அறிவு இயக்கம் காட்டிடு | ||||
|
தேர்தல் இங்கே தேடி வந்தது தேதி காட்டுது - அதில் தேர்வு பெற்ற கட்சிக் காரர் சேதி காட்டுது. பாடு பட்டோர் பாடம் கற்றுப் பார்த்துத் தேர்ந்தெடு - நமக்குப் பயன்கள் செய்யும் வேட்பா ளரை வார்த்துத் தேர்ந்தெடு.
மக்கள் ஆட்சி மலர்ந்து மணக்க மாண்பு காத்திடு - நீயும் மண்ணின் உரிமை காக்கும் கட்சி மதித்துப் போற்றிடு. அக்கம் பக்கம் பார்த்து நீயும் ஆய்ந்து கண்டிடு - உன்றன் அம்மா அப்பா வாக்கை வழங்க அறிவைக் காட்டிடு.
தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கும் தங்கம் தேர்ந்தெடு - நமக்குத் தமிழை, நாட்டைக் காத்துக் கொடுக்கும் தமிழரைத் தேர்ந்தெடு. பொய்யர் புரட்டர் புகுந்தி டாமல் பூட்டுப் போட்டிடு - இங்கு மெய்யர் வெற்றி பெற்று வந்திட மெய்வழி காட்டிடு. - தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன், தெற்குச் சோழபுரம்
|