குண்டு மல்லி! | |||
|
செடியினிலே இதழ்விரித்துக் குண்டு மல்லியே - பூத்துச் சிரித்துமனம் கவர்ந்திழுப்பாய் குண்டு மல்லியே!
நெடுந்தொலைவு வரையினிலும் குண்டு மல்லியே - காற்றில் நிறைந்துமணம் கமழ்ந்திருப்பாய் குண்டு மல்லியே!
வடிவினிலே அம்பினைப்போல் குண்டு மல்லியே - மொட்டில் வான்நோக்கி நிமிர்ந்திருப்பாய் குண்டு மல்லியே!
கடும்பகலும் அகன்றபின்னே குண்டு மல்லியே - அந்திக் கருக்கலிலே அவிழ்ந்திருப்பாய் குண்டு மல்லியே!
உடையிலையுள் இடையசையக் குண்டு மல்லியே - மெச்சும் ஒயில்நடனம் புரிந்திருப்பாய் குண்டு மல்லியே!
நடுஇரவில் நிலவொளியில் குண்டு மல்லியே - முத்து நகையமுதம் சொரிந்திருப்பாய் குண்டு மல்லியே!
பொடிந்துமண்ணில் விழுந்திடினும் குண்டு மல்லியே - உன்றன் பொலிவினுக்கோர் உவமையில்லை குண்டு மல்லியே! - தளவை இளங்குமரன், இலஞ்சி
|