Home முந்தைய இதழ்கள் 2020 நவம்பர் 2020 இயற்கை : கீச்சொலி கேட்போமா?
திங்கள், 26 செப்டம்பர் 2022
இயற்கை : கீச்சொலி கேட்போமா?
Print E-mail

தமிழ் கா.அமுதரசன்

“பிஞ்சுகளே... நலமா? இந்த ஊரடங்கு காலத்தில் எல்லோரும் வெளியே சுத்தாமல்  வீட்டிலேயே இருந்து இருப்பீங்க, இல்லையா? மகிழுந்து, பேருந்து என எந்த வாகன இரைச்சலும் இல்லாமல் அமைதியாய் இருந்ததா? ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு வெளியே நாம தினமும் கேட்ட ஒலி பறவைகள் ஒலியாகத் தான் இருந்து இருக்கும். நம் வீட்டைச் சுற்றி காகம், குருவி, சிட்டுக்குருவி, புறா, காடை, மைனா, கிளி எல்லாம் பார்த்திருப்போம். இங்கே எவ்வளவு பறவை இனங்கள் இருக்குன்னு தெரியுமா? இந்தியாவில் மட்டும் 1349 பறவை இனங்கள் இருக்கு. தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 297 வகையான பறவை இனங்கள் இருக்கு. பறவைகளைப் பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்ல!

விவசாயிகளுக்கும் பறவைகள் தோழர்களாவே ஆகவே உள்ளன. இயற்கையாகவே இவை புழு, பூச்சிகளை அழிப்பதால், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை. இதற்காகவே கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் பறவைகளுக்காக ஆங்காங்கே கூடுகள் உருவாக்கி வைத்துள்ளனர்.

இன்னொன்று தெரியுமா? பறவைகள் மிக இனிமையாகப் பாடக் கூடியவை. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிளாக் பேர்டு (Nilgiri black bird) என்ற பறவை மிக இனிமையாகப் பாடக்கூடியது. அதே போல சிரிக்கும் சிட்டு என்னும் பறவை, குழந்தைகள் சிரிப்பதைப் போலவே ஒலி எழுப்பும். பிரைன் பீவர் எனப்படும் பறவை ஒலி எழுப்பினால் அந்த ஒளி  ஒலி பிரைன் பீவர், பிரைன் பீவர் என்னும் வார்த்தையை உச்சரிப்பது போலவே  இருக்கும்.

ஸ்பாட்டட் டேபிள்ஸ் எனப்படும் பறவை ஒலியெழுப்பினால் ‘பீட்-யூ... பீட்-யூ...’ என்பதைப் போலவே இருக்கும். ராபின் எனும் பறவை, இனப்பெருக்கக் காலத்தில் மிக நீண்ட பாடலையே பாடும். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பறவைகள் எப்போதும் ஒரே வகை ஒலியையே எழுப்புவதில்லை. தான் இருக்கும் இடத்தை தன் இனத்திற்கு அறிவிக்கவும், தங்கள் கூட்டத்தில் சிலவற்றைக் காணாவிட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்துக் காலத்தில் அபாயத்தை அறிவிப்பதற்கும் விதவிதமாய் ஒலி  எழுப்பும்.  பறவைகள் சூழலியல் சுட்டிக்காட்டிகள். நாம் வசிக்கும் பகுதியில் அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள் அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை நெடுங்காலமாகத் தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம் அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு அந்த இடம் வாழத் தகுந்ததா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதைப் பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிந்து கொள்ளலாம்.’’ “அடேங்கப்பா! பறவைகள் பற்றி இவ்வளவு இருக்கான்னு தெரியாம போச்சே!’’

இது மட்டுமல்ல பறவைகள் பற்றி பட்டப் படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள், என நிறைய இருக்கு பறவைகளைப் பற்றிய படிப்பிற்கு (ORNITHOLOGY) பறவையியல் என்று பெயர். WILD LIFE INSTITUTE OF INDIAனு உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு தனியாக கல்லூரியே நடத்துது.  தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் SALIM ALI CENTRE FOR ORNITHOLOGY AND NATURE HISTORY என்கிற பெயரில் மத்திய அரசுக் கல்லூரி நடைபெற்று வருகிறது.

பறவைகளின் இனிமையான ஒலிகளைப் பதிவு செய்ய நிறைய கருவிகளும், தொழில்நுட்ப வசதிகளும் இருக்கு. உலகம் முழுக்க உள்ள பறவைகளின் ஒலிகளை-, xeno-canto, eBird   போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆவணப்படுத்தி வச்சு இருக்காங்க. இந்த வலைத்தளங்களில் பறவை இனங்களின் வகைகள் உள்பட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். “பிஞ்சுகளே, உங்க ஊர்ல புதிதாக ஏதாவது பறவை பார்த்து இருக்கீங்களா? உங்க வீட்டிலோ அல்லது பள்ளி, கல்லூரி, தோட்டம், ஏரி, குளம் போன்ற பொது இடங்களில் பார்க்கும் பறவைகளைக் கவனித்து www.eBird.org  என்னும் இணையதளத்தில் பட்டியல் இடுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் பறவை இனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நம்ம வீட்டிலேயே பறவைகளுக்கு, தண்ணீர், தானியம் வைத்து மகிழ்வோம். அனைத்துயிர்களும் வாழ்வதற்கான சூழலைப் பேணுவோம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்.

Share