Home முந்தைய இதழ்கள் 2021 ஜனவரி-2021 விபத்தாய் கிடைத்த வெடிமருந்து!
புதன், 12 மே 2021
விபத்தாய் கிடைத்த வெடிமருந்து!
Print E-mail

சீனா என்னும் பெயர் வரக்காரணமே, சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) என்கிற மன்னர்தான். தனது ஆற்றலால் மத்திய தெற்கு சீனாவில் சிறிய நிலப்பகுதியாக இருந்த தனது நாட்டை இன்று சீனா என்ற பெரிய நாடாக மாற்றிய பெருமை இவரைத்தான் சாரும்.

மிகவும் திட்டமிட்டு மிகப்பெரிய நாட்டைத் தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இவர் சீனப்பெருஞ்சுவரையும் கட்டிய பெருமை கொண்டவர்.

இவருக்கு ஒரு பேராசை வந்துவிட்டது, இவ்வளவு பெரிய நாட்டை விட்டுவிட்டுச் செத்துப்போக மனமில்லாமல், “நான் சாகவே கூடாது; அதற்கு மருந்தைக் கண்டுபிடியுங்கள்’’ என்று தனது நாட்டு மருத்துவர்களிடம் உத்தரவிட்டார்.

இவருடைய இந்த முட்டாள் தனமான கட்டளைக்கு எதிர்க் கருத்து தெரிவிப்பவர்களுக்கு மரண தண்டனை அளித்தார்.

சின் ஷி ஹூவாங்கிடம் வசமாக மாட்டிக்-கொண்ட அந்த நாட்டு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மரணமில்லா மருந்தைக் கண்டுபிடிக்க அயராது உழைத்து விழி பிதுங்கியதுதான் மிச்சம்.

மன்னரின் மரணத்தை வெல்ல அல்லும் பகலும் மணிக்கணக்காகப் பாடுபட்டு பல மூலிகைகளையும் பல இரசாயனங்களையும் கலந்து காய்ச்சி பல மருந்துகளை கண்டுபிடித்தும் எந்தப் பலனும் அளிக்கவில்லை.

இவர்களது முயற்சி ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவியது. அவ்வப்போது மன்னர் வந்து இவர்களது ஆராய்ச்சியை மேற்பார்வை இட்டுச் செல்வதால் ஆராய்ச்சி முழு வீச்சில் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

இவ்வாறு பரபரப்பாக நடந்துகொண்டிருந்த இவர்களது மரணமில்லா மருந்துக்கான ஆராய்ச்சியின் போது மூலிகை மருந்துகளைத் தேடிச்சென்ற ஒரு மருத்துவர்  மலைகளில் வித்தியாசமாகக் கிடைத்த இரண்டு பொருள்களை மன்னரின் ஆராய்ச்சிக் கூடத்திற்குக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த மற்ற மருத்துவர்களின் சிறிய கண்கள் பெரிதாய் விரிந்தன. அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

அந்தப் பொருள் என்ன என்று தெரியாமலேயே அதைக் காயவைக்க நெருப்பிற்கு அருகில் கொண்டு சென்றார். லேசாகத் தீப்பொறி பட்டது, பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அவர் கொண்டுவந்தது இயற்கையில் கிடைத்த கந்தக பொட்டாசியம் நைட்ரேட் எனும் வெடியுப்பு ஆகும். அதாவது இன்று பட்டாசில் பயன்படுத்திவரும் அதே வெடிமருந்துக் கலவைதான் இயற்கையாக அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தச் செய்தி உடனடியாக மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது, மன்னர் மிகவும் புத்திசாலி; ஆய்வு மனப்பான்மை உடையவர்.

உடனே மீதமுள்ள வெடியுப்புகளையும் கொண்டு வாருங்கள் என்று கூறி அதனை மூங்கில் குழாயில் அடைத்து நெருப்பைப் பற்றவைத்தார். சில வினாடிகளில் அது பெரும் ஓசையுடன் வெடித்துச் சிதறியது  உலகின் முதல் பட்டாசை ஒரு மன்னர் அவரது கைகளால் வெடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அதன் பின்னால் வெடிமருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன.

10 ஆம் நூற்றாண்டு வாக்கில் சீனர்கள் வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார்கள்.

1295 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற மார்க்கோ போலோ திரும்பி வரும்போது மூட்டை மூட்டையாய் பட்டாசுகளைக் கொண்டு வந்து அய்ரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு வெடிபொருள்கள் உலகமெங்கும் பரவத் தொடங்கின.

பண்டைய சீன அரசர் சின் ஷி ஹுவாங் அவர்கள் மரணமில்லா வாழ்விற்காகக் கண்டுபிடிக்க முயற்சி செய்ததன் விளைவாய் கிடைத்த வெடிமருந்து முடிவில் கிடைத்தது வெடிமருந்துதான் இன்று பல உயிர்களைப் பலிகொள்ள ஏதுவாய் ஏவுகனைமுதல் அணுகுண்டு வரையிலான அறிவியல் கண்டுபிடிப்புக்கும் முன்னோடியாக அமைந்து விட்டது.

Share