Home முந்தைய இதழ்கள் 2021 ஆகஸ்ட் 2021 பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க!
வெள்ளி, 27 மே 2022
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க!
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!

என்ன, எல்லாரும் எப்படி இருக்கீங்க? கொரோனா கொடுந்தொற்று இரண்டாவது அலையினால் உங்களை மாதிரி சின்னஞ் சிறுசுகளுக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்; குழந்தைகளைக்கூட, மூன்றாவது அலை வந்து தொந்தரவு கொடுத்து உயிர்க்கொல்லியாகி விடும் ஆபத்து உண்டு என்று மக்கள் நல்வாழ்வுத் துறை வல்லுநர்களே நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார்கள்.

அதனைத் தடுக்க அடுத்து உங்கள் முறை (ஜிuக்ஷீஸீ) வரும்போது, கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் கூடாது! புரியுதா செல்லங்களே?

அய்ரோப்பாவில் உள்ள நம்ம பெரும்புலவரும் பேராசிரியரும் ‘ஆல் ரவுண்டருமான’ முனைவர் இரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், பெரியார்_ மணியம்மை பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யம் நடத்திய பெரியாரியல் பயிற்சி காணொலி வகுப்புகளில் முதல் பரிசு பெற்ற நம் கொள்கைத் தங்கங்களைப் பாராட்டி மகிழ, அவர்தம் கருத்து வளத்தை அறிய நடத்தப்பட்டது. 17.7.2021 அன்று இளையோர் சந்திப்பு நிகழ்வில் மிக அருமையாகப் பேசினார். அதில் அவர் ஒரு முக்கியக் கருத்தை -_ பெரியார் பிஞ்சுகளாகிய உங்களுக்குப் பொருந்தக் கூடிய அரிய அறிவுரையை _ அறவுரையைக் கூறினார்!

மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) பாதிரியார். இவர் கருப்பின மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிய பெரிய போராளி!

காந்தி தாத்தா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஹிந்து மஹாசபைக்காரரான நாதுராம் விநாயக் கோட்சே எனும் மதவெறியனால் எப்படி பிரார்த்தனைக் கூட்டத்தில் 1948இல் சுட்டுக் கொல்லப்பட்டாரோ, அதுபோலவே மனித உரிமைகளுக்காக -_ குறிப்பாக கருப்பின மக்கள் விடுதலை உரிமை வாழ்வுக்காக அமெரிக்காவில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும் வெள்ளை நிற இனவெறியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

அவரைப் பற்றி _ பேராசிரியர் ரவிசங்கர் கூறுகையில், “இரண்டு இளம் நண்பர்கள். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். இருவரும் பேருந்தில் பயணம் செய்ய முனைந்தனர். ஒருவர் வெள்ளை; மற்றொருவர் கருப்பர். ஆனாலும், அவர்கள் நண்பர்கள். அவர்களை ஓர் இடத்தில் பேருந்தில் அமர அனுமதிக்க மறுத்துவிட்டனர். காரணம் கருப்புப் பையன் முன்னே உட்கார அனுமதியில்லை என்பது அப்போதுள்ள சட்டம். இந்தப் பெண் பிள்ளை தனது நண்பனுக்காக மிகவும் அழுது உரிமையைக் கேட்டார். கிடைக்கவில்லை. பிறகு இப்படிப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணம் செய்வதைத் தவிர்த்து இருவரும் இணைந்து நடந்தே போனார்கள். பிறகு பஸ் மறியல் _ சத்தியாகிரகம் _ வைக்கம் சத்தியாகிரகத்தைப் போல தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்றனர்.

இந்த வரலாற்றை இளம் பிள்ளைகளான உங்களைப் போன்றவர்களும் ஆடல், பாடல், கதை, நாடகம் மூலம் சொல்லி பழைய வரலாற்றை நினைவுபடுத்துவதைத் தொடர்ந்து செய்கிறார்கள்; ‘அன்று நான் பிறந்து வளர்ந்த வாலிபனாக இருந்திருந்தால், எப்படியெல்லாம் மனித உரிமை மீட்பு அறப்போரில் எனது பங்கைத் தந்திருப்பேன்’ என்று கற்பனை செய்து பாடுவது, கதை சொல்லி வரலாற்றில் பதிந்த தடங்களை _ மனதில் பதியும் தடங்களாக்கி தமது உரிமைப் போரின் வரலாற்றில் பெருமையை நினைவூட்டுகின்ற பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதுபோல், நீங்களும் திராவிட இயக்க வரலாற்றுப் போராட்டங்களை _ பெரியார் தாத்தா போராடிய பல நிகழ்வுகளை _ நினைவூட்டி பாடல், ஆடல், கூத்து, ஓரங்கம், வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் போன்றவற்றை நல்ல நண்பர்கள், அறிஞர்கள் துணையோடு பயின்று அடுத்தடுத்த தலைமுறைக்கு வரலாற்றுப் பாடங்களாக கலை நயத்தோடு எளிமையாகப் புரியும்படி செய்யலாமே!

உதாரணமாக, ‘வைக்கம்’ என்ற ஊரில், மலையாள ராஜ்யத்தில் 1924இல் 97 ஆண்டுகளுக்கு முன், பெரியார் தாத்தா, அன்னை நாகம்மையார், பெரியார் தாத்தாவின் தங்கை கண்ணம்மாள் எல்லோரையும் அழைத்து, தெருக்களில் கீழ்ஜாதியில் பிறந்தவர்கள் நடக்கக் கூடாது என்ற கொடுமையை எதிர்த்து வைக்கம் தெரு நுழைவுப் போராட்டம் செய்தனர்.

கழுதையும் நாயும் பன்றியும் அத்தெருவில் சுதந்திரமாக நடமாடும்போது, ஏன் ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக் கூடாது என்று தடுக்க வேண்டும்? அந்த மிருகங்கள் சத்யாக்கிரகம் செய்து போராடியா இந்த நடமாடும் உரிமையைப் பெற்றன? அய்ந்து அறிவுப் பிராணிகளுக்குள்ள சுதந்திரத்தை ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு மறுப்பது எவ்வகையில் நியாயம் என்று கேள்வி விடுத்து காந்தியையே ஒப்புக் கொள்ளச் செய்து சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டார். போராட்ட முடிவில் பெரியாரே வெற்றி பெற்றார். அனைவருக்கும் சாலையில் நடக்க உரிமையைப் பெற்றுக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் இளம் குழந்தைக்கு ‘பால்ய விவாகம்’ நடத்தி வைத்தனர் _ பெரியார் தாத்தா குடும்பத்தில். அந்தப் பையன் 10 வயதுக்குள் காலரா பேதி நோயால் இறந்துவிட்டதால் விதவைக் கோலம் திணிக்கப்பட்ட அவரது தங்கை மகளுக்கு உரிய வயது வந்ததும் மறுமணம் செய்து வைத்த கதையைச் சொல்லி நீங்களும் பாடி, ஆடி, நடித்துக் காட்டலாமே! (இது 118 ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது)

எனவே, பிஞ்சுகளே, இப்படி ஒரு புதிய சிந்தனை செயலூக்கம் பெற்று, இயக்க வரலாற்றில் நீங்கள் முழுமையாகப் பங்கேற்று, வரலாறு அறியும் பாரம்பரியர்களாகி விடுங்கள் _ உற்சாகம், தானே வழியும் உங்களிடம்!

என்ன, ஆயத்தமாகிறீர்களா? நீங்கள் இப்படி ஓர் ஓரங்க நாடகம் போட்டால், நானே கூட வந்து பார்ப்பேன் _ சரிதானே!

கவனமாக இருங்கள்!

இப்படிக்கு,

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share