Home முந்தைய இதழ்கள் 2020 மார்ச் 2020 கதை கேளு... கதை கேளு... ராஜ்காட்
ஞாயிறு, 04 ஜூன் 2023
கதை கேளு... கதை கேளு... ராஜ்காட்
Print E-mail

பள்ளிப் பேருந்து சரியாக காலை ஒன்பது மணிக்கு ராஜ்காட்டை வந்தடைந்தது. காலை வேளை என்பதால் பள்ளியில் இருந்து வேகமாக வந்துவிட்டோம். டெல்லியின் வாகன நெரிசலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், ஏழு மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்புவதுதான் கொஞ்சம் கடினமாக இருந்தது. டெல்லியில் அன்று _3 டிகிரியைத் தொட்டுக்கொண்டு இருந்தது. எந்த ஆண்டிலும் இல்லாத அவ்வளவு குளிர். எங்கள் பள்ளி புது டெல்லியில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பேருந்து நின்றது குடுகுடுவென ஓடி ரத்தோர் சிங் வாந்தி எடுத்தான். வயிறு புரட்டிவிட்டது போலும்! வண்டியில் ஏறியதும் சாப்பிட ஆரம்பித்தான், அப்போதே மிஸ்ரா சார்  எச்சரித்தார். நாங்கள் ஒவ்வொருவராக புத்தகப் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். ரத்தோர் வாய் கொப்பளித்துவிட்டு வரிசையில் வந்து சேர்ந்தான்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதக் கடைசியில் இங்கே ஒரு நாள் கழிப்பது வழக்கம். இது சுற்றுலாவின் கணக்கில் வராது. பள்ளியே கிளம்பி ராஜ்காட்டுக்கு வந்துவிடும். மகாத்மா காந்தியின் நினைவிடம் அங்குதான் இருக்கின்றது. எங்களுக்கு விளையாட நிறைய இடம் இருக்கும்; அதை நினைத்துத்தான் எல்லோருக்கும் உற்சாகம். ப்ரீத்தி சில விளையாட்டுப் பொருள்களைக் கையோடு எடுத்து வந்திருந்தாள். சென்ற ஆண்டே எல்லோரும் வந்திருந்ததால் எங்கே என்ன விளையாடுவது என பேருந்திலேயே முடிவெடுத்து இருந்தோம். இரண்டு பெரிய பூங்காக்கள் இருந்தன. ஒன்று, காந்தியின் நினைவிடத்தை ஒட்டி; மற்றொன்று, கிசன் காட் _ மற்றொரு பிரதமரின் சமாதிக்கு அருகே இருந்தது. இரண்டுமே ஒரே வளாகத்தில்தான் இருந்தன.

கடந்த ஆண்டில் இந்த சோதனைச் சாவடி இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக இங்கே புதிதாக அறை கட்டி இருக்கின்றார்கள். நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் வெளியே சென்று வரலாம். தங்களைப் பரிசோதிப்பதை என் வகுப்பில் இருக்கும் கடைசி இருக்கை நண்பர்கள் பெரிதும் விரும்பினார்கள். அதனால் வேண்டுமென்றே நான்கு அய்ந்து முறை உள்ளே போய் வெளியே வந்து விளையாடினார்கள். நான்காவது முறைதான் ஓர் உயர் போலிஸ் அதிகாரி இதனைக் கண்டுபிடித்து, “உள்ளே போங்கடா’’ எனச் சொல்லி புன்னகைத்தார்.

காந்தியின் நினைவிடத்தில் முதலில் எல்லோரும் சென்று அஞ்சலி செலுத்தினோம். வீட்டில் மலர்ந்திருந்த ரோஜாப் பூ ஒன்றை என் ‘கோட் பாக்கெட்’டில் எடுத்து வந்திருந்தேன். அதனை அவர் நினைவிடத்தில் வைத்தேன். பின்னர் எல்லா நண்பர்களும் ஆளுக்கு ஒரு திசையாக விளையாடச் சென்றுவிட்டோம். மிஸ்ரா சார் சரியாக பன்னிரண்டு மணிக்கு சாப்பிடக் கூடிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அவரும் எங்கோ காணாமல் போய்விட்டார். நூறு அடிக்கு மேல் எதுவும் தெரியவில்லை _ பனிமூட்டம். நடுங்க வைக்கும் குளிரும் கூட! பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் அந்தச் சின்னப்பையனைப் பார்த்தேன். ஒல்லியாக, குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தான். ஊருக்குப் புதியவன் போல இருந்தான். பள்ளியில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவன் போலவோ, குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்தவன் போலவோ இல்லை. தலையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு இருந்தான். “இங்கே வா!’’ என அழைத்தேன். அருகே வந்து அமர்ந்தான். அவனுக்கு இந்தி புரியவில்லை. ஆங்கிலமும் அவ்வளவாகப் புரியவில்லை. அவன் பேசியது தமிழ் என்று வெகுநேரம் கழித்துப் புரிந்துகொண்டேன். எங்கள் வகுப்பில் தமிழ் தெரிந்த ஒரே ஆள் ஹத்விகாதான். தமிழகத்தில் இருந்து இங்கே வந்து குடிபெயர்ந்துவிட்டார்கள். அவளை அழைத்து அவனைப் பற்றி விசாரித்தேன்.

அவன் பெயர் கரிச்சான். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகே படிக்கின்றான். அவன் தாய் மாமா டெல்லியில் வேலை செய்கின்றார். ராஜ்காட் வாசலில் ஒரு சாலையோரக்கடை விரித்து இருக்கின்றார். ஆமாம், அவனை நுழைவு வாயிலுக்கு அருகே பார்த்தது அப்போதுதான் மீண்டும் நினைவுக்கு வந்தது. மாமா ஊருக்கு வந்தபோது அவருடனே டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்துவிட்டான். ரயிலில் டிக்கெட்கூட எடுக்கவில்லை. பொங்கலுக்கு ஊருக்குத் திரும்பிச் செல்வதால் அவருடனே ரயிலில் அழைத்து வந்துவிட்டார் மாமா. மாமிதான் மூன்று நாள்களுக்கு ஒருமுறை எங்கேனும் வெளியே அழைத்துச் செல்கின்றார். மெட்ரோ ரயில் மிகவும் பிடித்துவிட்டதாகக் கூறினான். “ஸ்கூலுக்குப் போகலையா?’’ என்றதற்கு, “பயமாக இருக்கு’’ என்று விடையளித்தான். கொஞ்ச நேரத்தில் ஹத்விகா விளையாடச் சென்றுவிட்டாள். நானும் கரிச்சானும் மட்டும் பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. கரிச்சான் என்னைவிட இரண்டு வயது இளையவன்தான். ஆனால், நிறையச் செய்திகளைத் தெரிந்து வைத்திருந்தான்.

கரிச்சான் தன் மாமாவின் கடைக்கு என்னை அழைத்துச் சென்றான். என்னிடம் அம்மா மொத்தம் நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்து இருந்தார்கள். அங்கே ஓர் உணவகமும், நான்கு_ அய்ந்து கடைகளும் மட்டுமே இருந்தன. விளையாட்டுச் சாமான்கள், தொப்பிகள், வண்ணக் கண்ணாடிகள் மட்டுமே இருந்தன. கரிச்சான் எனக்கு குட்டி ‘பாக்கெட்’டில் மாசாலா பொரி கொண்டு வந்தான். “காசு?’’ என்றதற்கு, “அவர் தன்னுடைய மாமாவின் நண்பர்’’ என்றான். அவனுடன் சுற்றுவதைப் பார்த்துவிட்டு அவன் தோற்றத்தைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் இந்தியில், “அவனுடன் சுற்றாதே, எப்படி இருக்கின்றான் பார்!’’ என்றார்கள். நல்லவேளை கரிச்சானுக்கு அவர்கள் சொன்னது புரியவில்லை. மதிய உணவினை நான், மற்றொரு தோழி மற்றும் கரிச்சான் பகிர்ந்து உண்டோம். அப்போது மிஸ்ரா சார் வந்து, “யார் இவன்?’’ என்று விசாரித்தார். கரிச்சான் தன் ஊரில் விளையாடும் விளையாட்டுகளை எனக்குச் சொல்லித்தந்தான். அவனிடம், “நீ ஊருக்குத் திரும்பியதும் பள்ளியில் போய் படி, படி’ என நூறு முறையேனும் சொல்லிவிட்டேன். ஏன் படிக்கவேண்டும் என சொல்லத் தெரியவில்லை. அவன் என்னை ‘அக்கா’ என்றுதான் அழைத்தான். ஊரிலும் தனக்கு ஒரு அக்கா இருப்பதாகக் கூறினான். வழக்கம் போல மூன்று மணிக்கு எல்லா மாணவர்களையும் அமர வைத்து காந்திஜியின் கொள்கைகள் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் ஒரு பெரியவர் வகுப்பு எடுத்தார். எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும், சத்தியத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றார். ஜனவரி 30ஆம் தேதி மாலை 5:12 மணிக்கு நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இங்கே இருப்பது அவர் நினைவிடம் என்று சொன்னபோது பெரியவர் கண்கலங்கினார். அப்போதுதான் நான் கையில் கட்டியிருந்த கடிகாரம் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

அடுத்த அரைமணி நேரம் அரசல்புரசலானது. செய்தி எல்லா மாணவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஒவ்வொருவராக வந்து அதன் அடையாளத்தைக் கேட்டார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக எல்லோரின் சந்தேகமும் கரிச்சான் மீது விழுந்தது. அவன்தான் எடுத்திருக்கணும் என்று முடிவே கட்டிவிட்டார்கள். “இல்லை விடுங்க, அவன் எடுத்திருக்கமாட்டான். நான் கையில் கட்டிவந்தேனா என்று கூட நினைவில்லை’’ என சமாளித்தேன். கரிச்சானை அழைத்து அவன் சட்டை, கால் சட்டைக்குள் எல்லாம் கைவிட்டு அவனை அசிங்கப்படுத்தினார்கள். அவனுக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. மிஸ்ரா சாரும் அவனை கடுமையாகப் பேசினார். அவன் தனக்கு எதுவும் தெரியாது என்றான். பின்னர் அங்கிருந்து அவன் மறைந்துவிட்டான். நண்பர்கள் சிலர் நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. நான்கு மணிக்கு மிஸ்ரா சார் விசில் ஊத எல்லோரும் வரிசையில் நின்று பேருந்தை நோக்கி நடந்தோம்.

பேருந்து கிளம்பிவிட்டது. கரிச்சானிடம் போய் வருகின்றேன் என்றுகூடச் சொல்லவில்லை. நண்பர்கள் அவனைத் திட்டியதால் அவமானப்பட்டு எங்கோ சென்றுவிட்டான். அவன் நிச்சயம் செய்திருக்கமாட்டான் என நன்றாகத் தெரியும். மனம் மிகவும் வேதனை அடைந்து இருந்தது. சில மீட்டர் தூரம் சென்றதும் பேருந்து திடீரென நின்றது. மிஸ்ரா சார் கதவைத் திறந்தார். கரிச்சான் நின்றுகொண்டு இருந்தான். மிஸ்ரா சார் முறைத்தார். அவன் கையில் இருந்த கடிகாரத்தினைக் காட்டினான். “மேலே வா!’’ என்றார். என்னைத்தேடி வந்தான். கடிகாரத்தினை நீட்டினான். எங்கே இருந்தது என ஹத்விகா கேட்க, “ஒரு வயசான தாத்தா என்கிட்ட கொடுத்தார். கிசான் காட் புல் தரையில் இருந்துச்சாம். அதான் ஓடி வந்து கொடுக்க வந்தேன். அந்தத் தாத்தா மேல் சட்டைகூட இல்லாம, கையில ஒரு குச்சி வெச்சிகிட்டு இருந்தார். அதோ கிட்டத்தட்ட அந்தச் சிலையில இருக்கிற மாதிரியே’’ என்றான். எல்லோரும் வெளியே பார்த்தோம். மெல்லிய புன்னகையுடன் அங்கே காந்தியின் சிலை இருந்தது. “மன்னிச்சிடு’’ எனச் சொல்லி என் நண்பர்கள் அவனுக்குக் கைகொடுத்தார்கள். சிலர் அவனை அணைத்துக்கொண்டார்கள். எனக்குத்தான் கண் கலங்கியது. அவன் வருவதற்கு முன்னரே அவன் மாமாவின் கடையில் என்னுடைய புதிய ஜெர்கினை தம்பிக்குக் கொடுக்கச்சொல்லி வந்திருந்தேன்.

Share