Home முந்தைய இதழ்கள் 2021 மார்ச் 2021 தேன் கூடு
வியாழன், 02 பிப்ரவரி 2023
தேன் கூடு
Print E-mail

விளையாட்டு... விளையாட்டு... விளையாட்டு... என எப்போ பார்த்தாலும் வீட்டுக்கு வெளியேயும், விளையாட்டுத் திடல்களிலும், பொழுது போக்குப் பூங்காவிலும் என எல்லா இடங்களிலும் விளையாடி மகிழ்ந்த குழந்தைகளை இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனச் சொன்னால் எப்படி இருக்கும்?

குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்கிற ஓர் இக்கட்டான காலத்தில்தான் எல்லோரும் வாழ்ந்து வந்தார்கள். ஆம், கொரோனா எனும் தொற்று நோயின் காரணமாக உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.

பெரியவர்களே வெளியே செல்ல முடியாமல் வருத்தப்பட்டனர், குழந்தைகளைச் சொல்ல வேண்டுமா? வீட்டுக்குள் அடைபட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.

அப்படிப்பட்ட கொரோனா காலத்தில் கடம்பூர் மலை கிராமத்தில் இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்தனர். மலைப் பகுதி என்பதால் வீட்டுக்கு வெளியில் சென்று வர பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை, நண்பர்களோடு கூட்டமாக விளையாட முடியாத சூழல் போன்ற காரணத்தால் இருவருக்கும் பெரும் சலிப்பு ஏற்பட்டது

அங்குள்ள மலைப் பள்ளியில் அக்கா யாழினி எட்டாம் வகுப்பும், தங்கை குழலி மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். யாழினி படிப்பில் படு சுட்டி, மேலும் பள்ளி நூலகத்தில் நூல்களை விரும்பிப் படிப்பாள். குழலிக்குப் படிப்பு என்றாள் கொஞ்சம் கசப்பு. ஆனால், புதுப்புதுத் தகவல்களை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

ரொம்ப நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த அவர்களுக்கு அலுத்து விட்டது. என்ன செய்யலாம் என யோசித்தவர்களுக்கு... பக்கத்தில் உள்ள மலைக்குப் போய் வரலாம் என யோசனை வந்தது. மலை ஏறுவது என்றால் இருவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் மலை குறித்த எந்தப் பயமும் அவர்களுக்கு இல்லை. அடுத்தநாள் காலையில் வேலைகளை எல்லாம் முடித்து தாத்தாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போய்வரலாம் என முடிவெடுத்தனர்.

மறுநாள் காலையில் எழுந்தவுடன் அம்மாவுக்கு உதவியாக வேலைகளை முடித்துவிட்டு, குடிக்கத் தண்ணீரை எடுத்துக்கொண்டு வழித்துணைக்குத் தாத்தாவையும் அழைத்துக்கொண்டு மலையேறத் தயாராகினர்.

"ரொம்ப தூரம் போகக் கூடாது" என்று அம்மா சொல்ல, “சரி மா, கொஞ்ச தூரம் தான் போயிட்டு சீக்கிரமா வந்துருவோம்" எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர்.

மலையினுள் செல்லச் செல்ல அதன் அழகும், இயற்கைக் காட்சிகளும்; பறவைகளின் சத்தமும், வண்டினங்களின் ரீங்காரமும், காற்றும் மரமும் பேசிக்கொள்ளும் ஒலிகளும் அவர்களுக்கு வியப்பை வழங்கின. பெரிய பெரிய பாறைகள், நீண்டு வளர்ந்த மரங்கள்... மலையினுள் இன்னும் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது.

தொடர்ந்து சென்றவர்கள் அங்கிருந்த கொன்றை மரத்தடியில் அமர்ந்து, கொண்டு வந்த தண்ணீரைக் குடித்து கொஞ்சம் இளைப்பாறினர்.

"ஓய்வெடுத்தது போதும் வாங்க போகலாம்" என்று தாத்தா சொல்லவும், இருவரும் எழுந்து நடக்கத் தொடங்கினர்.

"தாத்தா, அங்க பாருங்க என்னமோ இருக்கு" என்று கத்தினாள் குழலி.

"அட! அதுவா, அதுதான் மலைத்தேன்கூடு" என்றார் தாத்தா.

இதுவரை தேனை மட்டுமே சுவைத்த அவளுக்குத் தேன்கூடு பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

"மலைத் தேன்கூடா! அப்படின்னா என்ன தாத்தா?" என்றாள் குழலி.

"அது ஒண்ணுமில்லை குழலி, தேனில் மலைத் தேன், கொம்புத் தேன் இப்படி நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த மலைத்தேன்" என்றார் தாத்தா.

பேசிக்கொண்டே மலை ஏறத்தொடங்கினர்....

"யாழ் அக்கா, எனக்கொரு சந்தேகம்" என்று வழக்கம் போல் தொடங்கினாள் குழலி. அக்காவை அவ்வப்பொழுது யாழ் அக்கா என்றுதான் அழைப்பாள்.

"இன்னைக்குமா, சரி கேளு, தெரிந்தவரை சொல்கிறேன்" என்றாள் யாழினி.

"தேனீக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையா இருக்குக்கா, கொஞ்சம் சொல்லேன்“ என்றாள்.

"சொல்றேன். அதுக்கு முன்னாடி, உனக்குத் தேனீக்களைப் பற்றி என்ன தெரியும்?  தெரிந்தவரை சொல்லு" என்றாள் யாழினி.

"எனக்கு..., தேன் பூச்சிகள் கடிக்கும், கடித்தால் பயங்கரமாக வலிக்கும், அப்புறம் தேன் ரொம்ப சுவையாக இருக்கும், எப்பவுமே கெட்டுப் போகாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க இவ்வளவு தான் தெரியும்" என்றாள் குழலி.

"நல்லது, இவ்வளவு தெரியுமா... இன்னும் கொஞ்சம் சொல்லப்போறேன் கேட்டுக்க" என்று தான் நூலகத்தில் தேனீக்கள் பற்றி படித்த செய்திகளைச் சொல்லத் தொடங்கினாள் யாழினி.

"உலகின் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்கள் தேனீக்கள்தாம். மேலும் 80 சதவிகிதம் உணவுப் பொருள்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் இவைதான் காரணம்" என்றாள் யாழினி.

"மகரந்தச் சேர்க்கையா! அப்படின்னா என்னக்கா? அது எப்படி நடக்குது?"

"அதுவா, தேனீக்கள் பூக்களின் மீது அமர்ந்து தேன் துளிகளைச் சேகரிக்கும் போது, அதன் கால்களிலும் உடம்பிலும் பூக்களின் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும், ஒரு பூவில் தேனை உறிஞ்சி பறந்து சென்று மற்றொரு பூவில் அமரும்போது தேனீயின்மீது ஒட்டியிருக்கும் மகரந்தம் அந்தப் பூவில் படியும். இப்படித்தான் தேனீக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இச்செயலைச் செய்கின்றன" என்றாள் யாழினி.

இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீ ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவில் அமர்வதைப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

"இவ்வளவு பெரிய ஆள்களா! தேனீக்கள், பார்க்கத்தான் சிறிய அளவில் இருக்கின்றன. ஆமாக்கா, தேன்கூட்டில் எவ்வளவு தேனீக்கள் இருக்கும்."

"ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். மேலும், தேன்கூட்டில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். இன்னொரு முக்கியமான தகவல் _ ராணித் தேனீ இரண்டு ஆண்டுகள், ஆண் தேனீ 90 நாள்கள், வேலைக்காரத் தேனீ 70 நாள்கள் உயிர் வாழும்" என்று முடித்தாள் யாழினி.

"என்னக்கா சொல்லற, இவ்ளோ செய்தி இருக்கா! அனைத்து தேனீக்களும் சேர்ந்து தான் இவ்வளவு சுவையான தேனை கூட்டுக்கு எடுத்து வருதா?’’ என்றாள் குழலி.

"இல்ல குழலி, ஒவ்வொரு தேனீக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும், ராணித் தேனீக்கு முட்டை இடுவது மட்டும் தான் வேலை. ராணித் தேனீயின் உணவுத் தேவையைக் கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை இருக்கும். ஆண் தேனீக்குக் கூட்டைப் பாதுகாக்கும் வேலை, வேலைக்காரத் தேனீக்கள்தான் தேனைச் சேகரித்து வருகின்றன" என்றாள் யாழினி.

"ஓ! அப்படியாக்கா, ரொம்ப தூரம் தேனெடுக்கப் போகும் தேனீக்களுக்குப் பாதை மறந்து போகாதாக்கா?’’ என்றாள்.

"மறக்கவே மறக்காது! ஏன்னா, அதுங்களுக்கு யானை, ஆமைகளைவிட நினைவாற்றல் அதிகம். இன்னொரு தகவலும் சொன்னால் நீ ஆச்சரியப்படுவ" என்றாள் யாழினி.

"என்னக்கா,"

"ஒரு இடத்தில புதியதாகக் கூடு கட்டுவதற்கு முன் வேலைக்காரத் தேனீக்கள் அந்த இடத்தை வேவு பார்க்கும், பின் அந்த இடத்தை மற்ற தேனீக்களுக்கு நடனம் மூலம் தெரியப்படுத்தும். அதனை அறிந்து கூட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒருசில நிமிடங்களில் புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும்."

"என்ன சொல்லறக்கா, நடனம் மூலமாகப் பேசிக்கொள்ளுமா? கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்குக்கா" என்றாள் குழலி.

"பேசிக்கொண்டே நாம ரொம்ப தூரம் வந்துட்டோம், வாங்க வீட்டுக்குப் போகலாம். குழலியோடு சேர்ந்து நானும் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்" என்றார் தாத்தா.

அக்கா சொன்ன தகவல்களையெல்லாம் அசை போட்டுக்கொண்டே நடந்து சென்றாள் குழலி. இனி தேனை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது தேனீக்களைப் பற்றிய செய்திகளையும் சொல்லப் போவதாக நினைத்துக்கொண்டாள் குழலி.<

Share