Home முந்தைய இதழ்கள் 2021 மே 2021 உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா
வியாழன், 02 பிப்ரவரி 2023
உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா
Print E-mail

சின்னஞ்சிறு அகவையிலே பாப்பா - நீயுன்

சிந்தனையை வளர்த்திடணும் பாப்பா

அன்புடனும் பண்புடனும் பாப்பா - நீ

ஆளாகிப் புகழ்பெறணும் பாப்பா

 

முன்னோர்தாம் சொன்னார்கள் என்றே - நீ

முழுவதையும் ஏற்காதே பாப்பா

உண்மையெனில் ஒப்பிடுக பாப்பா - நீ

உள்ளதைத்தான் நம்பிடணும் பாப்பா

 

 

இல்லாத ஒருபொருளை பாப்பா - நீயும்

இருக்குதெனச் சொல்லாதே பாப்பா

கல்லாதார் கற்பனையை பாப்பா - நீயும்

கடுகளவும் மதிக்காதே பாப்பா

 

கல்பொம்மை மண்பொம்மை பாப்பா - உனக்குக்

காட்டிஅதைக் கடவுளென்பார் பாப்பா

எல்லாம்அவன் செயலென்பார் பாப்பா - உன்னை

ஏமாற்றக் கதையளப்பார் பாப்பா.

 

உன்அறிவு சொல்லும்வழி பாப்பா - நீயும்

ஓயாது வினவிடணும் பாப்பா -

நுண்ணறிவால் உணர்ந்திடணும் பாப்பா - நல்ல

நூல்படித்துத் தெளிவுறணும் பாப்பா.

- பெரு.இளங்கோ,  திருவொற்றியூர்

Share