Home நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!
செவ்வாய், 29 நவம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே நல்லவற்றைப் பதிக்க வேண்டும்; பழக்க வேண்டும்; பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

எனவே பிஞ்சுகள், பிஞ்சுப் பருவத்திலே நல்ல எண்ணங்களை, பழக்கங்களை, ஒழுக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படிப் பின்பற்ற எவை நல்லவை, எவை கெட்டவை, எவை சரி, எவை தப்பு; எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை இரண்டு வகைப்படும். ஒன்று, தங்கள் வாழ்வு செம்மையாய், உயர்வாய், பாராட்டும் வகையில் அமைய, பின்பற்ற வேண்டியவை; மற்றது, பிஞ்சுகளைச் சுற்றியுள்ளவர்-களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.


தங்களுடைய வாழ்வு சிறக்க பிஞ்சுகள் செய்ய வேண்டியவை:

தன்னம்பிக்கை: காரணம் இல்லாமல், அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள்தான் நம்மிடம் கூடாது. மாறாக, தன்னம்பிக்கை கட்டாயம் வேண்டும். நம்மால் முடியும், நமக்கும் எல்லாத் திறமையும் உண்டு என்று உறுதியாய் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை ஆழ் உள்ளத்தில் பதிந்துவிட்டாலே பாதி வெற்றி பிஞ்சுகளுக்குக் கிடைத்துவிட்டது என்று பொருள். எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு தோல்வி வந்தாலும் மனம் தளரவோ தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோ கூடாது.

படிக்கத் தொடங்கும் முன்பே எனக்கு கணிதம் வராது, ஆங்கிலம் புரியாது, வரலாறு தெரியா என்று  ஓர் எண்ணத்தை உள்ளத்தில் உண்டாக்கிக் கொள்வது மிகப் பெருந்தப்பு. எந்த ஒன்றும் வராது என்பது தப்பான எண்ணம். ஆர்வத்தோடு, விருப்பத்தோடும் படித்தால் எல்லா பாடமும் புரிய வரும். வெறுப்பு அல்லது விருப்பம் இன்றிக் கற்றால் அது கடினமாக இருக்கும். அவ்வளவே!

எந்த ஒன்றையும் கற்கத் தொடங்கும்போது அதை விருப்பத்தோடு கற்க வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு கற்க வேண்டும். கற்கும்போது ஏற்படும் அய்யங்களை ஆசிரியரிடம், பெற்றோரிடம், நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அய்யங்களை வைத்துக்கொண்டே மேற்கொண்டு படித்தால் அடுத்ததும் புரியாது. எனவே, அய்யமின்றிக் கற்றால் எந்த ஒன்றும் எளிமை. புரியவில்லையென்றால், தயங்காது, வெட்கப் படாது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிக் கற்றால் எல்லா பாடமும் நமக்கு எளிதில் புரிய வரும். எல்லா பாடங்களிலும் அறிவு பெறலாம்.

தொடர் முயற்சி: எந்தவொரு செயலிலும் வெற்றி பெற அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இடையில் முயற்சிக்காமல் விடுவது வெற்றியைப் பாதிக்கும். அன்றைக்குரிய பாடத்தை அன்றைக்கே படித்துவிட வேண்டும். நாளை படித்துக் கொள்ளலாம் என்று எண்ணக்கூடாது. நாளை என்பது நாளையும் தொடரும். அந்த மனநிலைதான் பிஞ்சுகளின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடை. பாடச்சுமையை ஏற்றிக் கொண்டே செல்லாமல், ஒவ்வொரு நாளும் படித்து முடித்தால் கற்றல் எளிதாகும்.

கவனச் சிதறல் கூடாது: எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும், புத்தகத்தைப் படிக்கும்போது அதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை கூடாது: தங்களைப் பற்றி ஆணவமும் கூடாது, தாழ்வும் கூடாது. நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை என்பதை நன்றாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் தாத்தா 95 வயதுவரை ஓயாது உழைத்ததும், ஆசிரியர் தாத்தாவும் 90 வயதிலும் சுறுசுறுப்பாய்ப் பல பணிகளைச் செய்வதும் தன்னம்பிக்கையின் அடித்தளத்தில்தான். அவர்களை உள்ளத்தில் கொண்டால், உங்களுக்கும் உற்சாகம் வரும், ஊக்கம் வரும். கருப்பாய் இருப்பது, குள்ளமாய் இருப்பது, உடலில் குறைபாடு இருப்பது தாழ்வு என்ற எண்ணம் வரக் கூடாது. எல்லா உறுப்புகளும் செயலிழந்த பின்பும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உலக சாதனை புரிந்தார்.

நல்லொழுக்கம்: கேடானவற்றை விலக்கி, நல்லதை ஏற்று வாழ்வதே நல்லொழுக்கம். திட்டமிட்டுச் செயலைச் செய்தல்; நிதானமாகப் பதட்டமின்றி செய்தல்; உரிய காலத்தே செய்தல், முறையாகச் செய்தல், முழு மனதோடு செய்தல் எல்லாம் நல்லொழுக்கத்தில் அடங்கும்.

பிறரிடம் பிஞ்சுகள் நடந்துகொள்ள வேண்டியது எப்படி?

பிறர் உணர்வுகளை மதித்தல்: நமக்குள்ளதைப் போலவே மற்றவர்க்கும் உணர்வு உண்டு, ஆசை உண்டு, விருப்பம் உண்டு என்பதைப் பிஞ்சுகள் புரிந்துகொள்ள வேண்டும். பிறரிடம் அன்பாக மரியாதையோடு, பாசத்தோடு பழக வேண்டும். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு உதவ வேண்டும்.

வெறுப்பு கூடாது: கருப்பாய் இருக்கிறார்கள் என்றோ, உடல் குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்றோ, அழகாய் இல்லை என்றோ பிறரை ஒதுக்குவதோ, வெறுப்பாய்ப் பார்ப்பதோ கூடாது.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’’ என்றார் வள்ளுவர். அறிஞர் அண்ணா குள்ளம், கருப்பு, ஆனால், அவரிடம்தான் அறிவு, ஆற்றல், ஆளுமைத்திறன், பேச்சாற்றல் எல்லாம் இருந்தன.

கருப்பாக இருப்பவர்கள்தான் அறிவும், உடல்  நலமும் அதிகம் உடையவராய் இருப்பர் என்று உடல் சார்ந்த அறிவியல் கூறுகிறது. எனவே, நிற வேற்றுமை கூடாது. கருப்பு, வெள்ளை என்னும் நிறபேதத்தை முற்றாக நம் மனதில் இருந்து துடைத்து எறிந்து விடவேண்டும்.

ஜாதி உணர்வு கூடாது: ஜாதி என்பது உயர்ஜாதியினரால் உண்டாக்கப்பட்ட சதி. பிறப்பால் எல்லோரும் சமம். உயர்வு தாழ்வு, இழிவு ஏதும் இல்லை. இதை பிஞ்சுகள் நெஞ்சில் பதித்துக்கொள்ள வேண்டும். நம்முடன் பழகுகின்றவர்களிடம் எந்த ஜாதி உணர்வும் வேற்றுமையும் இன்றி கூடிப் பழக வேண்டும். ஜாதி உணர்வு, பற்று என்பது எப்பருவத்திலும் நம்மிடையே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மத உணர்வு கூடாது: நான் இந்த மதம், அவன் அந்த மதம் அவள் இன்னொரு மதம் என்று பிரித்து அறியக் கூடாது. நாம் மனிதர், நாம் மாணவர், நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வை வளர்த்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கை கூடாது: கையில் கயிறு கட்டுதல், தாயத்து போடுதல், மதக்குறிகள் இடுதல் கூடாது. எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும், ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். அறிவுக்குச் சரி என்று பட்டால் மட்டுமே அதைச் செய்ய வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எந்த ஒன்றையும் விலக்க வேண்டும்.

Share
 

முந்தைய மாத இதழ்

நோயின்றி வாழ..! நோயின்றி வாழ..! அக்டோபர் 16 - உலக உணவு நாள் காலை உணவைத் தவிர்க்காதே; காபி தேநீர் அருந்தாதே!பாலை மட்டும் அருந்தியபின் பலகா ரத்தை உண்டிடுக!மதிய உணவில் காய்... மேலும்
குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER செப்டம்பர் 24, 25 ஆகிய நாட்களில் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டில், கனடாவின் ஆதிக்குடிகளின் பசிப... மேலும்
மறைந்த ஆபத்து மறைந்த ஆபத்து வசீகரன் சிறுத்தை ஒன்றின் காலில் பெரிய முள் தைத்துவிட்டது. சிறுத்தை வலியால் துடித்தது. காலை அசைக்கக்கூட அதனால் முடியவில்லை.அந்த வழியே இரு ... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு விடை: அடுத்த இதழில்... மேலும்
துணுக்குச்சீட்டு துணுக்குச்சீட்டு அபி உயரத்திலிருந்து ஒரு பூனை தடுமாறி, முதுகுப்பகுதி கீழ்நோக்கி இருக்குற மாதிரி விழுந்தாலும் அது சுழன்று பாதம் தரையில் படும்படி தான் விழும... மேலும்
கோமாளி மாமா-30 கோமாளி மாமா-30 மு.கலைவாணன் கோமாளி மாமா... விடுமுறை நாளில் தோட்டத்தில் சொல்லும் கதையைக் கேட்பதற்காக வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூன்று பேரும் சரியா... மேலும்