Home முந்தைய இதழ்கள் 2021 ஜூன் 2021 பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - நிலவில் இறங்கும் முன்..
வியாழன், 26 மே 2022
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - நிலவில் இறங்கும் முன்..
Print E-mail

அந்தக் கடைசி நிமிடங்கள்

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!

உங்களை எல்லாம் நேரில் சந்தித்துப் பேசி, மகிழ்ந்திடும் நிலை இல்லை இப்போது.

காரணம் உங்களுக்கே தெரியும் அல்லவா? கொரோனா கொடுந்தொற்று இரண்டாம் அலையின் வீச்சும் வேகமும் மக்கள் எல்லோரையும் மிகவும் பயப்பட வைத்துள்ளது.

முதல் அலையில் இல்லாத கொடுமை இப்போது எங்கும்; குழந்தைகளாகிய உங்களை முன்பு விட்டு வைத்திருந்த அந்தக் கொரோனா கொடுந்தொற்று, இப்போது குழந்தைகளை, சிறுவர்களை, இளைஞர்களையும் பிடித்து வாட்டி வதைக்கிறது.

இதை நினைக்கும்போது, நம் நெஞ்சமெல்லாம் வேகிறது.

பிஞ்சுகளைக் கூட இந்த நஞ்சு விடமாட்டேன் என்று பிடித்து ஆட்டி, உயிர்க் கொள்ளைக்குக் கொண்டு வருவதை நினைத்தால் வேதனை தாங்க முடியவில்லை.

எனவே, நீங்கள் எல்லோரும் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்.

இப்போது உங்கள் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதித்து பணிகளைத் துவக்கிவிட்டனர்.

எனவே, நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லி தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனா தொற்றை விரட்டியடிக்கத் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள முன்வர வேண்டும்.

மற்றபடி ரொம்ப ரொம்ப முக்கியம் என்ன? உங்களுக்குத்தான் தெரியுமே! தாத்தா அடிக்கடி சொல்வேனே _ முகக்கவசம்.

அது இல்லாமல் நடமாடவே கூடாது; அதை தவிர்க்கவே கூடாது; சரியாக மூக்கு, வாய்ப் பகுதி எல்லாவற்றையும் மூடி சரியாக அணிய வேண்டும்.

அலட்சியமாய் இருக்கக் கூடாது. அடிக்கடி கிருமி நாசினி (sanitization) தடவிக்கொள்ளுதல், சோப்பு போட்டு பலமுறை கை கழுவுதல் அவசியம். தேவையில்லாமல் எங்கும் செல்லக் கூடாது. தவிர்க்க இயலாது போவதானாலும் நன்றாக தனிநபர் இடைவெளி விட்டு நிற்பது முக்கியம் அல்லவா?

மற்றபடி, நல்லா சாப்பிடணும், அது சத்துணவாக இருப்பது நல்லது. நல்லா வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி, விளையாட்டு, புத்தகம் படித்தல் இப்படி பலவிதங்களில் நேரத்தைச் செலவழித்து, அச்சத்தை அகற்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்போ பார்த்தாலும் கையில் செல்போனை வைத்து ஏதாவது ‘அக்கப்போர்கள்’ கேட்டு நேரத்தை வீணாக்கி, மனதையும் மாசுபடுத்திக் கொள்ளக் கூடாது!

அறிவியல் கண்டுபிடிப்பும் நோயை விரட்ட, நாளும் விஞ்ஞானிகளால் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துதான் வருகிறது!

எனவே, பயமோ, பதற்றமோ வேண்டாம். மனித அறிவு- _ பகுத்தறிவு எல்லாவற்றையும் சந்தித்து வெற்றி பெறும் ஆற்றல் நிறைந்தது.

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழுகிறோம். அறிவியல் சாதனைகள் நாளும் நம்மை பலவித நோய் படையெடுப்புகள் வந்தாலும் தகுந்த வகையில் தடுத்துப் பாதுகாக்கும் என்பது உறுதி!

விமானத்தைக் கண்டுபிடித்துத் தந்த விஞ்ஞானம் அதோடு விட்டதா? விண்வெளியில் பயணித்து நம் பூமி போல் பல கோள்களை ஆராயவும், அதில் இறங்கவும் ‘ராக்கெட்’ விண்கலம் கண்டது. அதன் மூலம் தான் நிலவில் முதலில் ‘நீல் ஆம்ஸ்ட்ராங்க்’ என்ற அமெரிக்க விண்வெளி விஞ்ஞானி பறந்து சென்று, நிலவில் தனது இடதுகாலை முதலில் வைத்து இறங்கி வரலாறு படைத்து, உலகத்தை வியப்படையச் செய்தார் என்ற வரலாறு படித்திருக்கிறார்களா பேரப்பிள்ளைகளே!

அமெரிக்கா நாசா விண்வெளிக் கூடத்திலிருந்து புறப்பட்ட விண்கலம் (அப்போலோ 11 மிஷன்) என்று பெயர்.

அந்த விண்கலம் அமெரிக்க சுதந்திர தேவி (Statue of Liberty) சிலையைவிட 60 அடி கூடுதல் உயரம். அதன் எடை 3,10,000 பவுண்ட். மேலே எழும்பி சுற்றிப் பயணித்தது! மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியைச் சுற்றிப் பறந்து சாதித்தது!

நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங் சொன்ன வாசகங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை.

“இது ஒரு மனிதனின் சிறிய அடிதான்; ஆனால், மனிதகுலத்தின் மிகப்பெரும் பாய்ச்சல் ஆகும்’’ என்பதே!

அதற்குப் பிறகு செவ்வாய்க் கோள் பயணம் கூட ராக்கெட் மூலம் நடந்தது _ குடியேற முடியுமா என்று யோசிக்கும் அளவு அறிவியல் அதிவேகமாக வளர்ந்து வருகிறது!

இதுவரை எல்லோரும் இந்த நிகழ்வு பற்றிய வரலாற்றைப் பலரும் அறிவார்கள். அவர்கள் அறியாத இதுவரை வெளிவராத ஒரு சுவையான ரகசியத்தை உங்களுக்குச் சொல்லி உங்களை மகிழ வைக்கப் போகிறேன்.

‘அப்போலோ 11 மிஷன்’ என்ற இது வெற்றியளிக்குமா, தோற்றுப் போகுமா என்ற சந்தேக மனநிலை அமெரிக்க அரசில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களுக்கே இருந்தது!

ஜூலை 2-0, 1969 இந்த சம்பவம் நடந்தபோது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon). இந்த நிலையில் மனிதன் காலடி பதிக்கும் இம்முயற்சி வெற்றி அல்லது தோல்வி என்கிற இருநிலையில் எதுவொன்று ஏற்பட்டாலும் எப்படி மக்களிடம் பேசுவது என்று இரண்டு வகை பேச்சுகள் அவருக்குத் தயாரித்துக் கொடுத்து வைத்திருந்தார்கள் வெள்ளை மாளிகையில் இருந்த அவரது ஆலோசகர்கள்.

எல்லோரும் ஆவலுடன் வெற்றிகரமாக நீல் ஆம்ஸ்ட்ராங் திரும்பி வந்து சாதனை வெற்றியை அமெரிக்கா பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து நிற்கும் நிலையில், விண்வெளிக் கலம் தரையிறங்க சில விநாடிகளே  இருக்கும்போது கம்ப்யூட்டர் அலாரம் கருவிகள் வேலை செய்யவில்லை. உடனே நீல் ஆம்ஸ்ட்ராங் சற்றுகூடப் பயப்படாமல், அதை தரையிறங்கத் தனது கைகள் மூலமே இயக்கி பத்திரமாகத் தரை இறக்கி வெற்றிக் கொடி நாட்டினார். அமெரிக்காவிற்குப் புகழ் ஈட்டினார்!

50 விநாடிகளுக்குரிய எண்கள் மட்டுமே விண்கலத்தில் இருந்தது; இது அப்படி அவரால் கையால் இயக்கி இறக்க வைக்கத் தவறி அது உடனே வெடித்துச் சிதறி தூளாகும் அபாயம் இருந்தது. அரை நிமிடத்தில் காப்பாற்றி வரலாறு படைக்கப்பட்டது.

(Michio Kaku-M¡ “The Future of Humanity” நூலில் 30, 31 ஆம் பக்கங்களில் இச்செய்திகள் கிடைக்கின்றன.)

அவரது பகுத்தறிவுதானே, துணிச்சலான முடிவுதானே காரணம்.

ஆகவே, எவ்வளவுதான் விஞ்ஞானம் அறிவியல் வளர்ச்சி என்றாலும் அதற்கு அடிப்படை மனிதனின் மூளை _ ஆராய்ச்சித் திறன்தான் _ பகுத்தறிவின் பயன் அதுதான் _ அதன் எல்லை பரந்துபட்டது.

அதனால் எந்த சோதனை வந்தாலும் எதிர்கொண்டு வெல்லும் பேரன், பேத்திகளே! நமக்குத் தேவை தன்னம்பிக்கையும் துணிச்சலும்தான்! அறிவியல் + பகுத்தறிவு = நம்மை உயர்த்தும். அதனால்தான் பெரியார் தாத்தாவும் நம் இயக்கமும் அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவைப் பின்பற்றுங்கள் என்று எப்போதும் கூறி மனித வாழ்வை மகத்தான சாதனை வாழ்வாக மாற்ற நம்மைத் தூண்டுகிறார்கள். அதன்படி, அறிவியலையும் பகுத்தறிவையும் இரு ஆயுதங்களாக்கிக் கொண்டு வளருங்கள் பேரப் பிள்ளைகளே! நலமுடன் வாழ்க!

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share