Home புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள்
செவ்வாய், 29 நவம்பர் 2022
Banner

தற்போதைய இதழ்

புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

யார் வரைந்த கோடுகள்

சரவணா ராஜேந்திரன்

கடந்த 60 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக இருப்பவை நாஸ்கா கோடுகள்.

தென் அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடற்கரைக்கு அருகே பெருநாட்டில் உள்ள பாலைவனத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பில் பெரிய அளவில் விலங்கு, பறவை, வித்தியாசமான மனித உருவங்கள் வரையப்பட்டது போல் காணப்படுகின்றன. இதையே நாஸ்கா கோடுகள் என்று அழைக்கின்றனர். இந்தக் கோடுகள்  நீண்ட காலமாகவே புதிராக உள்ளன. தட்டையான நிலப்பரப்பில் சுமார் 170 சதுர மைல் பரப்பளவில் விரவிக் கிடப்பதை தூரத்தில் இருந்து பார்க்கும்போது விசித்திரமான பல உருவங்களாகத் தெரிகின்றன. அவை ஆறு முதல் பன்னிரண்டு அடி அகலத்தில் உள்ளன. அமெரிக்காவில் முன்பு வாழ்ந்த நாஸ்கா என்னும் இனத்தாரால் இந்தக் கோடுகள் வரையப்பட்டதால் இது நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. இவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை ஆகும். இந்தக் கோடுகள் 30 மைல் தூரம் வரை உள்ளன.

1500களில் முதல்முறையாக இந்தக் கோடுகளைக் கண்ட பயணிகள் அவற்றை ஏதோ மேடு பள்ளமான சாலைகள் என நினைத்தனர், ஆனால், கடந்தகால நாகரிகத்தின் சிக்கலான கோடுகள் அவை என அவர்களுக்குத் தெரியவில்லை. 1927 வரையிலும்கூட இந்த நாஸ்கா கோடுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் பெரு நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரான டோரியியோ மெஜியா ஜெஸ்பே என்பவர் மலைகளின் வழியே சென்றுகொண்டிருந்தபோது மலை உச்சியில் இருந்து பெருவின் வறண்ட நிலப்பகுதியைப் பார்த்தார். உயரத்தில் இருந்து பார்த்தால்தான் நாஸ்கா கோடுகளில் உள்ள உருவங்கள் தெரியும். மலையில் இருந்து பார்த்ததால் டோரியியோவுக்கும் அந்த உருவங்கள் தெரிந்தன.

பாலைவனத்தில் இருக்கும் அந்தப் பள்ளங்கள் பண்டைய சாலைகளின் இடிபாடுகள் அல்ல; அவை திட்டமிடப்பட்டு வரையப்பட்டவை என அவர் தெரிந்துகொண்டார். அவை பூமியில் செதுக்கப்பட்ட சின்னங்கள் என்றும், தரை மட்டத்தில் இருந்து பார்த்தால் அவை பள்ளங்களாக மட்டுமே தெரியும் என்றும் அவருக்கு தெரிந்தது. இந்த நிகழ்வே நாஸ்கா கோடு குறித்து வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பமாக அமைந்தது. அடுத்த ஒரு நூற்றாண்டாக ஆய்வாளர்கள் உலகின் மிகவும் புதிராக உள்ள நாஸ்கா கோடுகளை ஆராயத் துவங்கினர்.

பெருவில் உள்ள ரியோ கிராண்டே டி நாஸ்கா நதி படுக்கையில், சிக்கலான வடிவமைப்புடன் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள் பற்றிக் கூறப்படும் கட்டுக்கதைகள் பிரபலமாக உள்ளன. “சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோடுகளை வரைந்த நாஸ்கா இன மக்கள் பறக்கும் சக்தி இல்லாமல் இவ்வளவு பெரிய கோடுகளை பொறித்து உருவங்களைப் பொறித்திருக்க முடியாது” என்றும், “மேல்நோக்கி உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே நாஸ்கா கோடுகளில் என்ன படம் வரையப்பட்டுள்ளது என்பதே தெரியும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, அவர்களுக்கு ஏலியன்கள் (வேற்றுக்கோள் உயிரினங்கள்) உதவி இருக்க வேண்டும். அவர்களின் உதவியோடுதான் நாஸ்கா இன மக்கள் இந்தக் கோடுகளை வரைந்திருக்க முடியும் என்றும், விண்வெளியில் இருந்து வரும் ஏலியன்களுக்குத் தெரிவதற்காகக்கூட அவை பெரிதாக வரையப்பட்டிருக்கலாம் என்றும் கதைக்கப்படுகிறது.

பூமிக்கு வேற்றுக்கோள்வாசிகள் வருகிறார்கள் என்ற செய்தி நமக்கு மிகவும் பிடிக்கலாம்.  ஆனால், அப்படி ஒன்று என்றுமே நடக்கப்போவது கிடையாது. நாஸ்கா கோடுகளில் அப்படியான எந்த ஒரு புதிரும் இல்லை. பிரமிடாக இருந்தாலும் நாஸ்கா கோடாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்க நம் முன்னோர்கள் தொழில்நுட்ப ரீதியாகவே கடினமான சாதனையைச் செய்துள்ளனர். ஆனால், அதை எப்படிச் செய்தார்கள் என்பதே வரலாற்றில் நெடு நாளைய கேள்வியாக உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட வானிலை காரணமாக நாஸ்கா கோடுகளில் உள்ள  பள்ளங்கள் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறியுள்ளன. இந்தப் பள்ளங்களின் அடியில் மஞ்சள் நிற மணல் காணப்படுகிறது. இந்த வண்ண வேறுபாடுகளே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் நாஸ்கா கோடுகளைத் தனித்துவமாகக் காட்டுகின்றன. அந்த வடிவமைப்புகளைச் சரியாக பூமியில் செதுக்க நாஸ்கா இனத்தினர் முதலில் அவற்றின் சிறிய மாதிரிகளைச் செய்து பார்த்து, பின்னர் கயிறுகளைப் பயன்படுத்தி அவற்றைப் பெரிய அளவில் செய்துள்ளனர்.

அதைச் சரிசெய்ய அவ்வப்போது மலைமீது ஏறி அந்தக் கோடுகள் சரியாக அமைந்துள்ளனவா என்று பார்த்துச் சரி செய்துள்ளனர். இந்தக் கோடுகள் ஏன் உருவாக்கப்பட்டன என்பதை  நேசனல் ஜியோகிராபிக் குழு 7 ஆண்டுகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அக்காலத்தில் இன்று உள்ளது போல் நாட்காட்டி கிடையாது, அக்காலத்தில் விவசாயம் மட்டுமே தொழில் ஆகும். பாலைவனங்களில் மிகவும் குறைவான மழையை அவர்கள் முன்னேற்பாட்டோடு பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பருவகாலங்களைக் கண்டுபிடிக்க சூரியனின் உதயத்தைக் கணக்கிட்டனர். எடுத்துக்காட்டாக வரையப்பட்டுள்ள தேன் சிட்டு உருவத்தின் வாய்ப்பகுதியில் சூரியன் உதித்தால் அறுவடை செய்யும் காலம் என்றும், சிலந்தி வலையில் கால்பகுதியில் சூரியன் உதித்தால் மழைவரும் காலம் என்றும், அதேபோல் காளான் போன்ற உருவத்தின் மத்தியில் சூரியன் உதித்தால் குளிர்காலம் துவங்கப் போகிறது, உணவுப் பொருள்களைச் சேகரித்து வைக்கவேண்டும் என்றும், குரங்கு உருவப் பகுதியில் சூரியன் உதித்தால் மழைக்காலம் துவங்கப்போகிறது என்றும் அறிந்துகொண்டனர். இந்த நாஸ்கா கோடுகள் அக்கால மாதங் காட்டிகளாகவும் பருவங் காட்டிகளாகவும் இருந்தன.

மற்றபடி வேற்றுக்கோள் மனிதர்கள், கடவுள் படைப்பு, விசித்திர மனிதர்கள், நீண்ட தலைமனிதர்கள் போன்றவை எல்லாம் கட்டுக் கதைகள் ஆகும். இந்தக் கட்டுக்கதைகள் அறிவியலின் துணையால் 600 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளன.<

Share
 

முந்தைய மாத இதழ்

நோயின்றி வாழ..! நோயின்றி வாழ..! அக்டோபர் 16 - உலக உணவு நாள் காலை உணவைத் தவிர்க்காதே; காபி தேநீர் அருந்தாதே!பாலை மட்டும் அருந்தியபின் பலகா ரத்தை உண்டிடுக!மதிய உணவில் காய்... மேலும்
குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER குழந்தைகளின் பசியைத் தீர்க்க KIDS AGAINST HUNGER செப்டம்பர் 24, 25 ஆகிய நாட்களில் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டில், கனடாவின் ஆதிக்குடிகளின் பசிப... மேலும்
மறைந்த ஆபத்து மறைந்த ஆபத்து வசீகரன் சிறுத்தை ஒன்றின் காலில் பெரிய முள் தைத்துவிட்டது. சிறுத்தை வலியால் துடித்தது. காலை அசைக்கக்கூட அதனால் முடியவில்லை.அந்த வழியே இரு ... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு விடை: அடுத்த இதழில்... மேலும்
துணுக்குச்சீட்டு துணுக்குச்சீட்டு அபி உயரத்திலிருந்து ஒரு பூனை தடுமாறி, முதுகுப்பகுதி கீழ்நோக்கி இருக்குற மாதிரி விழுந்தாலும் அது சுழன்று பாதம் தரையில் படும்படி தான் விழும... மேலும்
கோமாளி மாமா-30 கோமாளி மாமா-30 மு.கலைவாணன் கோமாளி மாமா... விடுமுறை நாளில் தோட்டத்தில் சொல்லும் கதையைக் கேட்பதற்காக வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூன்று பேரும் சரியா... மேலும்