தைக்காத சட்டை!
| Print |
User Rating: / 0
PoorBest 

நெய்யும் எந்தத் துணியும் இல்லா

நேர்த்தி யான சட்டை!

மெய்யில் ஒன்றிப் பிறவி அன்றே

மிளிர்வ தான சட்டை!

 

பொய்யும் இல்லை புழுதி மண்ணும்

புரண்டி டாத சட்டை!

அய்யம் இல்லை சலவை செய்தும்

அணிந்தி டாத சட்டை!

 

வெய்யில் தன்னில் புழுங்கி வெந்தும்

வியர்க்க விடாச் சட்டை!

பெய்யும் வன்மைப் பனியில் நொந்தும்

பிணிக்க விடாச் சட்டை!

 

தொய்வும் இல்லை இறுக்கம் உள்ள

தோலில் ஆன சட்டை!

உய்யும் வண்ணம் இயற்கை தந்த

ஊழிக் காலச் சட்டை!

 

தையல் கலைஞர் தம்மிடம் சென்றும்

தைத்தி டாத சட்டை!

மையக் கொள்ளை மழையும் வந்து

நனைந்தி டாத சட்டை!

 

பையும் இல்லை எளிதில் எங்கும்

பார்த்தி டாத சட்டை!

கையும் இல்லை மறைவில் என்றும்

கழற்றும் பாம்புச் சட்டை!

- தளவை இளங்குமரன், இலஞ்சி

Share