Home முந்தைய இதழ்கள் 2020 அக்டோபர் 2020 பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!
ஞாயிறு, 05 பிப்ரவரி 2023
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!
Print E-mail

அன்பார்ந்த பேத்தி, பேரன்களே,

எல்லாரும் எப்படி இருக்கிங்க?

“கொரோனா காரணமாக எவ்வளவு நாள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருப்பது. ‘போர்’ அடிக்குது தாத்தா, அப்பா, அம்மாவும் எவ்வளவுதான் எங்களோடு இருப்பாங்க - சொல்லிக் கொடுப்பாங்க?

இந்தக் காலகட்டம் எங்களுக்குத் தான் ரொம்ப கொடுங்காலமாக இருக்கிறது.

நேரம் பறக்கிறது (Time Flies) என்றெல்லாம் சொல்வது எங்களைப் பொறுத்தவரை உண்மையே இல்லை! நேரமே போக மாட்டேன் என்கிறது! எவ்வளவு நேரம் விளையாடுவது?

கைத் தொலைப்பேசியே (Cell phone) பல நேரங்களில் எங்களைத் தனிமைப்படுத்திவிடுகிறது!

பள்ளிக்கூடம் எப்ப திறப்பாங்க? பழகின நண்பர்களுடன் பழையபடி வகுப்பறையில் அமர்ந்து, பாடம் படிக்கும் ‘அந்த நாளும் வந்திடாதோ.. ’ என்ற ஏக்கத்துடன் இருக்கிறோம்..

பள்ளி திறக்கப்படும் என்று ஒரு நாள் செய்தி - மறு நாள் வேறு ஒரு செய்தி. இந்தக் குழப்பம் வேறு புதிய தலைவலி எங்களுக்கு” என்று நம் மாணவக் கண்மணிகளாகிய நீங்கள் ‘மூக்கால் அழுவது’  எனக்குப் புரிகிறது!

பள்ளிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் பழையபடி திறக்கும் என்று நம்புவோமாக!

அப்போது நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேணும் தெரியுமா?

அதற்காகத் தான் இந்தக் கடிதத்தை எங்கள் செல்லங்களுக்கு தாத்தா எழுதுகிறேன்.

கூட்டம் கூட்டமாக நெருக்கியடித்து அமரவோ, சேரவோ கூடாது; தள்ளித் தள்ளி இருக்கணும்.

முகக்கவசம் மிக மிக முக்கியம். விளையாட்டாகக் கூட அதனைக் கழற்றி வைத்துவிட்டு நீங்கள் ‘ஜாலி’யாக இருக்கலாம் என்று நினைக்கக் கூடாது!

‘கிருமி நாசினி’ என்னும் தடுப்பு மருந்தினைக் கையில் தடவிக் கொண்டு செல்லுதல் அவசியம்.

வீட்டிற்குப் போனவுடன் கை கால்கள் கழுவுவது - சோப்புப் போடுதல் ரொம்ப ரொம்ப அவசியம்.

முன்பு மாதிரியெல்லாம் ஒருவருக்கொருவர் கை கொடுத்து, கட்டிப்பிடித்து விளையாடுதல் இவற்றை அறவே மறந்துவிட வேண்டும்.

மகிழ்ச்சியாக இருங்கள்! எதைச் செய்தாலும் அதனை ஈடுபாட்டோடு செய்யுங்கள்.

உண்ணுதலா? விளையாட்டா? பாடம் படித்தலா? எதுவாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் முழுமையாக உங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நல்ல பயன் ஏற்படும் - இல்லையா?

அப்பா, அம்மா - குடும்ப நிலை பற்றியெல்லாம் அறிந்து அவர்களைச் சங்கடப்படுத்தாமல், ‘எனக்கு அது வேணும், இது வேணும் என்று கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கும் கவலைக்கும் ஆளாக்கக் கூடாது.

இவை எல்லாவற்றையும் விட, மிக மிக முக்கியம் என்ன தெரியுமா? ஆசிரியர்களோ, அப்பா, அம்மாவோ ஏதாவது சொன்னால் உடன் உணர்ச்சிவயப்பட்டு கோழைகள் போல் ‘இனி இந்த உயிர் எதற்கு?’ என்று முடிவுக்கு வரக் கூடாது! கொஞ்ச நேரத்திற்கு உடனே வேறு வேலை பாருங்கள். தப்பித் தவறிக் கூட தவறான முடிவுகள் எடுத்து பெற்றோரையும், மற்றவர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடக் கூடாது.

திருத்தம் தான் தேவை. முடிவு அல்ல; எனவே நம்பிக்கையுடன் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும்!

பாடம் புரியவில்லை என்றால், பிறகு படித்துப் புரிந்துகொள்ளலாம்; கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இந்தத் தேர்வில் தோல்வி என்றால் அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெறுவோம் என்று உங்களை நீங்களே துணிவுடன் தேற்றிக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளப் பழகிட வேண்டும்!

உங்கள் எதிர்காலம் பற்றி எங்களுக்கெல்லாம் எவ்வளவு  கவலையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது?

அதனை ஒரு போதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது செல்லங்களே!

“எதையும் சந்திப்போம்!

முறையாகச் சிந்திப்போம்!

இறுதியில் வெற்றியைத் தட்டிப் பறிப்போம்!” என்றே நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் புரிகிறதா?

உங்கள் பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share