Home முந்தைய இதழ்கள் 2020 மே 2020 பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி?
திங்கள், 26 அக்டோபர் 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி?
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே,

எப்படி இருக்கீங்க? உலகமே வீட்டுக்குள்ளே முடங்கி, ‘ஊரடங்கு, வீட்டில் முடங்கு’  என்றெல்லாம் உள்ள நிலையில், நீங்கள் ஓடி விளையாடி, தெருவில் சென்று நின்று, உங்கள் வகுப்புத் தோழர்களைச் சந்தித்து, கலகலப்புடன் வெளியில் சென்றெல்லாம் வந்து கும்மாளமடிக்க கடந்த 40 நாட்களாகத் தடை தான். என்றாலும் கொடுமையான கொரோனாவை விரட்ட நாம் அனைவரும் தள்ளி நின்றும், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தும் தானே இப்போது வாழ வேண்டியிருக்கிறது.

வீட்டில் உள்ள நேரத்தைப் பயனுள்ள நேரமாக ஆக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம் உங்கள் கையில்தான் உள்ளது. இல்லையா?

பள்ளிப் பாடங்களை எந்த அளவுக்கு online என்று கணினி வழியே படிக்க முடியுமோ அப்படி படிக்கலாம்; கற்கலாம்.

நம்ம கோ.கருணாநிதி, அவர்தான் நம்ம கழக வெளியுறவுத் துறைச் செயலாளர்... அவர் மின்னஞ்சலில் எனக்கொரு அருமையான தகவலை அனுப்பியுள்ளார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்,- பிள்ளைகளே!

குழந்தைகளுக்கான கொரோனா புத்தகம் ஒன்றை அய்.நா.வின் மனிதநேயச் செயல்-பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான அய்.ஏ.எஸ்.சி, குழந்தைகளுக்காக, ‘எவ்வாறு கொரோனாவை எதிர்த்துப் போரிட முடியும்’ என்பதைக் கதை வடிவப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. கதை எழுதி ஓவியம் வரைந்திருக்கிறார் ஹெலன். ஆங்கிலம் உட்பட 24 மொழிகளில் இதுவரை வெளிவந்துள்ளது. உடனடியாக அந்த நூலை, “நீதான் தான் எனது ஹீரோ : கோவிட் -19 எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி?” என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம்ம பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்த தோழர்களான செம்மொழி மணி - புரட்சி என்னும் வாழ்விணையர்கள். இந்தப் புத்தகத்தை யூனிசெப் மற்றும் அய்.ஏ.எஸ்.சி இணையதளங்களில் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்!

தமிழ் நூலைத் தரவிறக்க - https://bit.ly/3foeRjB இங்கு செல்லவும். ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் உள்ள நூல்கள் https://bit.ly/2YB2b38 இங்கு கிடைக்கும்.

IASC என்றால் Inter Agency Standing Committee என்பது அதன் முழு நீளப் பெயர். நீங்கள் அறிவதற்காக!

அதைப் படித்துப் பயன்பெற்று அடுத்த ‘பெரியார் பிஞ்சு’ இதழில் உங்கள் கருத்தை எழுதுகிறீர்களா?

வீட்டுக்குள்ள இருந்தாலும் சிறுசிறு உடற்பயிற்சி. களித்திடும் விளையாட்டுகளையும் விளையாடுங்கள் தவறாமல்!

டி.வி. என்ற அந்த ‘நேரம் விழுங்கி உடலைப் பெரிதாக்கும் கருவி’யின் முன்பே சதா உட்கார்ந்து, Remote அய் முழு வேகத்துடன் முடுக்குவதிலேயே மும்முரமாக இருக்காதீர்கள்!

‘இல்ல தாத்தா... அதுக்குப் பதில் கையில் உள்ள செல்பேசியை, டேபை (Tab) வைத்து, சதா இரண்டு கைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டே பொழுதை ஓட்டுகிறோம்’ என்றும் கூட சொல்லக் கூடாது. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்-களுக்கோ, பாடங்களுக்கோ மட்டும் தான் அந்தக் கருவிகள் நமக்குப் பயன்பட வேண்டும்.

இல்லாவிட்டால், குடிகாரனுக்கு ஏற்பட்ட போதை குறையாமலிருக்க, சதா மொடாக் குடியனாகி குடிப்பதைப் போன்று, எந்த நேரமும் செல்லிலேயே நேரத்தைச் செலவிடப் பழகிவிடுவோம். அது கூடாது!

பெரியார் தாத்தாவின் கருத்துகள் மற்றும் அறிவியல் அறிவை வளர்க்கும் பல நூல்களை உங்கள் விருபத்திற்கு ஏற்ப படிக்க இந்தக் கால வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பாடுவது, ஆடுவது, ஓடுவது, ஓவியம் வரைவது, கலகலப்பாக நல்ல அர்த்தம் தரும்- நகைச்சுவைக் கதைகளையும் படித்து, மற்றவர்-களுக்குச் சொல்லலாம்!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உங்களுக்காக (குழந்தைகள் - மாணவர்களுக்காக) ‘இளைஞர் இலக்கியம்’ என்ற ஓர் அருமையான கவிதை இலக்கியப் புத்தகம் எழுதியுள்ளார் - தெரியுமா?

அதைத் தேடிப் பிடித்துப் படித்து மனப்பாடமாக்கி, பாடவும் செய்யலாமே!

எல்லாவற்றையும் விட ஒன்று முக்கியம். வீட்டினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள, உங்கள் பணியும், பங்கும் உங்கள் அப்பா, அம்மாவுடன் அவசியம் இருக்க வேண்டும். சிறிய இடமானாலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். “எங்கள் வீட்டில் எதுவும் தாறுமாறாக, பார்ப்பதற்கு அலங்கோலமாக இல்லாமல் செய்யும் கடமை எனக்கு இருக்கிறது” என்று உறுதியேற்கும் வண்ணம் ஒவ்வொரு பெரியார் பிஞ்சும் உங்கள் பங்குக்கு நல்ல அளவு அப்பா, அம்மாவுடன் ஒத்துழைத்து, பகிர்ந்து கொள்க பணிகளை! அதன் மூலம் நுகர்ந்து கொள்க பயனையும் மகிழ்ச்சிகளையும்!

இந்த கொரோனாவால் நான் இழந்திருக்கும் முக்கிய வாய்ப்பு என்ன தெரியுமா?

ஒவ்வோராண்டும் கோடை விடுமுறையில் எம் பேரப் பிள்ளைகளாகிய உங்களைப் பார்த்துப் பழகி மகிழ்ந்து, உங்களுக்குக் கற்றுக் கொடுத்து உங்களிடமிருந்து நானும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெறும் அரிய நிகழ்வான பெரியார் பிஞ்சுகள் பழகுமுகாம் தான் அது!

நீங்களும் அதை இழந்திருப்பீர்கள் (Miss செய்வீர்கள்) என்பதை நான் அறிவேன். என்னைத் தொடர்பு கொண்ட பெரியார் பிஞ்சுகளும் அதையே சொல்லி வருந்தினார்கள். எப்போது பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் என்றும் கவலையுற்றனர்.

இந்தக் கொரோனா தொற்றுப் பேரச்சம் ஓய்ந்து, நாம் இணைந்திருக்கலாம் என்ற சூழல் மருத்துவ அறிவியலின் உதவியுடன் விரைவில் மலரும். அதன்பிறகு நாம் சந்தித்து மகிழலாம்.

இப்போது மட்டுமல்ல... கைகளைச் சோப் போட்டு 20 விநாடிகளுக்குக் குறையாமல் நன்றாக அடிக்கடி கழுவிடுவதை பழக்கமாக்கி, வழக்கமாக்கிடுங்கள்!

அப்புறம், விடுமுறைக் காலத்தை நாங்கள் எப்படி செலவழிக்கிறோம் என்று தஞ்சை பெரியார் பிஞ்சுகள் எழுதிய கடிதம் விடுதலையில் வந்துள்ளது படித்திருப்பீர்களே! (இவ் விதழில் 35-ஆம் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது) அப்படி நீங்களும் உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.

சந்திப்போம், அடுத்த மாதம் - பெரியார் பிஞ்சு வாயிலாக!

பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,

- கி.வீரமணி

Share