Home முந்தைய இதழ்கள் 2020 செப்டம்பர் 2020 கதை கேளு.. கதை கேளு..: யானைக்கு விருந்து
வெள்ளி, 04 டிசம்பர் 2020
கதை கேளு.. கதை கேளு..: யானைக்கு விருந்து
Print E-mail

விழியன்

வயதான அந்த யானை ஆடி அசைந்து நடந்து வந்தது. வழக்கமாகச் செல்லும் பாதையில் தான் நடந்து வந்தது. திடீரென ‘கீச் கீச்’ என சத்தம். சுற்றி முற்றுப் பார்த்தது. பக்கத்தில் இருந்த மரங்களில் பார்த்தது. மெல்லத் திரும்பி பின்னாடியும் பார்த்தது. யாரும் காணவில்லை என்று திரும்பவும் நடக்க முன்னங்காலினை எடுத்து வைக்கும் போது, திரும்பவும் ‘கீச்’ குரல். இப்போது தரையில் இருந்து வருவது போல இருந்தது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அங்கே இரண்டு எறும்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் ‘எறும்புகள் தன்னை அழைத்து இருக்குமா?’ என்கிற குழப்பமும் இருந்தது.

“யானையாரே.. யானையாரே! உங்களைத்தான்’’

“யாரது எறும்புகளா?’’

“என் பெயர் அம்பு, இவன் என் தோழன் தம்பு. நேற்று மரம் ஒன்றில் ஏறும்போது வழுக்கி, கீழே விழுந்துவிட்டான். இரவில் எதுவும் தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் இரண்டு கால்கள் உடைந்து-விட்டன. இவன் வேறு கடுமையான உழைப்பாளி. சில வாரங்களில் மழைக்காலம் வருகின்றது. அதற்குள் நிறைய உணவுகளைச் சேமிக்க வேண்டும். உணவினைத் தேடிப் போயே தீருவேன் என்கின்றான். அப்படிப் போனால் கால் இன்னும் மோசமாகிவிடும். சொன்னால் கேட்கமாட்டேன் என்கின்றான்.’’

“அம்பு,’’ நான் என்ன செய்ய வேண்டும். மீதம் இருக்கும் கால்களையும் நசுக்க வேண்டுமா?’’ என்று கேட்டுச் சிரித்தது யானை.

“அட.... ஒரு பெரிய ஆளுகிட்ட உதவி கேட்க வந்தா இப்படி கலாய்க்கின்றீர்களே. அங்கே தூரத்தில் ஒரு மலை இருக்கே... அதன் அடிவாரத்தில் ஒரு வெட்டுக்கிளிச் சாமியார் இருக்கின்றது. அதனிடம் சென்று மந்திரித்து வந்தால் ஒரே நாளில் குணமாகிவிடும். எங்களை அந்த மலை அடிவாரத்தில் இறக்கிவிட முடியுமா?’’ என்று கேட்டது அம்பு. சிரித்தபடி யானை சம்மதித்தது. யானைக்கு வேறு திட்டம் இருந்தது.

யானையின் வலது காலில் இருக்கும் நகத்தில் ஏறி முழங்கால்வரை சென்றன. தொப் என விழுந்தன. வலது கால் வழியே ஏறலாம் என முயன்றன. தொப்பென விழுந்தன.

“என்னப்பா முடியலையா? என் முன்னாடி வாங்க’’ என்றது யானை. தன் தும்பிக்கையை நீட்டியது. அதன் மீது ஏறியதும் தன் தும்பிக்கையைத் தூக்கி ஆட்டம் காட்டியது. இரண்டு எறும்புகளும் தடுமாறி யானையின் தன் நெற்றியில் வந்து அமர்ந்தன. “என்னப்பா பயந்துட்டீங்களா?’’ என்றது.

ஆடி அசைந்து மலை அடிவாரத்தை நோக்கி நடந்தது. மேலே இருந்த இரண்டு எறும்புகளுக்கும் படு உற்சாகம். இவ்வளவு உயரத்தில் இருந்து காட்டினைப் பார்த்ததே இல்லை. மலை அடிவாரத்தை நெருங்கும்போது ஒரு சாலைச் சந்திப்பு வலது பக்கமும் இடது பக்கமும் பிரிந்தது. வலப் பக்கம் திரும்புவதற்குப் பதில் இடப் பக்கமாகத் திரும்பியது யானை. “யானையாரே யானையாரே...’’ எனக் கத்தின இரண்டு எறும்புகளும். “கொஞ்சம் பொறுமையாக வாங்க எறும்புகளா’’ என்றது யானை.

இதற்கு இடையில் அந்தச் சந்திப்பில் ‘யானையாரே யானையாரே’ என கத்தியதை மட்டும் சில எறும்புகள் கேட்டுவிட்டன. அவை சுமார் எட்டு எறும்புக் கூட்டங்களுக்குத் தகவல் கூறின. மொத்தம் எட்டாயிரம் எறும்புகள் ஒன்று கூடின. நம் எறும்புக் கூட்டத்தில் இருந்து யானை  கடத்திச் சென்ற  எறும்பைக் காப்பாற்றி, அதைத் தண்டிக்க வேண்டும்’’ என்று பேசின. யானை எத்தனை பலம் வாய்ந்தது என யோசிக்கவில்லை. துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. இரண்டு எறும்புகளுடன் யானை சென்ற பாதையில், எல்லா எறும்புகளும் வரிசையாகச் சென்றன.

அரைமணி நேரத்தில் எதிரே யானை வந்தது. தலையில் மிகவும் மகிழ்ச்சியாக அம்புவும் தம்புவும். எதிரே வந்த எறும்புப் படை “நில்...’’ என்று ஒருமித்த குரலில் கத்தியது. எதுவும் புரியாமல் யானை நின்றது.

“என்ன தைரியத்தில் எங்கள் கூட்டத்தில் இருந்து இருவரைக் கடத்தினீர்கள் யானையாரே? சின்னப் பிராணிகள் என்று இளக்காரமா?’’ என்றது எறும்புப்படையின் தலைவன். யானைக்குப் புரிந்துவிட்டது. தும்பிக்கை வழியே மேலிருந்து அம்பு மட்டும் இறங்கியது.

“மாமா. நாங்கள் தான் அவரிடம் உதவி கோரினோம். வெட்டுக்கிளிச் சாமியாரிடம் மந்திரம் போடலாம் என்று உதவி கேட்டோம். அதற்கு யானையார் தான், முதலில் தம்புவிற்கு மருத்துவம் செய்வோம் என்றது. இதோ இந்தச் சாலையின் முனையில் இருக்கும் மருத்துவரான ராட்சதப் பல்லியிடம் அழைத்துச் சென்றது. பல்லியார் தழைகளை வைத்து சின்ன கட்டுப் போட்டுள்ளார். இது தான் சரியான சிகிச்சை என்று  புரிந்தது மாமா. யானையார் உதவிதான் செய்தார். இப்போது கூட வீட்டில் விடுவதற்காகத்தான் எங்களை அழைத்து வருகின்றார். விரைவில் நம்ம பகுதியில் ஒரு மருத்துவமனை திறக்கவும் யானையார் பரிந்துரை செய்துள்ளார்.’’

“அடடே....  மன்னித்துவிடுங்கள் யானையாரே’’ என்றது தலைவன் எறும்பு.

போவது தான் போகின்றோம் என எல்லா எறும்புகளையும் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு ஆடி அசைந்து சென்றார் யானையார். எட்டாயிரத்து இரண்டு எறும்புகளும் சிரித்து மகிழ்ந்து வந்தன. யானையாரும் தான். “நம்ம யானையாருக்கு அடுத்த வாரம் சிறப்பான ஒரு விருந்து கொடுக்கணும்’’ என்று எறும்புகள் பேசிக்கொண்டன.

Share