் கிரேக்கத்து அரண்மனையிலேயே உல்லாசமாகப்படுத்து உறங்கி-யிருக்கலாமே? ஏன் நாம் பாரசீகத்தின் மீது படையெடுத்து வர வேண்டும்? தளபதிகளே! பாரசீகத்து அரண்மனை வைத்தியரை எப்படியாவது அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்! அப்படியே ஒற்றர்களை அனுப்பி உளவு பார்க்கச் சொல்லுங்க! பாரசீக வைத்தியர் என்னதான் செய்து விடுவார், பார்த்துவிடுவோம்னு...’’ கட்டளை போட்டாரு அலெக்சாண்டர். அப்படியே ஆகட்டும்னு அதற்கான ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்தாங்க.

பாரசீக வைத்தியரைத் தேடிக் கண்டு புடிச்சு கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க படைவீரர்கள். அவரு அலெக்சாண்டரைச் சோதிச்சுப் பார்த்துட்டு, “வேற ஒண்ணுமில்லே! இது இப்ப பாரசீகத்துல வந்திருக்கிற காய்ச்சல்தான். நோயின் தன்மையை நான் புரிஞ்சுக்கிட்டேன். அதற்கான மருந்தைத் தயார் செய்து நாளைக்குக் காலையில் கொண்டு வந்து தர்றேன். கவலை வேண்டாம்’’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. மறுநாள் விடிஞ்சுது. உடல்நலம் சரியில்லாத அலெக்சாண்டர் படுத்திருக்காரு. தளபதிகள் சில பேரு பக்கத்துல இருக்காங்க. பாரசீக வைத்தியர் வருவாருன்னு எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க. அப்ப கிரேக்கத்து ஒற்றன் கிட்டேயிருந்து ஒரு கடிதம் வந்திருக்குன்னு ஒரு வீரன் கொண்டு வந்து தளபதிகிட்டே தந்தான். அதுல என்ன எழுதியிருக்கு படிங்கன்னு சொன்னாரு அலெக்சாண்டர்.

தளபதி சத்தமா படிச்சாரு. “மாமன்னர் அலெக்சாண்டருக்கு வணக்கம். பாரசீக அரண்மனை வைத்தியர் தங்களுக்காக தயாரித்துக் கொண்டு வரும் மருந்தில் விஷம் கலந்திருக்கிறது. ஆகவே அதைக் குடிக்க வேண்டாம்.’’

கடிதத்தைப் படிச்சு முடிக்கும்போது பாரசீக வைத்தியர் மருந்தோட வந்து நின்னாரு.

“இதோ! வைத்தியர் வந்துவிட்டார். தளபதியாரே அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுங்கள். வைத்தியரே மருந்தை நீங்கள் என்னிடம் கொடுங்கள்னு சொல்லி மருந்தை வாங்கி அலெக்சாண்டர் குடிக்கிறாரு.

பாரசீக வைத்தியர் கடிதத்தைப் படிக்கிறாரு. எல்லாரும் அலெக்சாண்டரை ஆச்சரியமா பாத்தாங்க.

பாரசீக வைத்தியர் பதறிப் போயி, “என்மேல் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கையா’’ன்னு கேட்டாரு.

“இந்த மருந்தால் இந்த நோய் குணமாகும்னு நம்பித்தானே எனக்கு மருந்து கொடுத்தீங்க. அதே நம்பிக்கையிலதான் நானும் குடிச்சேன். நீங்க எனக்கு விஷத்தை கொடுத்திருந்தாலும் பிரச்சினை இல்லை. ‘நம்பிக் கெட்டான் அலெக்சாண்டர்’ என்று இந்த உலகம் ஒரு பாடத்தைக் கற்றிருக்கும். வைத்தியரே! நீங்கள் உயிர் காக்கும் தொழில் செய்பவர். அப்படிப்பட்ட நீர் என்னை நிச்சயம் காப்பாற்றுவீர் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்புவது எவ்வளவு அவசியம் என்பதை நாம் இருவரும் இந்த உலகத்துக்கு இப்போது காட்டியிருக்கிறோம்’’னு அலெக்சாண்டர் சொன்னாரு.

“அதுக்குப் பிறகு உடல் நலம் தேறி பாரசீக நாட்டை வென்றாரு மாவீரன் அலெக்சாண்டர்” என்று கதையைச் சொல்லி முடித்தார் கோமாளி மாமா. “அடடா... தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மத்தவங்களையும் எந்த அளவுக்கு நம்பணும்னு இப்ப புரிஞ்சுக்கிட்டோம் மாமா...”

என்றான் செல்வம்.

“அது மட்டுமல்ல; அடுத்தவங்களுடைய நம்பிக்கைக்கு உரியவங்களா நாம எப்படி வாழணும்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டோம்’’ என்றான் மாணிக்கம்.

“மாமா, நல்ல மனிதர்களா நம்பலாம். அதுக்காக மூடத்தனமா அறிவுக்குப் பொருந்தாத எதையும் நம்பக்கூடாதுன்னு கத்துக்கிட்டோம்’’ என்றாள் மல்லிகா.

- மீண்டும் வருவார் கோமாளி

Share
 

முந்தைய மாத இதழ்

ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை - 15 - கல்வி வளர்ச்சி நாள் சிரிப்புடன் முகத்தினில் சிறிதேனும் அறிவொளி சேர்ந்திடார்க் கிருப்பவை சீழுடைப் புண்கள்!   விருப்புடன் ... மேலும்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: உண்மையே மேன்மை! பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே, உங்களில் சிலரை பெரியார் பிஞ்சுகளுக்கான பரிசளிப்பு விழாவிலும், மாணவர்களுக்கான பழகு முகாம் நிகழ்விலும், கா... மேலும்
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15 கே.பாண்டுரங்கன் Correlative Conjunctions என்றால் என்ன? பெயரிலேயே தெரிகிறதே... Co(r)‘relative’ Conjuntions CO என்றால் “உடன்’’ Relative என்... மேலும்
இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி! மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்திய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென்... மேலும்
கோமாளி மாமா-7 : முடியும் கோமாளி மாமா-7 : முடியும் ஓவியம், கதை:மு.கலைவாணன் கோமாளி மாமா பூங்காவுக்குள் நுழையும் போதே கதை சொல்லும் மரத்தடியில் மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூன்று பேரும் இருப்ப... மேலும்