கடவுளும் கரோனாவும்!
Print

‘கடவுளே மனிதனைப் படைத்தான்’ எனயினும்

கருதிடும் மடமையும் இருக்கிறது - அந்தக்

‘கடவுளை மனிதனே படைத்தான்’ எனும்புதுக்

கருத்தினை மனம்கொள மறுக்கிறது!

 

‘கடவுளை மற’நீ ‘மனிதனை நினை’யெனக்

கற்பித்த மனிதரை மறக்கிறது - அந்தக்

கடவுளின் மகிமையும் ‘கரோனா’ முகமையில்

காற்றினில் மறைந்தே பறக்கிறது!

 

கடவுளைத் தொழுவதும் மதங்களின் விதிகளில்

கணித்துள முறைகளில் நடக்கிறது - அந்தக்

கடவுளின் தொழுகையும் தொடர்ந்திடா விதமதில்

கரோனா நுழைந்தே தடுக்கிறது!

 

கடவுளால் முடிந்திடா மருந்தினை மனிதமும்

கண்டிடும் முயற்சிகள் எடுக்கிறது - அந்தக்

கடவுளின் முகந்தனில் கருந்திரை படர்ந்திடக்

காலமும் விரைந்தே கடக்கிறது!

 

கடவுளே படைத்ததாய்க் கதைப்பவர் உயிரையும்

கரோனா பறித்தே குடிக்கிறது - அந்தக்

கடவுளும் பயத்தினில் கருவறை இருட்டினில்

கதவுகள் அடைத்தே கிடக்கிறது!

 

கடவுளைப் படைத்ததாம் மனித்தமும்* பதறியும்

கதறியும் பதைத்தே துடிக்கிறது - எந்தக்

கடவுளின் வரத்தினில் கரோனாவைத் துரத்திநம்

கண்ணீரின் பெருக்கைத் துடைக்கிறது?

*மனித்தம் - மனிதம்*

- தளவை இளங்குமரன்,

இலஞ்சி, தென்காசி மாவட்டம்

Share