Home முந்தைய இதழ்கள் 2021 மார்ச் 2021 பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி
வியாழன், 02 பிப்ரவரி 2023
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

நலமா? எப்படி இருக்கீங்க? கொரோனா-_கோவிட் 19 போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள்!

இன்னமும் அதன் வீச்சு முழுமையாகக் குறைந்துவிடவில்லை.

இப்போது கொரோனாகூட மாறுவேடம் போட்டு மீண்டும் மீண்டும் வந்து நம்மைத் தாக்க முயற்சிப்பதை, தொலைக்காட்சி செய்திகள், ஏடுகளில் வந்துள்ள செய்திகள் _ பெற்றோர்கள், நண்பர்கள் மூலம் நீங்கள் கேள்விப்படவில்லையா?

வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் மூலம் இந்தப் புதிய ‘அவதாரம்’. மாறுவேடம்கூட அது போடுகிறதாம்!

ஆப்பிரிக்காவிலிருந்து மற்றும் வேறு சில நாடுகளிலிருந்தும் (பிரேசில் போன்றவை) அது புதுவேகம் எடுத்து மறுபடியும் நம்மைத் தாக்க வருகிறதாம்!

அதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமல்லவா? அலட்சியமாக இருக்கக் கூடாதென்று ஆசிரியர் தாத்தா சொன்னாரு என்று நீங்கள் உங்கள் அம்மா, அப்பா, வீட்டிலுள்ள அண்ணன், அக்கா, தங்கை எல்லோருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தவறாது சொல்ல வேண்டும்.

அதை எப்படித் தடுப்பது?

முன்னமே சொன்னபடி,

(1)          அடிக்கடி சோப் போட்டு கைகளை நன்றாகக் கழுவுதல்.

(2)          முகக்கவசம் நம் பாதுகாப்பு_ மருந்தில்லா மருந்து, அதை அணிந்து கொண்டுதான் வெளியே வரவேண்டும்; எவரிடமும் பேச வேண்டும்.

(3)          எவரையும் தொட்டு _ கைகொடுத்துப் பழகாமல் _ தள்ளி நின்று பழக வேண்டும்.

(4)          தடுப்பூசிகள் வந்துவிட்டன. முதல் ரவுண்டு போட ஆரம்பித்து, சில மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் _ பணித் தோழர்கள், இரண்டாவது முறையாகவும் (28 நாட்களுக்குப் பின்) போட்டுக் கொண்டுவிட்டார்களே தெரியுமா?

நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமும் வீட்டில் உள்ளவர்களிடமும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்பதைக் கூறத் தவறாதீர்கள்!

சிலர் தேவையில்லாமல் பயந்து ‘சாகிறார்கள்’ _ ஏனோ புரியவில்லை.

பழைய காலத்தில், அம்மை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு வந்து போட மருத்துவ சுகாதாரத் துறையினர் வரும்போது பலர் கதவைச் சாத்திக் கொண்டும், ஓடி ஒளிந்து கொண்டும் _ யாரும் இல்லை என்றும் பொய்விரித்துக் கை விரிப்பார்கள்!

அது வெற்றுப் பயத்தால்தானே? ஊசி போட்டுக் கொண்டால், அதனால் சிலருக்கு உடல்களில் சற்று வலி _ ஜுரம்கூட வரலாம்.

பயப்பட வேண்டியதில்லை. மருத்துவக் குழுவினரே தக்க அறிவுரை வழங்கிதான்  (சுமார் அரைமணி நேரம் வைத்திருந்து பார்த்த பின்பு) எல்லாம் சரி (ளி.ரி.) என்றவுடன்தான் ஊசி போடப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஏற்பாட்டினை கனக்கச்சிதமாகச் செய்கின்றனர்.

இந்தத் தடுப்பூசி _ கொரோனாவுக்கு எப்படி விஞ்ஞானத்தால் _ அறிவியலால் கண்டுபிடிக்கப்-பட்டது?

அறிவியல் வளர்ந்ததால்தானே உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது?

கைதட்டினால், விளக்கேற்றினால், கூச்சல் போட்டால் போய்விடும் என்பதெல்லாம் தவறான மூடநம்பிக்கை!

பேத்திகளே, பேரன்களே! முன்பெல்லாம் அம்மை வார்த்தால் எந்த சிகிச்சையும் செய்யாமல், ஒரு வாழை இலையை விரித்து தரையில் அதன்மீது அம்மை தாக்கியவர்களைப் படுத்துக்கொள்ளுமாறு கிடத்தி விடுவார்கள்!

அம்மை நோயை வாயில்கூட உச்சரிப்பதற்குப் பயப்படுவார்கள்!

“ஆத்தா _ ‘மாரியாத்தா’ எங்க வீட்டுக்கு வந்திருக்கா. முத்து போட்டிருக்கா!’’ என்று சொல்லுவார்கள்! (ஏதோ தூத்துக்குடிக்குப் போய் முத்து வாங்கி வந்து போட்டது மாதிரி).

அது மாதிரி காலரா _ வாந்திபேதி வந்து _ கொள்ளை நோயால் சாவுக்கு இடம் கொடுத்த கொடுமை நீடித்த அக்காலத்தில் _ போதிய தடுப்பூசி _ தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் (சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன்) “காளியாத்தா (அம்மைக்கு மாரியாத்தா, காலராவுக்கு காளியாத்தா என்று பிரித்து வைத்தார்கள்) வந்திருக்கா. கரண்டி எண்ணெய் தந்துவிட்டுப் போயிருக்கா’’ என்று ‘பய பக்தியோடு’ கூறிடுவார்கள். ‘நோ டீரிட்மெண்ட்’ _ சிகிச்சை ஏதும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

ஆரம்ப காலத்தில் அய்ரோப்பிய நாடுகளில் (ஆங்கில) மருத்துவர்களை, மத நம்பிக்கை _ கடவுள் நம்பிக்கையாளர்கள் ஓட ஓட துரத்தி அடித்து விரட்டியுள்ளார்கள்!

ஆண்டவன் முன் செய்த பாவத்திற்காக நோயை தண்டனையாகக் கொடுத்து அனுப்பியுள்ளான்; அதை மனிதர்களாகிய நீங்கள் சிகிச்சை மூலம் தடுக்கலாமா? அது நாத்திகம் அல்லவா? என்று டாக்டர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள்.

கிறிஸ்துவ மதத்தில் ஒரு பிரிவினர்  இப்போதும்கூட நோய் வந்தால் மருந்து சாப்பிடவே மறுத்து விடுவார்கள்! கூடாது; மத விரோதம் என்று நம்பி, வெறும் ‘ஜெபத்தின்’ மூலம் குணமாக்க வேண்டும்; இல்லையேல், ஆண்டவன் கட்டளை, முன்வினைப்பயன்படியோ எப்படியோ பாவத்திற்கு தண்டனையாக மரணத்தை ஏற்க வேண்டும் என்பார்கள்.

இப்போது அதே கிறிஸ்துவத்தில் மனித நேயர்கள் பிறகு உருவாகி, நோய் தீர்க்க மருத்துவமனைகளைப் பல நாடுகளிலும் ஏற்படுத்தி, மனிதத் தொண்டறம் செழிக்க விழைந்தனர்.

அறிவியல்தான் இறுதியில் வெற்றி பெற்றது!

மதத் தலைவர்கள் _ போப்பாண்டவராக  இருந்தாலும், மருத்துவ சிகிச்சை அறிவியல் ரீதியில் _ சங்கராச்சாரியார்களுக்கும் இப்போது மருந்தும், நவீன மருத்துவ வசதிகளும்தானே முக்கியமாக தேவைப்படுகிறது.!

காஞ்சிப் பெரியவா _ பெரிய பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதியாருக்கு இரண்டரை கோடி மதிப்புள்ள மூளை ஸ்கேன் மெஷினை தமிழக அரசில் _ எம்.ஜி.ஆர் அரசில் காஞ்சிக்கே அனுப்பி பரிசோதனை செய்தார்கள் என்பது பழைய கதை!

மருத்துவம் பார்ப்பது இன்றைய அறிவியலில் மிகவும் சுலபம். முன்பு நோய் தடுப்பு முறையே தெரியாது!

இன்று நாம் எப்படி கொரோனாவை எதிர்கொண்டோம்? நோய் தடுப்பு சக்தியை உடலில் (மினீனீuஸீவீtஹ்) அதிகரிக்கச் செய்ய வைட்டமின் சி, மற்ற ஊட்டச்சத்து, சத்துணவு சாப்பிட்டுத்தானே!

இதெல்லாம் முன்பு தெரியாது. அதனால்தான் 100 ஆண்டுகளுக்கு முன் இந்திய சராசரி வயது 30க்கும் கீழே!

இந்த 2021இல் அது நம் நாட்டில் ஆண்களுக்கு 67; பெண்களுக்கு 70!

எப்படி வளர்ந்தது?

அறிவியல்! அறிவியல்!

வளர்ந்த மருத்துவ இயல்!

உடம்பை ‘ஸ்கேன்’ பண்ணி பார்க்கிறோமா, இல்லையா?

கரோனாவையே உறுதி செய்ய ‘ஓம் ரீம்’, ‘ஜெய் காளி’, என்றா கண்டுபிடிக்கிறோம்?

உடல் வெப்பக் கருவி, இருதயத்தில் பிராண வாயுவின் அளவு, நெகடிவ் _ பாசிட்டிவ் டெஸ்ட், அதையும் தாண்டி நுரையீரல் ஸ்கேன் டெஸ்ட் இதெல்லாம் அறிவியலாலா? ஆன்மிகத்தின் மதத்தாலா? என்பதை விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து பார்த்தால் நன்கு புரியும்.

ஆகவே, பேத்திகளே, பேரன்களே!

நீங்கள் அறிவியலைப் படித்தால்  மட்டும் போதாது!

பின் என்ன செய்ய வேண்டும்? அதன்படி அறிவியல் மனப்பான்மையுடன் வாழ இளவயதிலிருந்தே கற்றுக் கொண்டு நடக்க முயலுங்கள்.

அறிவியல் மனப்பான்மை என்பது வேறொன்றும் இல்லை.

காரண காரியத்துடன் எதையும் கேட்டு, ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யும் அறிவு, அவ்வளவுதான். இதுதான் அறிவியலின் அடிப்படை.

கவனமாகப் படியுங்கள். காலத்தை விரயப்படுத்தக் கூடாது! அது இழந்தால் திரும்பப் பெற முடியாத ஒன்றல்லவா?

எனவே, கடிகாரம் ஓடும்முன் ஓடு! என்பதை நெறியாகக் கொள்ளுங்கள்!

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share