நினைவில் நிறுத்துவோம் : சாதிக்க வயது தடையில்லை!
Print

சிகரம்

இன்றைக்கு செல்பேசி பயன்படுத்தாத பிஞ்சுகளே இல்லை. எல்லோரும் பயன்படுத்து-கிறார்கள். அதில் குறிப்பாக விளையாட்டு, ‘யுடியூப்’ என்று பலவற்றை விரும்பிப் பார்க்கிறார்கள்; பயன்படுத்துகிறார்கள்.

அக்காலத்தில் ஒருவருடைய திறமையை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட வேண்டும். வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டும். வாய்ப்பு கிடைக்காமலே திறமையான பலர் உலகுக்குத் தெரியாமல் போனார்கள்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. யுடியூப் சேனல்கள் மூலம் யார் ஒருவரும் தன் திறமையை ஒரே நாளில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடியும். அதற்கு அதிகப் பொருள் செலவும் தேவையில்லை.

அண்மையில் ரித்விக் என்னும் 7 வயது சிறுவன், உலகம் முழுவதும் ஒரு சில வாரங்களில் பேசப்படும் அளவிற்குப் புகழ்பெற்றுவிட்டான். 70 லட்சம் பேர்களுக்கு மேல் அவன் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். ஒரு மாதத்தில் பல லட்ச ரூபாய்கள் சம்பாதித்துள்ளான். பலரது பாராட்டையும் பெற்றுள்ளான்.

அச்சிறுவன் தனக்குள்ள நடிப்பாற்றலைப் பயன்படுத்தி பல வேடங்களில் நடித்து, அதை யுடியூப்பில் பரப்பி ஓரிரு வாரங்களில் இவ்வளவு வளர்ச்சியைப் பெற்றுவிட்டான் (அச்சிறுவனின் பெற்றோரின் முயற்சிதான் அது).

பிஞ்சுகள் தங்கள் நெஞ்சில் ஓர் உண்மையை ஆழப் பதித்துக் கொள்ள வேண்டும். அது என்ன?

திறமை என்பது சிலருக்கு மட்டும் உரியது அல்ல. அது எல்லோருக்கும் உள்ளது. ஒருவர் ஒன்றில் திறமைசாலியாக இருந்தால் மற்றவர் இன்னொன்றில் திறமைசாலியாக இருப்பர். அது பேச்சாற்றலாக, எழுத்தாற்றலாக, ஓவியத் திறமையாக, இசைத் திறமையாக, நினைவாற்றலாக, விளையாட்டுத் திறனாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கு எதில் விருப்பமும் திறமையும் உள்ளதோ அதை வளர்த்து அதில் சாதிக்க வேண்டும்.

சிறுவர்கள் முழு உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பெறாதவர்கள். படிக்கும் பாடமாக இருந்தாலும் செய்யும் வேலையாக இருந்தாலும், தூக்கும் சுமையாக இருந்தாலும், செய்யும் நேர அளவாக இருந்தாலும் அது அவர்களின் வயது, உடல் சக்திக்கு ஏற்ப இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பேராசை கொண்டு முயற்சி மேற்கொள்ளக் கூடாது. உடல் வருத்தமும், உள்ள உளைச்சலும் இன்றி விளையாட்டாக, ஆர்வமாக, மகிழ்ச்சியாக அவர்கள் எதையும் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும்.

தற்காலத்தில் 7 வயது சிறுவனின் சாதனையை மேலே குறிப்பிட்டேன். எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாத நூறாண்டுகளுக்கு முன்புகூட சிறுவர்களாக இருக்கும்போதே சிலர் சாதனைகள் புரிந்துள்ளனர்.

* கவி-க்குயில் சரோஜினி 13 ஆயிரம் வரிகளைக் கொண்ட ஆங்கிலக் கவிதையை எழுதியபோது அவருக்கு வயது 13.

* இரவீந்தரநாத் தாகூர் ஷேக்ஸ்பியரின் ‘மாக் பெத்’ நாடகத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தபோது அவர் வயது 14.

* சார்லி சாப்ளின், நாடகத்தில் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 15.

*  மன்னர் சிவாஜி எதிரியின் கோட்டையைக் கைப்பற்றியபோது வயது 13.

படித்து முதல் மதிப்பெண் பெறுவதுதான் திறமை, சாதனை என்று எண்ணுவது தப்பான எண்ணம். படிப்பில் சாதிப்பவர்கள் மட்டுந்தான் வாழ்வில் சாதிக்க முடியும், உயர முடியும் என்று எண்ணுவதும் தப்பான கருத்து. படிக்கின்ற வயதில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கூடவே, நமக்குள்ள திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிஞ்சுப் பருவத்தில் திறமையைக் காட்ட வேண்டும், சாதிக்க வேண்டும், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று மன உளைச்சல், எரிச்சல் உருவாகும் அளவுக்கு அதைச் செய்யக் கூடாது. பெற்றோரும் அவ்வாறு செய்ய வற்புறுத்தக் கூடாது. எதில் சாதிப்பதாக இருந்தாலும், உழைக்க வேண்டுமே தவிர உளைச்சல் அடையக் கூடாது.

போதிய ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு, ஆட்டம், விளையாட்டு என்று மகிழ்வாக, உல்லாசமாக இருந்துகொண்டே சாதிக்கவும் வேண்டும்.

சாதிக்க வேண்டும் என்பதற்காக சதா அதே வேலையில் இருந்தால் அது மன இறுக்கத்தைத் தந்து வாழ்வில் ஓர் வெறுப்பை உருவாக்கும். நலமான வாழ்வை அது கெடுக்கும். எனவே, எல்லாவற்றுக்கும் ஓர் அளவு, எல்லை வைத்துச் செயல்பட வேண்டும்.

பிஞ்சுகளைவிட பெற்றோரும், பெரியவர்களும் இதை ஆழமாகக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மன மகிழ்வோடு, ஆர்வத்தோடு செய்யப்படும் செயலே வாழ்வில் உயர, சாதிக்கப் பயன்படும். கட்டாயம், அழுத்தம், வற்புறுத்தல், நெருக்கடியால் செய்யப்படும் செயல் எதிரான விளைவுகளையே உருவாக்கும்.

சாதிக்க வயது தடையில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, வயதுக்கு ஏற்ற உழைப்பே சரியென்பதும் உண்மை. வயது, உடல் திறன், நலன் இவற்றிற்கேற்பவே செயலின், உழைப்பின், முயற்சியின் அளவையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

*  அக்பர் ஆட்சியின் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது 13.

*  கிருபானந்தவாரியார் சொற்பொழிவு செய்யத் தொடங்கிய போது வயது 9.

*  பாரதியார் பாடல் எழுதத் தொடங்கிய போது வயது 11.

*  நம் ஆசிரியர் தாத்தா மேடையேறி உரையாற்றத் தொடங்கியபோது அவருக்கு வயது 9.

இன்னும் இப்படி ஏராளமானோர் உள்ளனர்.

எனவே, இவர்களை ஓர் உந்து சக்தியாகக் கொண்டு சிறு வயதிலே சாதனைகள் செய்ய முயற்சிக்க வேண்டும். வாழ்வில் உயரவும், புகழ் பெறவும் அது உதவும். தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் இருந்தால் போதும். சாதிக்கலாம். வயது தடையில்லை!

Share