Home முந்தைய இதழ்கள் 2021 செப்டம்பர் 2021 பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்!
புதன், 08 டிசம்பர் 2021
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்!
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

எப்படி இருக்கீங்க? கொரோனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உரிய பாதுகாப்புடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்னும் அறிவிப்பு வந்திருக்கிறது. உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தானே! உங்களின் மன அழுத்தத்தைப் போக்க இது தான் சிறந்த வழி என்று நானும் அதை வரவேற்று எழுதியிருந்ததை விடுதலையில் நீங்கள் படித்திருப்பீர்கள் அல்லவா?

“முகக்கவசத்தை சரியாக மாணவர்கள் அணிந்து கொண்டு வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்களைக் கேட்பதும், பள்ளிகளிலேயே சோப்புப் போட்டு கைகழுவும் முறையையும் வகுப்புக்கு வெளியே தண்ணீர் வசதிகளைச் செய்து தருதல், கழிப்பறைகளை மிகமிகத் தூய்மையாக வைத்திருப்பதும் முக்கியம்” என்று அதில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படவும், உங்கள் மூலம் வீட்டில் உள்ள மூத்தோர் பாதிக்கப்பட்டுவிடாமலிருக்கவும், மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்துகொள்வீர்கள் தானே! பெற்றோரும்,  வீட்டிலிருக்கும் மூத்தவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வயதினருக்கு அரசு எப்போது பரிந்துரைக்கிறதோ, அப்போது போட்டுக் கொண்டு இந்த சிக்கலிலிருந்து விடுபடுவோம்.

ஏனெனில், எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மனித இனம் மீண்டு மீண்டு தானே இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. இடைவிடாது நடைபெற வேண்டியவை நடந்து தானே ஆக வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் 2020, உலகளாவிய கோவிட் தொற்று காரணமாக தள்ளிப் போய், ஒருவழியாக கடந்த மாதம் நடந்து முடிந்திருக்கிறது.

விளையாட்டு மிகவும் அவசியமானதல்லவா? மனதையும், உடலையும் உற்சாகம் கொள்ளச் செய்யவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் சிறுவயது முதலே விளையாட்டில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். புத்தகப் புழுக்களாகவோ, வீடியோ கேம், தொலைக்காட்சி, செல்பேசிகள் என்று கேட்ஜெட் வாசிகளாகவோ வாழாமல், மைதானத்தில் இறங்கி விளையாடுதலும், ஓடி ஆடுதலும் தானே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

அப்படி விளையாடுவதற்கு ஊக்கம் தருவதற்குத் தான் விளையாட்டுப் போட்டிகள் வைக்கப்-படுகின்றன. அதற்கென பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் உச்சம் தான் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள். அதன் வரலாறு, இவ்வாண்டு நடந்த போட்டிகள், பதக்க விவரங்களையெல்லாம் அறிந்திருப்பீர்கள்.

பார்ஷிம் , டம்பேரி

அதில் எப்போதும் ஒரு கேள்வி நம்மைச் சுற்றி எழுந்து கொண்டே இருக்கும். சின்னஞ்சிறிய நாடுகளெல்லாம் எத்தனையோ பதக்கங்களைக் குவிக்கும்போது, நம் நாடு தட்டுத் தடுமாறி பதக்கங்கள் பெறுகிறதே என்பது தான் அது. இம் முறை ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களைப் பெற்றிருப்பதே பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. வென்றவர்களுக்கும் போட்டியிட்டவர்களுக்கும் நம் பாராட்டுகள்!

நாட்டின் பல கோடி மக்களிலிருந்து விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிக்கவர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும், உபகரணங்களும், உணவும், ஊக்கமும் கொடுத்து, வளர்த்து, பாரபட்சமின்றி வாய்ப்பளித்து படிப்படியாக இத் துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் அவா. நீங்களும் இத்தகைய விளையாட்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டில் முக்கியமானது வெற்றியோ, பதக்கமோ அல்ல; விளையாட்டுப் பண்பு (Sportiveness) வளர வேண்டும் என்பதே! வெற்றி பெறப் போராடுதலும், தன்னை விட ஒருவர் திறமையுடன் போராடி வெற்றி பெற்றால் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அதனைப் போற்றுதலும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவமும் தான் விளையாட்டுப் பண்பு எனப்படுவது.

விளையாட்டின் மிக முக்கியமான பயன் என்பது அதுதான். நாம் வெற்றிபெறுவது முக்கியம் என்பதை விட விளையாட்டு, போட்டிகளில் பங்கேற்றல், அதற்கான ஊக்கம், பின்னர் எதையும் ஏற்கும் மனம் ஆகியவை விளையாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல... வாழ்க்கைக்கான செய்முறைப் பயிற்சிகள் (Practical Exams).

மற்றொன்று போட்டி அறம் (Sportspersonship). (முன்பு இதை sportsmanship என்று அழைப்பார்கள். அதில் man என்பது ஆண்களை மட்டுமே குறிப்பதைப் போலிருப்பதால், அனைத்துப் பாலருக்கும் பொதுவாக person என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.)

போட்டி அறத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு செய்தியைப் பார்த்தேன். உங்களில் பலரும் கூட பார்த்திருப்பீர்கள். உள்ளத்தை ஒரே நேரத்தில் நெகிழவும் மகிழவும் வைத்த செய்தி அது.

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடந்தது. கத்தாரின் பார்ஷிம் (Barshim) என்பவரும், இத்தாலியின் டம்பேரி (Tamberi) என்பவரும் தங்கத்துக்காக கடுமையாகப் போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட மற்ற போட்டியாளர்களால் அது முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீட்டரை விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கப்பட்டது. மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி தனக்குக் காலில் அடிபட்டுள்ளதால் வலி காரணமாகப் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக அறிவித்தார்.

ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் நெகிழ்வுக்குரியது. டம்பேரி பின்வாங்கியதால், பார்ஷிமுக்குத் தங்கம் உறுதியாகக் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் போட்டி நடத்துநர்களிடம் சென்ற பார்ஷிம், "நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்க "இருவருக்கும் பரிசைப் பகிர்ந்தளிப்போம்" என்று கூறியுள்ளனர்.

உடனே தானும் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக அறிவித்தார் பார்ஷிம். ஒட்டுமொத்த அரங்கமும் இதனைக் கண்டு திக்குமுக்காடிப் போனது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை நேரலையில் உலகம் முழுக்கப் பார்த்துக் கொண்டிருந்த ஒலிம்பிக் ரசிகர்களும் தான்!

போட்டி வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெறத் தகுதியானவரே என்று இவ்வாறு செய்து, போட்டி அறப் பண்பை நிருபித்தார் கத்தார் வீரர் பார்ஷிம்.

இருவருக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அரிய தருணங்களில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

கடும் முயற்சியுடைய ஒருவரின் இயலாமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதல்ல போட்டி. சமமான வாய்ப்புடையோருடன் ஆரோக்கியமாக நடைபெறுவதே போட்டி. சமமற்ற இடத்தில் நமக்கு மட்டும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெறுதலை முழுமையான வெற்றி என்று சொல்ல முடியுமா? இப் பண்பை படிப்பிலும், பணியாற்றும் தளத்திலும், விளையாட்டுகளிலும் நாம் வளர்த்துக் கொள்ளுதல் எத்தகைய உயரிய மதிப்பைத் தரும் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு விளக்கவில்லையா?

மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். எச்சரிக்கையுடன் பள்ளி சென்று வாருங்கள்.

இப்படிக்கு,

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share