Home முந்தைய இதழ்கள் 2020 ஜூன் 2020 கோமாளி மாமா-6 : நல்லதம்பி
திங்கள், 03 ஆகஸ்ட் 2020
கோமாளி மாமா-6 : நல்லதம்பி
Print E-mail

கதை ஓவியம்: மு.கலைவாணன்

விடுமுறை நாளான அன்று, எப்போதும் போல்  கதை சொல்ல பூங்காவிற்கு வந்துவிட்டார்! கோமாளி மாமா. ஆனால் குழந்தைகள் மூவரையும் காணவில்லை. சரியான நேரத்திற்கு வந்துவிடும் குழந்தைகள் இதுவரை ஏன் வரவில்லை என பூங்கா வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்ததைப் போலவே மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் வேகவேகமாக வந்து கொண்டிருந்தனர்.

கோமாளி மாமா அருகில் வந்ததும் மல்லிகா “யப்ப...- யப்பா.-.. ஒரு சாமியார் போற ஊர்வலத்துக்கு இவ்ளோ... கூட்டம்... அதுக்கு போலீசு... சே... சே...’’ என சலித்தபடி பேசினாள்.

“என்ன மல்லிகா.. வடநாட்டு சாமியார்... ஊர்வலமா போனதால நீங்க வந்து சேர நேரமாயிடுச்சு அவ்வளவுதானே.. அதுக்கு ஏன் சலிச்சுக்கறே...’’ என்றார் கோமாளி.

“மல்லிகா.-... சாமியாருக்காக சலிச்சுக்கலே... சாமி... யாரு எவருன்னே... தெரியாமே நிறையபேரு அவரு பின்னாடி போறாங்களேன்னு வருத்தப் படுறா... அப்படித்தானே மல்லிகா...’’ என மல்லிகாவைப் பார்த்துக் கேட்டான் செல்வம்... மல்லிகாவும் செல்வம் சொன்னதை ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

“மாமா... இந்தச் சாமியாரு... யாரு? எதுக்காக இங்கே ஊர்வலமா போறாரு... ஏன் அவரு பின்னாலே இவ்வளவு கூட்டம்...’’ என தன் சந்தேகத்தைக் கேட்டான் மாணிக்கம்.

“தம்பி! நம்ம ஊர்ல எங்கேயெல்லாம் கூட்டம் கூட்டமா மக்கள் இருக்காங்க?’’ என கேள்வி கேட்டார் கோமாளி.

“உம்... சினிமா தியேட்டர், பெரிய பெரிய மால், பெரிய தொழிற்சாலை, கண்காட்சி, கோயில் இங்கேயெல்லாம் கூட்டம் இருக்கும் என்றான் செல்வம்.

“அங்கே மட்டுமா ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டு, ரேஷன் கடை, டாஸ்மாக்கு இங்கேயெல்லாம் கூட மக்கள் கூட்டம் கூட்டமா தான் இருப்பாங்க.’’ என்றான் மாணிக்கம்.

“ஆங்! இப்படி மக்கள் கூடுற எல்லா இடமுமே மக்களுக்கு அவசியமான, கட்டயமா தேவைப்படுற இடமா? யோசிச்சுப் பாருங்க...’’ என்றார் கோமாளி “அது எப்படி? சில இடங்கள் கண்டிப்பா மக்களுக்கு தேவையான பொருள் கிடைக்கிற... அல்லது அந்த இடத்துக்கு போறதுக்கான இடங்கள் மற்றது உடம்புக்கும், நம்ம பணத்துக்கும் கேடு உண்டாக்குற இடங்கள்...’’ என்றாள் மல்லிகா. “இப்ப சொல்லுங்க... நீங்க சொன்ன இந்த இடங்களிலே மக்கள் கூட்டமா இருக்காங்கன்னு நீங்களும் போவிங்களா?’’ என கேள்வி எழுப்பினார் கோமாளி.

“அது எப்படி... நமக்கு தேவையும். அவசியமும் இருந்தாத்தான் அந்த இடத்துக்குப் போவோம். இல்லேன்னா... நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போக வேண்டியதுதான்’’ என்றான் மாணிக்கம்.

“இப்ப நாம நம்ம வேலையைப் பாப்போமா?’’ என கோமாளி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே “நீங்க கதையைச் சொல்லுங்க மாமா’’ என ஆவலாய்ச் சொன்னான் செல்வம்.

“மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட அந்த காலத்திலே ஒரு கிராமத்திலே சாமியார் ஒருத்தர் இருந்தாரு. அவர் எப்பவுமே அரைக் கண்ணை மூடிக்கிட்டு சாமிப் பேரை சொல்லிக்கிட்டு, ஏதோ மந்திரத்தை சொல்லிக்கிட்டே இருப்பாரு. கிராம மக்கள் அவரை உண்மையி-லேயே பெரிய பக்தி மான்னு நம்பிக்கிட்டிருந்தாங்க’’.

“அட இப்பவே... சாமியார் பின்னாடி இவ்வளவு பேர் போறாங்கன்னா... அந்தக் காலத்திலே அதுவும் படிப்பறிவு குறைஞ்ச காலத்திலே அவரை நம்பித்தான் இருப்பாங்க’’ என மல்லிகா குறுக்கிட்டாள். “கொஞ்சம் சும்மா இரு மல்லிகா! மாமா சுவாரசியமா கதை சொல்லும் போது குறுக்கப் பேசாதே’’ என மாணிக்கம் சொல்ல கதையைத் தொடர்ந்தார் கோமாளி மாமா.

“சாமியாரை நம்புன ஊர் மக்கள் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடெல்லாம் போட்டு கவனிச்சுக்கிட்டாங்க.’’

அந்த மக்களோட அறியாமையைத் தனக்குச் சாதகமா பயன்படுத்திக் கிட்டு எப்படியாவது பணக்காரனா ஆயிடணும்னு திட்டம் போட்டாரு. ஒரு நாள் ஊர் தலைவர்கிட்ட போனாரு. “நம்ம ஊருக்கு நல்ல காலம் பிறந்துடுச்சு. நான் ஒரு நல்ல செய்தியோட வந்துருக்கேன். இந்த ஊர் மக்கள் எல்லாரையும் நான் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யுங்க’’ன்னாரு. அதை அப்படியே நம்பி ஊர்த் தலைவரும் தண்டோரா போட்டு ஊர் மக்களையெல்லாம் ஊருக்குப் பொதுவான இடத்திலே கூட்டிட்டாரு.

சாமியாரு அந்தக் கூட்டத்திலே “உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி சொல்லப் போறேன். இனி நம்ம ஊர் மக்கள் நகரத்தைப் பத்தி அச்சப்படத் தேவையில்லே, எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக முடியும்’’ அப்படின்னு பேசுனாரு.

“அது எப்படி மாமா’’ எனக்கேட்டாள் மல்லிகா. “இப்படித்தான் அந்த ஊர் மக்களும் அது எப்படின்னு கேட்டாங்க’’.

“நான் எப்பவும் கடவுள் பேரைச் சொல்லி மந்திரம் ஓதிக்கிட்டே இருக்கிறதை நீங்க பார்த்திருப்பிங்க. அதனாலே கடவுள் மகிழ்ச்சி அடைஞ்சு நேத்து என் கனவிலே வந்தாரு. ‘பக்தா உன் பக்தியை மெச்சினேன். நீ என்னுடன் வா’ன்னு கூப்பிட்டாரு. நானும் போனேன் கடவுள் சொர்க்கத்தைக் காட்டுனாரு. ‘அடடா! சொர்க்கம் அவ்வளவு அழகா இருந்தது தெரியுமா?’ கடவுள் சொன்னாரு ‘உன் பக்திக்கு நான் ஒரு பரிசு தரப்போறேன். இன்னையிலே இருந்து உன் பேரு சொர்க்கத்தின் தூதுவன். நீ உன்  வாழ்க்கைச் செலவுகளுக்காக மக்கள் ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் ரெண்டு பொன் நாணயம் வாங்கிக் கொள். அதுக்கு நீ ஒரு சீட்டு எழுதிக் கொடு. அவங்க இறந்ததும் அந்தச் சீட்டை அவங்களோட சேத்து எரிச்சா, அவங்களுக்கு நான் இங்கே சொர்க்கத்திலே இடம் தர்றேன்’னு சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பி வச்சிருக்கார்’’ என பேசி முடிச்சாரு போலிச் சாமியாரு.

இதைக் கேட்ட அப்பாவி மக்களும் உண்மைன்னு நம்பி அன்னையிலேயிருந்து ஊர்ல யார் செத்தாலும் சாமியார்கிட்ட போயி ரெண்டு பொன் நாணயத்தைக் கொடுத்து சீட்டெழுதி வாங்கி, செத்தவன் கையிலே கட்டி உடம்போடு சேத்து  எரிச்சுடுவாங்க. இப்படி ஊரை ஏமாத்தி நிறைய சொத்து சேத்தாரு சாமியாரு.

ஒரு நாள் ஊருல ஒரு ஏழை இறந்து போயிட்டான். அவன் குடும்பத்தில உள்ளவங்ககிட்ட ரெண்டு பொன் நாணயம் இல்ல. பாத்தாரு ஊர் தலைவரு ஊரு கணக்குப் புள்ளைய கூப்பிட்டு ஊர்ல உள்ள எல்லார்கிட்டேயும் பணம் வசூல் பண்ணி இந்த ஏழையை சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்போம். இவன் மட்டும் பணமில்லாததாலே நகரத்துக்குப் போக வேணாம். அப்படின்னு சொன்னாரு.

கணக்குப் புள்ளையும் ஊர்ல பணம் வசூலிச்சாரு. ஊர் சத்திரத்திலே பக்கத்து நகரத்துலேயிருந்து துணி வியாபாரம் செய்ய  வந்திருந்த நல்லதம்பிங்கிற இளைஞன் தங்கியிருந்தான். அவன் கிட்ட போயி ஏழை ஒருத்தர் சொர்க்கத்துக்குப் போகப்பணம் நன்கொடை தாங்கன்னு கேட்டாரு கணக்கப்புள்ளை. “நன்கொடை வாங்கி ஒருத்தரை சொர்கத்துக்கு அனுப்புறிங்களா... அது எப்படி’’ன்னு ஆச்சரியமா கேட்டான் இளைஞன்.

நடந்த விவரங்களை விளக்கமா சொன்னாரு கணக்குப்புள்ளை, யரோ ஒருத்தன் இந்த ஊர் அப்பாவி மக்களை ஏமாத்திக்கிட்டிருக்காங்கிறதை புரிஞ்சுக்கிட்ட இளைஞன் நல்ல தம்பி, கணக்குப்புள்ளைகிட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பிட்டான்.

அன்னைக்கு ராத்திரி ஒரு சீட்டுல ஏதோ எழுதினான். அதில மஞ்சள், குங்குமம் தடவினான். விடியறதுக்கு முன்னே எழுந்து சுடுகாட்டுக்குப் போயி முதல் நாள் எரிஞ்ச ஏழையோட சாம்பலிலே அதை சொருகி வச்சுட்டு வந்திட்டான்.

விடிஞ்சுது. ஊர் மக்கள் நிறையப் பேரு சுடுகாட்டுக்கு வந்தாங்க. பால் தெளிச்சு இறந்து போன ஏழையோட எலும்புகளை எடுத்தாங்க. அப்ப அவங்க கையெல இளைஞன் நல்லதம்பி எழுதிவச்ச சீட்டு கிடைச்சுது. அதை உரக்கப் படிச்சாரு ஒருத்தர்.

அதிலே... “திரு. சொர்க்கத்தின் தூதுவருக்குக் கடவுள் எழுதியது. எமது அன்பராகிய நீங்கள் உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லோருக்கும் சொர்க்கத்தில் இடம் தர வேண்டி பரிந்துரைச் சீட்டு தருகிறீர். நானும் எல்லோருக்கும் இடம் தந்தேன். அதனால் சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பற்றியும், இன்னும் சில செய்திகள் பற்றியும் உம்மோடு நேரில் பேச வேண்டும். ஆகவே உடனே புறப்பட்டு இங்கே வரவும். இப்படிக்கு கடவுள்’’ அப்படின்னு இருந்தது.

ஊர் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி எல்லாரும் சாமியார் வீட்டுக்குப் போனாங்க “சாமி உங்களை சொர்க்கத்துக்கு வரச்சொல்லி கடவுள் கூப்பிடுறாரு. இதோ பாருங்க சீட்டுன்னு’’ அந்த கடிதத்தைக் காட்டினாங்க.

அதைப் பாத்ததும் சாமியார் பயந்துட்டாரு. யாரோ வேணுமின்னே இப்படி செய்திருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டாரு.

“மக்களே! இதை நம்பாதீங்க யாரோ வேணுமிண்ணே செய்த சூழ்ச்சி இது’’ன்னாரு.

“என்ன சாமி, நீங்க செய்த நல்ல காரியத்தைப் பாராட்டி, கடவுளே உங்களை கூடப்பிடுறாரு. அதுக்கு மகிழ்ச்சி அடையாம சூழ்ச்சி கீழ்ச்சின்னு சொல்றீங்க... புறப்படுங்க சாமி...’’ என்றார் ஊர்த்தலைவர்.

“எங்கே?’’ என்று கேட்டார் சாமியார்.

“உங்களுக்காக தீ வளத்து வச்சிருக்கோம். நீங்க கண்ணாலே பார்க்கணும் வாங்க சாமி...’’ என்றான் நல்லதம்பி.

“இது என்ன மடத்தனமா இருக்கு? சொர்க்கத்திலே இருந்து எங்கேயாவது கடிதம் வருமா?’’ என கோபமாகக் கேட்டார் சாமியார்.

“நீங்க எழுதுன சீட்டு சொர்க்கத்துக்கு போகும்போது அங்கே இருந்து சீட்டு இங்கே வராதா... வாங்க சாமி வாங்க... இல்லேன்னா கடவுள் எங்களை நரகத்துல தள்ளிடப் போறார்’’ வாங்க என ஊர் மக்களோடு ஒருவனாகச் சேர்ந்து குரல் கொடுத்தான் நல்லதம்பி.

“சாமியார் தன் ஏமாற்றுவேலை ஊருக்குத் தெரிந்ததைப் புரிந்து கொண்டு ஊரை ஏமாற்றிச் சேர்த்த அனைத்தையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்...’’ என கதையைச் சொல்லி முடித்தார் கோமாளி மாமா

“அடடா... இப்படி ஊருக்கு ஒரு நல்லதம்பி இருந்தா... எவ்வளவு நல்லாயிருக்கும்’’ என்றான் மாணிக்கம்

“அந்த நல்லதம்பியா நீங்க ஏன் மாறக் கூடாது?’’ என்றார் கோமாளி மாமா.

- மீண்டும் வருவார் கோமாளி

Share