Home முந்தைய இதழ்கள் 2020 மார்ச் 2020 பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு
சனி, 10 ஜூன் 2023
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. :மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!

சென்ற ‘பெரியார் பிஞ்சு’ இதழ் மூலம் உங்களையெல்லாம் சந்தித்து, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலாந்தில் அமெரிக்க மனிதநேய சுயமரியாதை மாநாடு எப்படி நடைபெற்றது-! மனிதநேயம் _ மனித உரிமைக்காக கருப்பின சகோதர, சகோதரிகளும் அமெரிக்காவில் எப்படியெல்லாம் அறவழியில் _ வைக்கத்தில் தந்தை பெரியார் தாத்தா, பாட்டி நாகம்மையார் ஆகியோர் எப்படி _ சத்தியாகிரகம் செய்தார்கள். கோயில்களைச் சுற்றியுள்ள சாலைகளில் நாயும், பன்றியும், கழுதையும் கூட நடந்து செல்லும் நிலையில், நமது உழைக்கும் கீழ்ஜாதியினராக குறிப்பிட்ட ஈழவர்கள், நடந்து போவது கூடாது என்பதை எதிர்த்து அங்கே உள்ள டி.கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, ஜார்ஜ் ஜோசப், கே.பி.கேசவமேனன் முதலியோர் துவக்கிப் போராடி _ ஓராண்டு _ நாள்தோறும் சத்தியாகிரகம் சிறைவாசம் அனுபவித்து பிறகு காந்தியடிகள் முன்னிலையில் சமாதானம் பிறந்து, தெருக்களை மட்டும் திறந்துவிட்டது; அதேபோல பேருந்துகளில் கருப்பின மக்களை ஏற்ற மறுத்த வெள்ளை நிறவெறித் திமிருக்கு எதிராக கிறித்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர்கிங் (ஜூனியர்). அவர்கள் போராடி வெற்றி கண்டது போன்றவற்றைப் பார்த்தோம். அதுபோல அமெரிக்க மற்றும் உலக வரலாற்றின் மனித உரிமைப் போரின் அடையாளங்களை பேத்தி, பேரன்கள் நூலகங்களில் தெரிந்துகொள்ள முயன்றால், உங்களுக்கு மிகவும் ஆச்சரிய மழை பொழிந்தது போல் ஆகும்!

அதை சற்று அப்படியே நிறுத்தி, பிறகு தொடரலாம் பிள்ளைகளே,

இந்த இதழ் பெரியார் பிஞ்சு வரும்போது, தந்தை பெரியாருக்குச் செயலாளராகவும், உதவியாளராகவும், பணியாளராகவும் செவிலித்தாயாகவும், பெரியார் தாத்தா மிகவும் முன்யோசனையோடு திருமணம் என்ற சட்டப்பெயர் கொண்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்ததன் காரணமாக நம் பெரியார் தாத்தாவை 95 வயது வரை, கண்ணை இமை காப்பதுபோல், உடம்பை உயிரை, இருதயம் காப்பதுபோல காத்து இணையராகவும் இறுதியில் கழகத்தையும் கழகச் சொத்துகளையும் காத்தவரான அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என்றழைக்கப்படும் நம் மணியம்மையார் பாட்டியின் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கவுள்ளது.

அவங்க, வேலூரில் (ராயவேலூர்ன்னு சொல்லுவாங்க) எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து, அவரது தந்தை கனகசபை அவர்கள் இறந்த பிறகு அன்றைய நெல்லை மாவட்டம் குலசேகரப்-பட்டினத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் புலவர் வகுப்பில் படிக்க வீட்டை விட்டுச் சென்றார்.

அதற்கு முன் பெரியார் தாத்தா வேலூர் வந்தால், தாத்தா கனகசபை வீட்டில்தான் தங்குவார்; மணிப் பாட்டிதான் பெரிதும் பெரியார் தாத்தாவை மிக்க அன்புடன் உபசரிப்பது வழக்கம்; அவரது பேச்சு கேட்பதும், எழுதிய எழுத்துகளைப் படித்து சுவைப்பதும் மணிப் பாட்டிக்கு பலாச்சுளை சாப்பிடுவது மாதிரி.

1946 வாக்கிலேயே குலசேகரப்பட்டினத்தில் படிப்பு முடிக்க வாய்ப்பில்லாததால் நேரே தந்தை பெரியாரிடம் சென்று விட்டார்.

1933இல் நாகம்மா பாட்டி இறந்துபோனார் அல்லவா? அதற்குப் பிறகு பெரியார் தாத்தா தன்னந்தனியராக ஈரோட்டில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தனியே தங்கி எழுத்து, பே-ச்சு, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் போய் திரும்புவதுமாக இருந்தார்.

ஈரோட்டில் வேளாவேளைக்கு நல்ல உணவு கிடையாது. பல ஊர் பல வேளை சாப்பாடு பெரியார் தாத்தா உடம்பில் ஒரு வயிற்றுப் புண் _ வலியை உண்டாக்கிவிட்டது. வேளை தவறி துறவி போலத்தானே வாழ்வு.

மணியம்மா பாட்டிதான் _ செவிலியராக உணவு சமைத்துப்  போட சமையல்காரி, வீட்டினை ஒழுங்குபடுத்தும் சம்பளம் வாங்காத வேலைக்காரியாகச் செயல்பட்டார்.

பெரியார் தாத்தாவுடன் சுற்றுப் பயணம் சென்று அவர் அச்சிட்ட புத்தகங்களைச் சுமந்து விற்பனை செய்பவராகவும் ஆனார்! அந்தக் கால மதிப்பில் 5 லட்சம் ரூபாய் அளவில் காலணா, அரையணா, ஒரு அணா விலையுள்ள புத்தங்களை எல்லாம் பதிப்பித்தார். நேரமிருந்தால் ‘குடிஅரசு’ வார ஏட்டில் கே.ஏ.மணி என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி எழுத்தாளராகவும் ஆகிவிட்டார்!

பெரியாருக்குப் பணி செய்வதே _ பாதுகாப்பதே என் ஒரே கடன் என்று தன் வீடு, சொத்து, சுகம், இன்ப வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து மகிழ்ந்த இணையற்ற தியாகியானார் மணிப் பாட்டி. பெரியார் தாத்தாவுக்கு இவரது சுயநலமற்ற உழைப்பு, கொள்கை உறுதி _ பயன் கருதாத இயக்கத் தொண்டு பிடித்துவிட்டது. நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது!

தனக்குப் பிறகு தான் சேர்த்த சொத்து, எந்த தனியாருக்கும் செல்லாமல் பொதுப் பணிக்கே _ தொண்டறத்திற்கே பயன்பட  தனக்குப் பிறகு  மணியம்மை செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவரை சட்டப்படி துணைவியராக _ இணையராக ஏற்றால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று சட்ட ஆலோசகர்கள் சொன்னதால் அப்படியே செய்து கொண்டார்.

தேர்தல் அரசியலுக்குப் போனால் நாம் நமது கொள்கைகளை 100க்கு 100 பேச முடியாது என்ற பெரியார் தாத்தாவின் கருத்தை முழுவதும் ஏற்காதவர்கள், அண்ணா தலைமையில் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அரசியல் கட்சியை உருவாக்கினர்.

என்றாலும், அறிஞர் அண்ணா எங்கள் அமைப்புக்கு  தாய்க் கழகம் திராவிடர் கழகம்தான் என்றார். பெரியார்தான் தலைவர் என்றார். பகுத்தறிவுக் கொள்கைதான் எங்கள் லட்சியம். திராவிட இயக்கத்திற்கு இது ஓர் அரசியல் பிரிவு என்றார். சொன்னபடியே திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றவும் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் பெரியார் தாத்தாவை வந்து பார்த்ததோடு, அவரைப் பாதுகாத்த நம் மணியம்மை பாட்டியையும் போற்றினார்; நன்றி செலுத்தினார்.

மணியம்மை பாட்டி _ எளிமையின் சின்னம். ஒரு சிறு கைப் பை, துவைத்த கருப்புப் புடவை _ வெள்ளை ரவிக்கை. ஒரு சிறு கூடு _ மருந்துகள். சில ரூபாய் நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் இடுப்பில் வழக்கமாக வைத்திருப்பார் _ எந்த சமையலையும் விரைந்து செய்து விருந்தளிப்பார். போராட்டங்களில் சிங்கமாகச் சீறி அதிகாரிகளே கூட நடுங்குகிற அளவில், சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் ஜெயிலில் புதைக்கப்பட்டபோது,  முதல்வரிடம் முறையிட்டு உடலைத் திரும்பப் பெற்று மக்களை வழிநடத்திய வீராங்கனை.

குழந்தைகளை மருத்துவமனையில் கைவிட்டு பல தாய்கள் ஓடிவிட்டபோது, அக் குழந்தைகளைப் பெற்று அரவணைத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து, வாழ்வளித்த எமது ஒப்பற்ற கருணைக் கடல். உலகறிந்த வசவுமலையால் நிலைகுலையாமல், தணலில் இட்ட தங்கமாம் எங்கள் கருணைத் தாய், தொண்டறத் தாய் மணிப்பாட்டி. அவர்தம் நூற்றாண்டு நமக்கு  தொண்டற நூற்றாண்டில், பிஞ்சுகளே பாடி, மகிழ்ந்து, உண்டாட்டமாக கொண்டாட்டம் நடத்துங்கள்!

அன்புடன்,

ஆசிரியர் தாத்தா

கி.வீரமணி

Share