Home முந்தைய இதழ்கள் 2020 நவம்பர் 2020 கதை கேளு.. கதை கேளு.. : சட்டென்று மாறுது வானிலை
திங்கள், 26 செப்டம்பர் 2022
கதை கேளு.. கதை கேளு.. : சட்டென்று மாறுது வானிலை
Print E-mail

ஆனந்திக்கு அந்தப் புதிய ஊர் அறவே பிடிக்கவே இல்லை. அவளின் அப்பா இந்த ஊரில் தான் தையல் கடை வைத்துள்ளார். மூன்று ஊர் தள்ளி இவர்கள் இருந்தார்கள். ஆனால் தினமும் வந்து போவது சிரமமாக இருந்ததால் இந்தப் புதிய கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார்கள். குறுகலான ஒரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து இருந்தார் அப்பா. மே மாத நடுவில் இந்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அய்ந்தாம் வகுப்பு நண்பர்களை எல்லோரையும் விட்டு வருவது தான் ஆனந்திக்கு வருத்தமே. கோடையில் என்னென்ன விளையாடுவது என்ற ஒவ்வொரு திட்டமும் தவிடுபொடியானது. தெருவில் அவள் வயதினை ஒத்த பையன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவனும் ஆண் பசங்களுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்குச் சென்றுவிடுவான். ஆனந்திக்கும் மைதானத்திற்குச் செல்ல ஆசை தான். ஆனால், எங்கே இருக்கின்றது என தெரியவில்லை. இன்னும் யாரேனும் ஒரு கூட்டாளி இருந்தால் போய்விடுவாள்.

ஆலமரப் பள்ளி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட அந்தப் பள்ளியில் சோமு மாமாவின் உதவியால் இடம் கிடைத்தது. தலைமை ஆசிரியை மிகவும் கனிவாகப் பேசினார். முன்னர் படித்த பள்ளியைவிட இங்கே விளையாட்டுத் திடல் பெரியதாக இருந்தது. சில கட்டடங்கள் புதிதாகவும் சில கட்டடங்கள் மிகப் பழையதாகவும் இருந்தன. சில அறைகளில் வெறும் பழைய டேபிள்கள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி திறந்த அன்றுதான் அந்த மேசை இருக்கைகளை வெளியே கொண்டுவந்து, மாணவர்கள் நடக்கும் வராண்டாவில் போட்டார்கள். ஆனந்திக்கு அங்கே என்ன வகுப்பு வரப்போகின்றது என்ற ஆவல். அவள் வகுப்பறைக்குப் பக்கத்து அறை தான் அது. “ஹேய், அங்க எல்.கே.ஜியும் யூகேஜியும் வருதாம்பா’’ என்றாள் முதலில் அறிமுகமாகிய லதா. லதாவின் அருகில்தான் அமர்ந்தாள் ஆனந்தி. முதல் நாள் பள்ளிக்கு அரை மணி நேரம் முன்னரே வந்துவிட்டாள். லதா பள்ளியை சுற்றிக் காண்பித்தாள்.

முதல் பாடவேளைக்கு ஆசிரியர் வர நேரமாகிவிட்டது. ஆனந்தியும் சதீஷும் மட்டும் அந்த வகுப்பில் புதிதாக இணைந்துள்ள மாணவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஏற்கெனவே அய்ந்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் தாம். ஆனால், இது நடுநிலைப் பள்ளி என்பதால் எல்லோருக்கும் இது புதுசு தான். “இன்னும் நம்ம பாடநூல் எல்லாம் வரல ‘அதனால முதல் வேலையா அவங்க அவங்க விடுமுறையில் எப்படி நாள்களை செலவு செஞ்சீங்கன்னு கட்டுரை எழுதுங்கன்னு’’ சொல்லிவிட்டு அய்ந்தாம் வகுப்பில் மாணவத் தலைவனாக இருந்தவனை, வகுப்பினை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே சென்றார் ஆசிரியர். “இந்த விடுமுறை நாள் பற்றி எழுதுவதைவிட மிகப்பெரிய கடுப்பு எதுவுமில்லைப்பா’’ என்று சலித்துக்கொண்டாள் லதா.

பக்கத்து வகுப்பறையில் இருந்து அழுகைச் சத்தம் ஆரம்பித்தது. ஆறாம் வகுப்பு குழந்தைகளின் எல்லாக் காதுகளும் பக்கத்து அறையிலேயே இருந்தன. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நால்வரும் எழுந்து பக்கத்து அறையை நோக்கிச் செல்ல வகுப்பே அவர்களைப் பின் தொடர்ந்தது. உள்ளே ஆசிரியர் ஒருவர் துள்ளி வெளியே ஓட முயற்சி செய்த குழந்தையை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். நிலைமை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது. உடனே எல்லோரும் வகுப்பறைக்குள் நுழைந்தனர். ஆளுக்கு ஒரு குழந்தையைக் கவனிக்க ஆரம்பித்தனர். அவர்களின் அருகே அமர்ந்து கொண்டனர். ஆனந்தி அமைதியாக ஓர் ஓரத்தில் சிரித்தபடி அமர்ந்திருந்த குழந்தைக்கு அருகே அமர்ந்தாள். ‘வீல் வீல்’ என்று அழுத குழந்தையைப் பார்த்து “உன் அண்ணனும் இதே ஸ்கூல் தானா?’’ என்றதற்கு “ஆமாம்’’ என்று சொல்லித் தலையாட்டியது. “லதா, நாலாம் வகுப்புல போய் சாந்தனைக் கூட்டிகிட்டு வா. வேணி மிஸ் கூட்டிட்டு வரச்சொன்னாங்கன்னு சொல்லு’’ என்றதும் லதா ஓடினாள். சில நிமிடங்களில் சாந்தனுடன் வந்தாள். அண்ணனைப் பார்த்ததும் குழந்தை இன்னும் “வீலென’’ கத்தியது. அவன் அருகே வந்ததும் அமைதியானது. “சாந்தன், உன் வகுப்புக்குக் கூட்டிகிட்டு போய் பக்கத்துல உக்காத்தி வெச்சிக்கோ’’ என அனுப்பி வைத்தார்.

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் ஆரம்பித்தாலும் இன்னும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வரவில்லை போலும். வகுப்பில் அவர்களுக்கு விளையாட்டுக் காட்ட எந்தப் பொருளும் இல்லை. அங்கன்வாடி பள்ளியும் அருகில் இல்லை. நிறைய குழந்தைகள் கடந்த வருடம் அங்கே தான் இருந்திருக்காங்க போல. இந்த குட்டிக் குழந்தைகளை ஆளுக்கு ஒருவராக அழைத்துச் சென்றனர். ஆனந்தியும் அந்த சிரித்த குழந்தை மட்டும் அந்த வகுப்பில் இருந்தார்கள். “உன் பேரு என்ன பாப்பா?’’ என்றதற்கு சிரித்தாள். அவள் அழவில்லை. சமர்த்து பாப்பா. இடைவேளை மணி கேட்டது. “உனக்கு சூச்சூ வருதா?’’ என்றாள். “ஆமாம்’’ என்றது போல தலையாட்டினாள். கழிவறைக்கு அழைத்துச்சென்று  அமர வைத்தாள். கை கழுவ வைத்துவிட்டு கூடவே அழைத்துச்சென்றாள் ஆனந்தி. வகுப்பறையை நோக்கி நடந்த போது, ஆனந்தியின் பாவாடையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தாள் அந்தக் குழந்தை. “என்ன பாப்பா, இன்னும் சூச்சு வருதா?’’ என அமர்ந்து கேட்டாள். அந்த குட்டிக்குழந்தை ஆனந்தியைக் கழிவறைக்கு அருகே இழுத்துச்சென்றது. “என்ன?’’ என்று வினவினாள். குழந்தை காட்டிய திசையில் குழாய் ஒன்றில் இருந்து நீர் சொட்டிக்கொண்டு இருந்தது. “நல்லா மூடிவிடணுமா?’’ என்று கேட்டாள். ஆமாமென தலையாட்டினாள். நன்றாகத் திருகிவிட்டதும் சிரித்தாள். அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அவளைத் தூக்கிக்கொண்டே தன் ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்துவிட்டாள் ஆனந்தி. பாதி மாணவர்களைக் காணவில்லை. லதாவையும் காணவில்லை. கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டாள். குழந்தையும் அமர்ந்தது. சில நிமிடங்களில் ஆனந்தியின் மடியில் படுத்து உறங்கியது. வகுப்பிற்கு தமிழ் ஆசிரியர் வந்து முதல் இயலை ஆரம்பித்தார். குழந்தை ரம்மியமாகவே உறங்கியது. அடுத்த வகுப்பு கணிதம்.

மதிய உணவு இடைவேளை மணி....

எல்.கே.ஜி வகுப்பறை வாசலில் பெரிய கூச்சல். சோமு மாமா இருந்தார். “எப்படி எந்த வசதியும் ஏற்பாடும் இல்லாம இந்த எல்.கே.ஜி பசங்கள வரவழைச்சீங்க? அவங்களுக்கு உணவு ஏற்பாடு கூட இல்ல, வகுப்புல பாய் இல்ல, தண்ணி வசதி இல்ல.’’

தலைமை ஆசிரியர் அவரை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். லதா சத்துணவு போடப்படும் திசையினைக் காட்டினாள். அப்போது தான் அந்தக் குழந்தை தன் பெயரைச் சொன்னது. “பூசா’’ என்றாள். அது பூஜாவாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள் ஆனந்தி. ஆனந்தியே மதிய உணவினை பூசாவுக்கு ஊட்டினாள்.  மதியம் வகுப்புகள் இல்லை, “நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து அமைதியாக வாசியுங்கள்’’ என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். பூஜாவிற்கு கதைகளைச் சொன்னாள் ஆனந்தி. பூஜா தன் பையில் இருந்து ஒரு பொம்மையை ஆனந்திக்குக் காட்டினாள். அதற்கும் ஒரு பெயர் வைத்திருந்தாள். பூஜா அந்தப் பொம்மைகளை வைத்துக் கதை கூறினாள். மாலை பள்ளி விட்டபோது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அண்ணன் வந்து “என் வீட்டுப் பக்கத்தில் தான் இருக்கா பூஜா, நான் விட்டுட்றேன்’’ என அழைத்துச்சென்றான்.

அவ்வளவு மகிழ்வாக வீட்டுக்குச் சென்றாள் ஆனந்தி. அம்மாவுக்கு உதவினாள். இரவு ஒன்பது மணிக்கு அப்பா வந்ததும் அவரோடு பேசிக்கொண்டு இருந்தாள். பத்து மணிக்கு எதோ நினைவு வந்து வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தில் அமர்ந்தாள்.

“என்னடி இத்தனை மணிக்கு?’’ என்றார் அம்மா.

“என் ஃப்ரெண்டுக்காக ஆடை தைக்கிறேன்’’ என்றாள்.

உடனே அப்பா, “நான் தெச்சுத் தரேனே கண்ணு’’ என்றார்.

“இல்லைப்பா, என்ன இருந்தாலும் நானே தைக்கிற மாதிரி வராது இல்ல!” என்று பூஜாவின் பொம்மைக்கு புதிய ஆடையைத் தைத்தாள். நடு இரவில் அவள் அம்மாவின் கைபிடித்துக்-கொண்டு “அம்மா, இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’ என்றாள்.

சட்டென்று மாறுது வானிலை.

Share