Home முந்தைய இதழ்கள் 2020 நவம்பர் 2020 பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

என்ன கொரோனா கொடுந்தொற்று பரவியுள்ள _ இந்தக் காலகட்டத்தில் _ மிகவும் விழிப்புடன் கவனமாக, வெளியில் செல்லுவதை பெரும்பாலும் தவிர்த்து, முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக் கழுவி, நல்லா சாப்பிட்டு, நல்லா விளையாடி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்கிறீர்களா?

பள்ளி எப்போது திறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கொரோனா கொடுந்தொற்று குறைவதுபோலத் தோன்றினாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நீங்கள் எல்லோரும். கவனம்தானே!

இந்த மாதம் _ நம்ம இயக்கத்திலே முக்கியமானதொரு மாதம், தெரியுமில்லே...!

1924இல் நவம்பரில்தான் நாமெல்லாம் பிறக்கறதுக்கு முன்பே பெரியார் தாத்தா, ஜாதி _ தீண்டாமை என்றும் பெயரால், கீழ்ஜாதியினர் என்று சொல்லி கோயில் தெருக்களில் நடப்பதற்கு நம் மக்களில் ஒரு பிரிவினரைத் தடுத்ததை எதிர்த்து நடந்த ‘வைக்கம் சத்தியாகிரகத்தில்’ (கேரளாவில் உள்ள வைக்கம்  என்ற ஊரில் நடைபெற்றது) குதித்து, அதில் வெற்றி அடைந்தார். ‘கீழ்ஜாதி’ என்று ஒடுக்கப்பட்ட நம் மக்களுக்குரிய தெருக்களில் நடக்கும் உரிமையை வென்றெடுத்த போராட்டத்தின் வெற்றி விழா கொண்டாடிய மாதம் நவம்பர் அல்லவா?

அதே நவம்பர் மாதத்தில் 26ஆம் தேதி, அந்த ஜாதியை ஒழிக்க நாடே அதிரும்படியாக நாம் கண்டிராத ஒரு கடுமையான போராட்டத்தை அறிவித்தார் பெரியார் தாத்தா!

அரசு ஜாதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதிகளை கொளுத்தச் சொல்லி போராட்டம் அறிவித்தார்!

உடனே மத்திய அரசு மூலம் தமிழ்நாடு அரசு ஓர் அவசரச் சட்டத்தைப் போட்டு மிரட்டியது. சட்டத்தின் நகலைக் கொளுத்தினால் 3 ஆண்டுகள் கடுங்காவல், 1000 ரூபாய் அபராதம் என்று அச்சட்டம் கூறியது.

பெரியார் தாத்தா பயப்படுவாரா என்ன? உடனே சிங்கம் கர்ஜித்தது மாதிரி கர்ஜித்து, “ஜாதி ஒழிக்கப்படுவதற்கான இந்த அறப்போராட்டத்-திற்காகத் தூக்கு தண்டனை தந்தாலும், ஆயுள் தண்டனை தந்தாலும் பயப்பட மாட்டோம், பின்வாங்க மாட்டோம்’’ என்று கூறி, நவம்பர் 26 (1957) போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று சொன்னார்!

10 ஆயிரம் பேர் ஆண்களும், பெண்களுமாகக் கலந்துகொண்டு அரசியல் சட்ட நகலை எரித்தனர். 3000 பேரை மட்டும் கைது செய்து அவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. பலர் சிறைக்குள்ளேயே உயிர் விட்டனர் _ பலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

சுமார் 18 பேர் சிறைக்கு உள்ளேயும், விடுதலை அடைந்து வெளியேயும் உயிர்த் தியாகம் செய்தார்கள். லட்சியப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்த வீரர்கள் அவர்கள்!

வேறு எங்கேயாவது இதுபோல நடந்ததுண்டா? ஜாதியை ஒழிப்பதற்கு பல மாதங்கள் தண்டனை, உயிர்த்தியாகம் எல்லாம் தந்தது பெரியாரின் இராணுவத் தோழர்களான கருஞ்சட்டைத் தோழர்கள் தானே!

உங்களைப் போல் ஒரு சிறுவன் _ பால் வடியும் முகம் _ அவருக்கு ஒன்றரை ஆண்டு தண்டனை _ லால்குடி வாளாடி பெரியசாமி என்று பெயர்.

அப்போதைய கவர்னர் விஷ்ணுராம்மேதி என்பவர், வேலூர் சிறையைப் பார்வையிட அவரே வந்தார்.

கைதிகள் அணிவகுத்துச் சென்றனர். இந்தச் சிறுவன் என்ன குற்றம் செய்து இப்படி உள்ளே வந்தான் என்று அறிய ஆவல் கொண்டு, அவன் மேல் பரிதாபம் கொண்ட கவர்னர் (ஆளுநர்) அச்சிறுவனை அழைத்தார்!

“ஏம்பா, நீ என்ன குற்றம் செய்து விட்டு வந்தாய்?’’

“நான் குற்றம் செய்யவில்லை’’

“பின்...?’’

“எங்க தலைவர் பெரியார் ஜாதியை ஒழிக்க சட்டத்தை எரிக்கச் சொன்னார். அதன்படி எரித்தேன்; தண்டித்தார்கள்; அதனால் வந்தேன்.

“அப்படியா! ஏதோ தவறாக, குற்றம் என்று தெரியாமல் செய்து உள்ளே வந்துவிட்டாய். இந்த சிறு வயதில்! உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். வெளியே போய் இனிமேலாவது இப்படி குற்றம் செய்து ஜெயிலுக்குள் வராதே’’ என்றார்!

அதற்கு ‘சட்’டென்று சிறுவன் பெரியசாமி, “அய்யா கவர்னர் அவர்களே, எங்க தலைவர் பெரியார் மீண்டும் சட்டத்தைக் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவேனுங்க! தலைவர் கட்டளைப்படிதான் நாங்கள் எல்லாரும் நடப்போமுங்க’’ என்றதைக் கேட்டு அசந்து அதிர்ந்துவிட்டார் கவர்னர்!

“இப்படி ஓர் இயக்கமா! இப்படியும்  தொண்டர்களா!’’ என்று மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே பெருமூச்சு விட்டு வெளியே போனார் அன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் விஷ்ணுராம்மேதி (அசாம் மாநிலத்தவர்).

அப்படிப்படட வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நவம்பர் 26இல் நடந்தது!

ஆனால், இன்னமும் ஜாதி ஒழியவில்லையே தாத்தா என்று நீங்கள் முணுமுணுக்கிறீர்கள்... கேட்குது எனக்கு!

அது பல ஆயிரம் ஆண்டுகளாக மூளையில் படர்ந்த நோய் _ உடனே ஓடிவிடாது தொடர்ந்து போராடணும்!

ஜாதிக்கு ஏது தனி அடையாளம்? எங்காவது ஜாதிக்கு ஜாதி ரத்தம் தனியாவா இருக்கு? இல்லையே!

அறிவியல்படி ரத்தம் A, B, AB and O குருப், பாசிட்டிவ், நெகடிவ் என்றுதானே இருக்கு?

அடிபட்டு உடலில் இரத்தம் ஏற்றும்போது அந்தந்த ஜாதி ரத்தத்தையா அந்தந்த ஜாதியினருக்கு ஏற்றுகிறார்கள்? _ அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்கு, பிள்ளை ரத்தம் பிள்ளைக்கு, முதலியார் ரத்தம் முதலியாருக்கு என்று தனித்தனியாக உள்ளதா?

இதிலிருந்தே ‘ஜாதி என்பது பொய்’ என்று புரியவில்லையா?

எனவே, ஜாதியை ஒழிக்க சமத்துவத்துடன் பழகுவோம்! பெரியாரைக் கற்று ஒழுகுவோம்! (பின்பற்றுவோம்!)

உங்கள் பிரியமுள்ள ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share