Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 அறிவியலின் வரலாறு - விண்மீன்களின் வரைபடம் வரைந்த பெண்!
செவ்வாய், 09 ஆகஸ்ட் 2022
அறிவியலின் வரலாறு - விண்மீன்களின் வரைபடம் வரைந்த பெண்!
Print E-mail

சரா

உலக வரைபடம் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். உலக வரைபடம் குறித்த பதிவு 5000 ஆண்டுகள் பழமையானது. சீனாவின் ஹூனான் பகுதியில் கிடைத்த ஓர் ஆமை ஓட்டின் உட்புறம் உலக வரைபடம் போன்ற வரைந்த சித்திரம் ஒன்றைக் கண்டுள்ளனர். அது உலக வரைபடமா என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தற்போதைய உலக வரைபடத்தை சிறிது ஒத்திருப்பதால் அதனை உலகின் முதல் வரைபடம் என்று புவியியல் ஆர்வலர்கள் கருதி வருகின்றனர்.

அன்னா வின்லாக்
(Anna Winlock)

உலக வரைபடத்திற்கு என்று இருப்பது போல் வான்வெளிக்கும் வரைபடம் உண்டு. நாம் தினந்தோறும் பார்க்கும் விண்மீன்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அங்கேயே தான் இருக்கும், இவை அனைத்தும் நம் முற்றத்தில் மின்னும் வண்ணவிளக்குச் சரம் அல்ல. ஒவ்வொன்றும் நமது சூரியனைவிட பல ஆயிரம் மடங்கு பெரியவை. எடுத்துக்காட்டாக மழைக்காலத்தில்  மேற்கு வானில்  தோன்றும் பிரகாசமான விண்மீன்களில் ஒன்றான ‘தெனெப்’ விண்மீன் (Deneb), ‘சிக்னஸ்’ (Cygnus) விண்மீன் குழாமிலேயே அமைந்துள்ளது. இக்குழுவில் உள்ள ‘என்.எம்.எல் சிக்னி’ என்னும் விண்மீன் இதுவரை அறியப்பட்டுள்ள மிகப் பெரும் விண்மீன்களில் ஒன்றாகும். இது எவ்வளவு பெரியது என்றால்... அதை நமது சூரியன் இருக்கும் இடத்தில் கொண்டுவந்து வைத்தால் அது  யுரேனஸ் வரை பெரிதாக விட்டம் கொண்ட விண்மீனாக இருக்கும். அதாவது இரண்டு லட்சம் சூரியன்கள் சேர்ந்தது ஒரு ‘என்.எம்.எல் சிக்னி’ ஆகும்.

சரி, இதை எல்லாம் நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதற்கான வரைபடம் வைத்துதான் முடியும். பூமியை வரைபடத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், விண்மீனை வரைபடத்தில் கொண்டு வருவது எளிது. அப்படித்தானே நினைக்கிறீர்கள்? அப்படி அல்ல. நாம் பொதுவாகப் பார்க்கும் சிறிய வான் பகுதியில் கூட கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கும். அவற்றைப் பிரித்துப் பார்த்து அட்டவணைப்படுத்துவது கடலின் மேலே மிதக்கும் நீர்க்குமிழிகளைத் தேடுவது போன்று ஆகும்.

இந்தப் பணியைச் செவ்வனே செய்து முடித்தவர் தான் அன்னா வின்லாக் (Anna Winlock). செப்டம்பர் 15, 1857இல் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் பிறந்தார். அன்னா வின்லாக் கேம்பிரிட்ஜ் பள்ளிகளில் படித்தார். இளமையிலேயே கணிதத்திலும் கிரேக்க மொழியிலும் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் பள்ளியின் முதல்வரிடம் இருந்து இவரது கிரேக்க மொழி ஆர்வத்தையும் நடத்தையையும் பாராட்டிக் கடிதம் பெற்றுள்ளார். இவரது வானியல் ஆர்வம் இவரது தந்தையார் தந்த ஊக்கத்தால் பெற்றதாகும். தனது 12ஆம் அகவையில் தன் தந்தையார் ஜோசப் வின்லாக்குடன் சொந்த மாநிலமாகிய கெந்துகி சூரிய ஒளிமறைப்புத் பயணத்தில் கலந்து கொண்டார். அன்னா தொடக்கநிலைப் பள்ளிப் படிப்பு முடித்த சிறிது காலத்துக்குள்ளேயே இவரது தந்தையார் மரணமடைந்தார்.  இவர் உடனே தன் தந்தையாரின் வழியைப் பின்பற்றி, சம்பளத்துடன் முதல் பெண்மணியாக ஹார்வார்டு வான்காணகத்தில் (Harvard College observatory) பணியாளராகச் சேர்ந்தார்.

ஜோசப் வின்லாக் இறந்ததும், மூத்த மகளாகிய அன்னா வின்லாக் உள்பட அய்ந்து குழந்தைகளும் அவர்களது தாயாரும் ஆதவற்றவர்களானார்கள். இதனால் அன்னா வின்லாக் ஆர்வார்டு கல்லூரி வேலைக்கு விண்ணப்பித்தார்.

அங்கு நுணுக்கமான கணிதங்களைக்கூட  எளிதில் தீர்க்கும் வல்லமையைப் பெற்றிருந்தார். இவரது கணிதப் புலமையைக் கண்ட விண்ணியல் ஆய்வுத்துறை இவரை தங்களது துறையில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. விண்ணியல் துறையில் அதுவரை ஒரு பெண் கூட முன்வந்து ஆய்வுகள் நடத்தவில்லை என்பதை அறிந்துகொண்ட அவர்  கணக்கீடுகள் மூலம் இரவு வானில் தென்படும் விண்மீன்களின் தூரம், இருப்பிடம் போன்றவற்றை ஆவணப்படுத்தி வந்தார்.

ஒன்றல்ல, இரண்டல்ல; 30 ஆண்டுகள் இரவு பகல் பாராது கணக்கீடுகள் மூலம் விண்மீன்களை அட்டவணைப்படுத்திக்கொண்டே வந்தார். இறுதியாக தனது அட்டவணைகள் அனைத்தையுமே Astronomische Gesellschaft Katalog எனும் வான்கோள் அட்டவணை உருவாக்கத்திற்காகத் தந்துவிட்டார். இந்த அட்டவணையின் மூலம்தான் இன்று விண்மீன்களுக்கான தகவல்களை நாம் திரட்டிக் கொண்டு வருகிறோம். இவை இப்போது உலகம் முழுதும் உள்ள வானியலாளர்களால் தம் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

விண்மீன்களைத் திரட்டிய அவர் இடை இடையே பால்வெளி மண்டலங்களையும் தொகுத்துள்ளார். விண்மீன் மற்றும் பால்வெளி மண்டலங்களுக்கு உள்ள வேறுபாடு, விண்மீன் கொத்துகள் எனப்படும் Cluster போன்றவற்றைத் தனித்துக் காட்டி அதற்கான அட்டவணைகளையும் கொடுத்துள்ளார். இரவு பகல் பாராது ஆற்றிய பணியின் காரணமாக உடல் நிலை சீரழிந்து விண்மீன்களை அட்டவணைப் படுத்திக்கொண்டு இருந்தபோது தனது 47ஆம் வயதில் காலமானார்.  நமது முன்னோர்கள் இறந்தார்கள் என்றால் விண்மீன்களாக மாறி வானில் இருப்பார்கள் என்று மூடநம்பிக்கைக் கதைகளை நாம் கேட்டுள்ளோம்.

ஆனால், சிறு வயது முதலே விண்மீன் குறித்த ஆய்வுகளைச் செய்து விண்மீன்களை அட்டவணைப்படுத்தி விண்மீன்களைப் பார்க்கும் போது எல்லாம் அன்னா வின்லாக்-கை நினைக்கும் படி செய்து உலகில் தான் பிறந்து இறவாப்புகழ் பெற்றுவிட்டார்.

Share