Home முந்தைய இதழ்கள் 2020 ஜூலை 2020 கோமாளி மாமா-7 : முடியும்
ஞாயிறு, 29 மே 2022
கோமாளி மாமா-7 : முடியும்
Print E-mail

ஓவியம், கதை:மு.கலைவாணன்

கோமாளி மாமா பூங்காவுக்குள் நுழையும் போதே கதை சொல்லும் மரத்தடியில் மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூன்று பேரும் இருப்பதைப் பார்த்தார்.

அருகில் வரும்போது மாணிக்கமும் மல்லிகாவும் சிரித்துக் கொண்டிருந்தனர் செல்வம் சோகமாக இருந்தான்.

“என்ன செல்வம்! நீ மட்டும் சோகமா இருக்க... மாணிக்கம், மல்லிகா நீங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கிங்க... என்னச்சேதி! என்று கேட்டார்.

“அதை அவன் கிட்டேயே கேளுங்க மாமா’’ என்றாள் மல்லிகா.

“மாமா... இவன்... கையில ஒரு ரூபா காசு வச்சிருக்கான். இதை உண்டியல்ல போட்டு சேத்து வைக்கப் போறானாம்.’’ என்றான் மாணிக்கம்

“உண்டி இருக்கான்னு கேட்டதுக்கு அவங்க அப்பா நாளைக்கும் இதே மாதிரி ஒரு ரூபா காசு தருவாராம்... அதை சேத்துவச்சு உண்டி வாங்கு வானாம்’’. என கேலியாகச் சொன்னான் மாணிக்கம்.

“அதை விட பெரிய ஜோக்கு என்னன்னா... இப்படி சேத்து வைக்கிற காசுல இவன் சைக்கிள் வாங்குவானாம்... மாமா...’’ என கிண்டலாக சிரித்தபடி சொன்னாள் மல்லிகா...

உடனே மாணிக்கம் மாமா... இவன் ஒரு... ஒரு ரூபாவா சேத்து சைக்கிள் வாங்குனா... இவன் ஓட்ட முடியாது... இவன் பேரன்தான் ஓட்டுவான்’’... என்று சொல்லி விட்டு பலமாகச் சிரித்தனர் இருவரும்.

“நிறுத்துங்க!’’ என சத்தமாகச் சொன்னார் கோமாளி.

சின்ன அமைதிக்குப்பின்...

“செல்வம்! நீ எடுக்கிற இந்த முயற்சிக்கு முதல்ல என்னோட வாழ்த்துகள். மாணிக்கம், மல்லிகா... நீங்க கேலியா, கிண்டலா நினைச்சதே தப்பு. செல்வம்! சின்ன முயற்சியைத் தொடங்கும் போது இப்படிதான் பலபேரு பலவிதமா பேசுவாங்க. அதுக்காக முயற்சியைக் கைவிடக் கூடாது.

இன்னைக்கு நான் சொல்லப் போற கதையே இதைப் பத்திதான்... நீ வருத்தப்படாம வந்து கதையைக் கேளு’’ என்றார் கோமாளி.

சோகமாக இருந்த செல்வம்... தனக்கு ஆதரவாகக் கோமாளி மாமா பேசியதால் மனம் மகிழ்ந்து, கோமாளி மாமாவின் அருகில் வந்தான்.

“செல்வம்! கோவிச்சுக்காதே! சும்மா தமாசுக்கு நாங்க அப்படிச் சொன்னோம்!’’ என்றான் மாணிக்கம்.

“இனிமே அப்படிச் சொல்லமாட்டோம்! வாங்க கதை கேப்போம்!’’ என்றாள் மல்லிகா.

“சரி... சரி... வாங்க! சீன நாட்டு அதிபரா இருந்த மாசேதுங் பொதுக்கூட்டம் பேசும்போது சொன்ன ஒரு கதை, எனக்கு இப்ப ஞாபகத்துக்கு வருது’’ என்றார் கோமாளி.

“என்ன கதை மாமா’’ என்று அவசரமாக கேட்டாள் மல்லிகா. “அவசரப்படாதே! கோமாளி மாமா! சொல்லுவாங்க’’ என்றான் செல்வம்.

“சீனாவில...

ஒரு பெரிய மலைக்குப் பக்கத்தில இருக்கிற சின்ன கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பெரிய மலையின் அடிவாரத்தில் உட்கார்ந்து கொண்டு... சின்ன சுத்தியும், உளியும் வைத்துக் கொண்டு... மலைப் பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தார்.

அந்த வழியாகப் போன வழிப்போக்கன் அதைப் பார்த்தான் “என்ன பெரியவரே இந்த வேகாத வெயில்ல மலை அடிவாரத்திலெ உக்கார்ந்துக்கிட்டு என்ன செய்யுறீங்க?’’ என்று கேட்டான்.

முதியவர் தன் நடுங்கும் குரலில் “நான் இந்தப் பக்கமா பாதையை உருவாக்குறேன்’’னு சொன்னாரு.

“என்னது? பாதையை உருவாக்குறிங்களா?’’ என வியப்பாக கேட்டான்.

“ஆமப்பா! அதோ தெரியுதே அதுதான்  என்னோட வீடு’’ என எதிர்திசையை கைகாட்டினார் முதியவர்.

வழிப்போக்கன் திரும்பிப் பார்த்தான். சின்ன குடிசை ஒன்று கண்ணில் பட்டது.

“அதுலதான்... நான்... என்னோட மகன்... அவனோட மனைவி பிள்ளைங்க எல்லாரும் ரொம்ப நாளா இருக்கிறோம். இந்த கிராமத்தில இருந்து நகரத்துக்குப் போறதுக்கு இந்த பெரிய மலையச் சுத்திக்கிட்டுப் போக வேண்டியிருக்கு இங்கே காலையிலே புறப்பட்டா... மாலையில் தான் நகரத்துக்கே போய்ச்சேர முடியும். அதனாலே எந்த வேலையும் சீக்கிரமா முடிய-மாட்டேங்குது. அதனாலே... இந்த மலையைப் பேத்து இப்படி ஒரு பாதையைப் போட்டா... பெரிய மலையை சுத்திக்கிட்டுப் போகலாமில்லியா... அதுக்காகத்தான் நான் பாதை போட்டுக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு.

வழிப்போக்கன் ஹ... ஹ... ஹான்னு சத்தமா சிரிச்சுட்டு “பெரியவரே... உங்களுக்கு என்னா பைத்தியமா பிடிச்சிருக்கு... இத்துணூன்டு உளி, சின்னச் சுத்தி, இதை வச்சுக்கிட்டு இத்தாப் பெரிய மலையை உடைச்சு, பாதை போடுறேன்னு சொல்றீங்க... கிண்டல் பண்ணாதீங்க...’’ எனச் சொன்னான்.

பாறையை உடைத்தபடியே வழிப்போக்கனை நிமிர்ந்து பார்த்த முதியவர்...

“தம்பி! நீதான் என்னைக் கிண்டல் பண்றே...! சின்ன உளி... சின்னச் சுத்திதான் என்கிட்ட இருக்கு... இதைக் கொண்டு இன்னைக்கு நான் உடைக்கிறேன். எனக்குப் பிறகு என் மகன் உடைப்பான்... அதுக்குப் பிறகு அவன் மகன், மகள் உடைப்பாங்க... இன்னைக்கு இல்லாட்டாலும்... ஒரு நாள் இந்தப் பக்கம் பாதை வரும்... அதுலே என் தலைமுறையைச் சேர்ந்தவங்க எளிதா நகரத்துக்குப் போவாங்களா இல்லியா... அதுக்கனா முயற்சியைத்தான் நான் தொடங்கி இருக்கேன்’’ன்னு உறுதியாச் சொன்னாரு. வாயாடைத்துப் போன வழிப்போக்கன் தன்னம்பிக்கை உள்ள முதியவரை கண் சிமிட்டாமல் அப்படியே பார்த்துக்கிட்டே நின்றான். இப்பச் சொல்லுங்க... நாம செய்யுற முயற்சி சின்னதா. பெரிசா அடுத்தவங்க என்ன சொல்வாங்க இதைப் பத்தியெல்லாம் எப்பவும் கவலைப்படாதீங்க. இன்னைக்குத் தொடங்குங்க... நாளைக்கு இல்லேன்னாலும் ஒரு நாள் கட்டாயம் மாற்றம் வரும்.

உலகத்திலே ஏற்பட்ட எல்லா மாற்றமும் வளர்ச்சியும் அப்படி வந்ததுதான்... கவலைப்படாமல் காலைத்தூக்கி வைங்க... நடப்பது நாலாயிரம் கிலோமீட்டரா இருந்தாலும் எடுத்து வைக்கிறது ஒரு அடிதான்... செல்வம் நீ சேமிக்க நினைச்சதுலே தப்பே இல்லே. எல்லாருமே சேமிச்சு வைக்கிறது நல்லதுதான்.

இப்ப சொல்லுங்க! மாணிக்கம், மல்லிகா... செல்வம் நினைச்சது முடியுமா... முடியாதா? இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள் “முடியும்’’

- மீண்டும் வருவார் கோமாளி

Share