கதை கேளு.. கதை கேளு.: பாப்பி என்னும் பாப்பி
Print

விழியன்

இன்று எனக்கும் நரேனுக்கும் ஓட்டப் பந்தயம். என் பெயர் பாப்பி. இதோ இந்தப் பெயர் வைத்ததால்தான் இந்த ஓட்டப் பந்தயமே. நான், நரேன், மகி என ஏழு எட்டு நாய்கள் கூட்டமாக ஒரு கூடாரத்தின் அருகே வசிக்கின்றோம். இந்தக் கூடாரம் சில ஆண்டுகளாக இங்கே இருக்கின்றது. நான் பக்கத்துக் கிராமத்தில் பிறந்தாலும் இதோ இந்தக் கூடாரத்தில் வாழும் மனிதர்களுடன்தான் இப்போது வாழ்கின்றேன். அவர்கள் போடும் உணவை உண்டு வளர்கின்றேன். மற்றவர்களைக் காட்டிலும் நான் கொஞ்சம் அதிகப் பழுப்பு நிறத்தில் இருப்பேன். எப்போதாவது கிராமத்திற்குச் சென்று வருவதும் உண்டு. இந்தக் கூடாரங்களில் வசிப்பவர்கள் ஏதோ இரண்டு நீண்ட கம்பிகளைத் தரையில் பதிக்கின்றார்கள். இந்தப் பணிகள் 1847ஆம் ஆண்டில் இருந்தே துவங்கிவிட்டது. இப்போது 1852ஆம் ஆண்டு நடக்கின்றது.

முதலில் இந்தக் கரடுமுரடான இடத்தைச் சமன்படுத்தினார்கள். பின்னர் கற்கள் இட்டு நிரப்பினார்கள். அப்போதுதான் ஒரு நாள் வெள்ளைத்துரை ஒருவர் குதிரையில் வந்தார். அவர் பெயர் பெர்கலே என்றார்கள். அவர்தான் இந்த வேலைகளை மேற்பார்வையிட வந்தவர். கிட்டத்தட்ட முதலாளி என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவர் வந்ததும் எல்லோருமே குனிந்து வணங்கினார்கள். அவர் என்ன சொன்னாலும் சரி, சரி, சரி என்றார்கள். எனக்கு அவர்கள் பேசும் மொழி புரிந்திருந்தால் கத்தி கூச்சலிட்டு இருப்பேன். அவர்களுக்கு சரியான உணவு பரிமாறப்படவில்லை. கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் யாரும் எதுவுமே சொல்லவில்லை. வீர ஆவேசமாக நான் அவர் அருகில் சென்றேன். அவரைப் பார்த்து நான் வாலாட்டினேன். அட! டக்கென குதிரையில் இருந்து இறங்கி ‘பாப்பி’ என்று தடவிக்கொடுத்தார். நான் இன்னும் விசுவாசமாக வாலினை ஆட்டினேன். ஒவ்வொரு முறையும் அவர் வரும்போது இப்படியே நடந்தது.

அந்தப் பெயரால்தான் பிரச்சனை ஆரம்பித்தது. பாப்பி என தொழிலாளர்கள் எல்லோரும் அழைத்தனர். வெள்ளைத்துரைக்குப் பிடித்தமான நாய் என்பதால் எனக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அது எங்கள் (நாய்) கூட்டத்தில் பிரச்சனையை உண்டு பண்ணியது. நரேனுக்குத்தான் அந்தப் பெயர் பிடிக்கவே இல்லை. இதனால் எனக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். என்னை எப்போதும் சீண்டுவான். அது தப்பு என்று சொன்னாலும் அவன் கேட்கவே இல்லை.

இப்படித்தான் ஒரு நாள் அந்தப் பாலத்தில் இருந்து விழுந்திருப்பேன். இந்தப் பாதை போடும் வேலைக்காக ஒரு பெரிய பாலத்தைக் கட்டினார்கள். பாலத்தின் நடுவில் இருந்து பார்த்தால் எனக்கு பயங்கர பயம் வந்துவிடும். காலெல்லாம் உதறும். ஆமாம். கீழே விழுந்தால் நானூறு அடி. எலும்பெல்லாம் உடைந்து நொறுங்கிவிடும். பாலம் கட்டும்போது நான்குபேர் இப்படி விழுந்தனர். அதில் மூன்று பேர் இறந்தும்போய்விட்டனர். இந்தப் பாலம்தான் இந்தப் பாதையிலேயே கடினமான இடம் என வெள்ளைத்துரை பெர்கலே அடிக்கடி கூறுவார். ஆனால், இறந்துபோனவர்கள் பற்றித் தெரிவித்தும் அவர் எதுவுமே கண்டுகொள்ளவில்லை. இதைவிட முக்கியமான பணி நமக்கு இருக்கு என்றார்.

அந்தப் பணி என்ன தெரியுமா? மலையைக் குடையும் ஒரு வேலை. மலையைக் குடைந்து சுரங்கம் போடவேண்டும் என்பது திட்டமாம். ஆத்தாடி! எனக்கு அந்தப் பக்கம் போகவே பயம். மலையை உடைச்சு அதுக்குள்ள இப்படிப் போய் அப்படி வரணுமாம். எனக்கு இருட்டுன்னாலே பயம். கேட்டீங்களா, ஒரு நாள் கூட்டமா நாங்க (நாய்கள்) எல்லோரும் அங்கே போனோம். உள்ளே போகப்போக கும் இருட்டு. எனக்கு சூச்சூ வந்துடுச்சு. இருட்டுன்றதால நான் போனது யாருக்கும் தெரியல. நரேன்தான், “என்ன ஒரு மாதிரி வாசனை வருது’’ன்னு சொன்னான். எமகாதகன். எப்படியோ சமாளிச்சு வெளியில வந்துட்டோம். அங்க பாதை போட வேலை செய்யும்போது பெரிய பெரிய நெருப்புப் பந்தம் வெச்சிருப்பாங்க. அந்த வெளிச்சத்துலதான் வேலை செய்யணும். இரவில் கை வலிக்குது, கால் வலிக்குதுன்னு கத்துவாங்க. நாங்க (நாய்கள்) ஒவ்வொருத்தரையும் பார்த்துப்போம்.

எனக்கும் நரேனுக்கும் சண்டை முத்திடுச்சு. சரி, யார் வேகமா ஓடுறாங்களோ, யார் வெற்றி பெறுகின்றார்களோ அவங்க சொல்றதை மத்தவங்க கேட்கணும்னு பேசிக்கிட்டோம். மறுநாள் தான் போட்டி. முந்தைய நாள் இரவு கூடாரத்துல யாருமே தூங்கல. ஒவ்வொரு மைல் இடைவெளியிலும் இப்படி ஒரு கூடாரம் இருந்துச்சு. இந்தப் பணிக்காகத் தொழிலாளர்கள் அங்கே தங்குவாங்க. மொத்தம் ஒன்பதாயிரத்துக்கும் மேல சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்றாங்களாம். எனக்கு ஒன்பதுக்கு மேல எண்களே தெரியாதுங்கிறது வேற விஷயம். ஆனா நிறைய பேருன்னு மட்டும் புரிஞ்சது. அந்த இரவு அவங்க யாருமே தூங்கல. முழுச்சிகிட்டுத்தான் இருந்தாங்க. விடிய ஆரம்பிச்சது. என்ன தேதின்னு நல்லா நினைவிருக்கு. அது நவம்பர் மாதம். குளிர ஆரம்பிச்சு இருந்தது. நவம்பர் 18, 1852.

ரெண்டு கம்பி இருக்குன்னு சொன்னேன் இல்லயா, அங்கேதான் நானும் நரேனும் நின்னுகிட்டு இருந்தோம். அதை மனிதர்கள் தண்டவாளம்னு சொன்னாங்க. யாருக்கு மூச்சு வாங்கி நிற்கின்றார்களோ அவங்க தோற்றவர்கள்னு முடிவு செய்திருந்தோம். மற்ற நாய் நண்பர்கள் ‘இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்’னு சொன்னாங்க. ஏன்னா எங்க வழியில அந்தப் பாலம், சுரங்கம் எல்லாம் இருந்துச்சு. எனக்கு சுரங்கத்தை நெனச்சத்தான் பயமா வந்துச்சு. ஆனாலும் விட்றதா இல்லை. மனசுக்குள்ள ‘தட்றோம், தூக்கறோம்’னு நெனச்சிகிட்டேன். அப்பத்தான் பின்னாடி இருந்து கத்தினாங்க. சில கற்கள் கூட பறந்து வந்துச்சு.

பின்னாடி திரும்பிப் பார்த்தால் ஒரு ராட்சசன். எம்மாடி...! எவ்ளோ பெரிய உருவம் நகர்ந்து வருது! பக்கத்துல இருந்த தொழிலாளர்கள், “பாப்பி கீழ இறங்கு’’ன்னு கத்தினாங்க. “ரயில் வருது’’ன்னு கத்தினாங்க. ரயிலா? ஒருவேளை ராட்சசனைத்தான் ரயிலுன்னு சொல்றாங்களோ? அதுவும் தலையில புகைவிட்டுகிட்டு கூன்ன்னு கத்திகிட்டு எங்களை நோக்கி வந்தது. அவ்ளோ பயம் _ பதற்றம். அங்க ஓட்டம் பிடிச்சவன் தான். அட, நரேனும் தான். எங்க பின்னாடியே ரயில் வருது. ஓட்றோம் ஓட்றோம். என்ன இது புதுசா வருதேன்னு பக்கத்துக் கிராமத்து மக்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே இதைப் பார்த்து சிதறி அடிச்சு ஓடினாங்க. பூதம்னு கத்தினாங்க. பிசாசுன்னு கத்தினாங்க. காதுல கேட்குது. ஆனா கால்கள் நிற்கவே இல்லை. ரயிலுக்கு முன்னாடி சிட்டாப் பறக்கறோம். பாலத்தைக் கடக்கறோம். பாலத்தைக் கடக்கும்போது கண்ணையே திறக்கலையே. திறந்தா தானே கீழ விழுவோம்னு பயம் வரும். கூன்னு ரயில் பின்னாடியே வருது. நரேன் கொஞ்ச தூரம் முன்னாடி ஓடுறான் அவனை நான் முந்தறேன். இப்படியே அந்தப் சுரங்கப்பாதையும் வந்துடுச்சு. நல்லவேளை அங்க தீப்பந்தம் ஏற்றி வெச்சிருந்தாங்க. குடுகுடுகுடுன்னு ஓடிக்கிட்டே இருந்தேன். அங்க சுரங்கத்து நடுவுல இருந்து திரும்பிப் பார்த்தேன். பாதை நல்லா தெரிஞ்சது. அந்தக் காட்சியைப்போல நான் வாழ்நாளில் பார்க்கவே இல்லை. அவ்வளவு அருமையா இருந்தது. அப்படியே புகை விட்டுகிட்டே அந்த ரயில் உள்ளே நுழைஞ்சது. முழுக்க இருட்டாயிடுச்சு. திரும்பவும் ஓட ஆரம்பிச்சோம்.

அந்தப் பாதை பாம்பு போல வளைந்து நெளிந்து இருந்துச்சு. அங்க இருந்த சிலர் எங்களை கற்களால் அடிக்க முயற்சி பண்ணிணாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிச்சிட்டோம். ஆனால், மூச்சு ரெண்டு பேருக்கும் அவ்ளோ வாங்குச்சு. அப்பத்தான் ரயில் எங்களை ரொம்ப நெருங்கினதைக் கவனிச்சோம். டக்குன்னு நரேன் என்னைத் தள்ளிவிட்டான். ரெண்டு பேரும் ஒரு புதரில் பொத்தென விழுந்தோம். ரயில் ‘தடக் தடக் தடக்’குன்னு கடந்து போச்சு. ஒரே கிலியா இருந்துச்சு. ரயில் கடந்து போய் ஒரு புள்ளியா மாறிடுச்சு!

“வா பாப்பி’’ன்னு நரேன் கூப்பிட்டான். அவன் இப்பத்தான் முதல் முறையா பாப்பின்னு கூப்பிடுறான். அப்படின்னா அவன் கோவம் போயிடுச்சு. ரெண்டு பேருக்கும் காலில் சிராய்ப்பு. நான் கொஞ்சம் நொண்டினேன். மெல்ல நடந்து வந்தோம். அந்தச் சுரங்கத்தில் வரும்போது மட்டும் கொஞ்சம் பயமா இருக்கவே நரேனை உரசிக்-கிட்டே வந்தேன். எங்க (நாய்) நண்பர்கள் எல்லாம் பதறிட்டாங்களாம். அப்புறம் எல்லோருமே பாப்பின்னு தான் கூப்பிட்டாங்க. வெள்ளைத்துரை வந்து ஆசியாவிலயே முதல் சோதனை ரயில் பாம்பே முதல் தானே வரை போயிடுச்சு. விரைவில் பொதுமக்களுக்கும் விடப்படும்ன்னு முதல் முறை சந்தோஷமா இருந்தார். நான் கிட்ட போனதும் “பாப்பி’’ன்னு தடவிக்கொடுத்தார். அய்ந்து மாதங்களுக்குப் பின்னர் தினமும் தண்டவாளத்தில் ரயில்கள் வந்தன. நாங்கள் சில மைல்கள் கூடவே ஓடுவோம். ஓவெனக் கத்திவிட்டுத் திரும்பிவிடுவோம்.

Share