Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 நினைவில் நிறுத்துவோம் : தோல்விக்கு அஞ்சலாமா?
திங்கள், 27 மார்ச் 2023
நினைவில் நிறுத்துவோம் : தோல்விக்கு அஞ்சலாமா?
Print E-mail

சிகரம்

பிஞ்சுகள் இளம் வயதில் நெஞ்சில் நிறுத்த வேண்டியவை சில உள்ளன. அவை நல்ல பழக்கம், நல்ல உணவு, நல்ல பயிற்சி, நல்ல நட்பு, பகுத்தறிவு, உண்மை பேசுதல், நேர்மையாய் நடத்தல், தன்னம்பிக்கை, அஞ்சாமை, ஒதுங்காமை, மற்றவர் உணர்வுகளை மதித்தல், வினா எழுப்பி தெளிவடைதல், மூடநம்பிக்கைகளை விலக்குதல், கேடானவற்றைத் தவிர்த்தல் போன்றவை.

இவற்றுள் தன்னம்பிக்கையும், துணிவும் மிக மிக அடிப்படைத் தேவைகள். நம்மால் முடியும்! நம்மால் சாதிக்க முடியும், உயர முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயல வேண்டும்.

வாழ்க்கையில் நாம் முயற்சி செய்வதெல்லாம் வெற்றி பெறுவதில்லை; நாம் விரும்புவதெல்லாம் கிடைத்து விடுவதில்லை. இது உலகில் இயல்பாக எல்லோருக்கும் நடக்கும்.

மீண்டும் மீண்டும் முயற்சித்தால் தோல்வியைத் தவிர்த்து வெற்றியை அடையலாம். ஒன்று கிடைக்கவில்லை என்றால் இன்னொன்றில் முயற்சி செய்து வெற்றி பெறலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு துறையும் சிறந்தவையே. ஒரு துறையில் நாம் எப்படிச் சாதிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அதில் சிறப்பும், உயர்வும் பெற முடியும்.

நாட்டை ஆளுகின்ற வாய்ப்புக் கிடைத்தும் அதைச் சரியாய்ச் செய்யாமல் கெட்ட பெயரை, இகழ்வை அடைந்தவர்கள் பலர். மாறாக, மக்களுக்குத் தொண்டு செய்தே மகத்தான உலகப் புகழைப் பெற்றவர்கள் உண்டு. தந்தை பெரியார், அன்னை தெரசா போன்றவர்கள் அதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

எனவே, எதில் எப்படிச் சாதிக்கிறோம் என்பதே சிறப்பையும் உயர்வையும் தரும். செய்கின்ற பணி சிறப்பைத் தருவதில்லை. உயர்நிலை _- மேல்நிலைக்கல்வி படிக்கின்றபோதே மருத்துவராக வேண்டும் என்பதும், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதும் மட்டுமே நோக்கம் என்று கொள்வது உண்டு. ஆனால் மருத்துவப் படிப்பு கிடைக்காது என்றால் வாழ்க்கையே இல்லை என்று முடிவுக்கு வருவது தப்பு.

இன்று மருத்துவக் கல்விக்கு ஏற்படுத்தப்-பட்டிருக்கும் நீட் என்ற தடையால் சிலர் தங்களை மாய்த்துக் கொள்கின்றனர். அத் தடையை நீக்குவதற்கு தமிழ்நாடு அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. நன்கு படித்து மருத்துவக் கனவுடன் இருக்கும் பலரை நீட் பெரும் மன ஊளச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது என்பது உண்மை தான்.

முற்காலத்தில் எதையுமே நாம் படிக்க முடியாத நிலை இருந்ததே! அதையெல்லாம் போராடிப் போராடித் தானே நம் முன்னோர் வென்றிருக்-கின்றனர். தாங்கள் பெற முடியாத கல்வியைத் தங்களுக்கு அடுத்த தலைமுறையாவது பெற வேண்டும் என்ற அவர்களின் போராட்ட உணர்வால் தானே நாம் இன்று கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தனக்குக் கிடைக்காத வசதியும் வாய்ப்பும் கல்வியும் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் நம் பெற்றோர் நமக்காக உழைப்பதில்லையா?

எதுவும் எளிமையாகக் கிடைத்துவிடவில்லை? அந்தப் போராட்டங்கள் வெற்றியடைய கொஞ்ச காலம் ஆகலாம். ஆனால் வெற்றி உறுதி. அது சமூகத்துக்கே வெற்றியாக முடியும்.

இந்த நீட் போன்ற தேர்வுகளும் அப்படித்தான். இந்தச் சூழ்ச்சி காரணமாக நாம் மருத்துவத் துறையில் நுழைய முடியவில்லையா? சோகம் தான். வருத்தம் தான். ஆனால் அதற்காக நம் வாழ்வை முடித்துக் கொள்ள முடியுமா?

இந்தச் சூழ்ச்சியில் அடுத்தடுத்த மாணவர்களும் மாட்டிக் கொள்ளாமல் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகப் போராட வேண்டும்.

அதே சமயம் நம் வாழ்க்கையை மேம்படுத்த, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அதையொத்த பிற துறைகளில் கவனம் செலுத்தலாம்

பொறியியல் துறையிலும் சாதிக்கலாம், உயர்வடையலாம்; ஆசிரியர் தொழிலிலும் அவ்வாறே மேன்மையுறலாம்; வங்கிப்பணி, நிருவாகப்பணி, கலைகள், விளையாட்டு, நடிப்பு, சொந்தமாய்த் தொழில் செய்தல், புதியன கண்டுபிடித்தல், வேளாண்மைத் துறையில் சாதித்தல் என்று எத்தனையோ வாய்ப்புகள் நம்முன் உள்ளன.

நமக்கு எதில் விருப்பம் இருக்கிறது, நமக்கு எது நன்றாக வரும், நாம் எதில் உயர்வும் சிறப்பும் பெற முடியும் என்று தேர்வு செய்து முயல வேண்டும். மாணவர்களும் தங்களுக்கு விருப்பமானதை, தகுதியானதை, பொருத்தமானதைத் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோரும் அதை ஏற்க வேண்டும். மாறாக, தங்கள் விருப்பத்தைப் பிள்ளைகள் மீது திணிப்பது கேடானது.

மருத்துவத்தில் இடம் கிடைத்தும் அதில் சேராமல் சமூகவியல் பாடத்தைத் தேர்வு செய்தார் ஒரு பெண். ஏன் என்று கேட்டபோது, நான் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று மக்கள் பணி செய்யப் போகிறேன் என்றார். அப்படியே சாதித்தும் காட்டினார். மருத்துவராகிப் பெறுவதைவிட உயர் இடத்தை, சிறப்பை, பெருமையைப் பெற்றார். இதை பிஞ்சுகள் மனதிற் கொள்ள வேண்டும்.

படிக்கின்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் குறைவாகப் பெறுதல், விரும்பிய படிப்பு கிடைக்காமை, தேர்வில் தோல்வி போன்ற பல பிரச்சினைகள் வரும். உடனே, வெறுப்போ, அச்சமோ, வெட்கமோ, வேதனையோ கொள்ளக் கூடாது. மீண்டும் முயற்சிக்க வேண்டும் அல்லது மாற்று முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

மாறாக மனம் தளர்ந்து, இனி எதற்கு வாழ வேண்டும் என்று முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் மட்டும் அல்ல; நம்மை இவ்வளவு காலம் பாடுபட்டு வளர்த்த பெற்றோருக்கும், இச்சமுதாயத்திற்கும் செய்யும் துரோகமும், குற்றமும் ஆகும்.

வாழ்வு என்பது படிப்பு, மதிப்பெண் சார்ந்தது மட்டும் அல்ல. பல வாய்ப்புகள் கொண்டது. ஒன்று கிடைக்கவில்லை என்றால் இன்னொன்றைத் தேர்வு செய்து அதில் சாதிக்க வேண்டும். இறந்து சாதிப்பது ஒன்றும் இல்லை. அதற்கு மாறாய் வாழ்ந்து சாதிப்பதே மனிதர்க்கு அழகு.

எனவே, எச்சூழலிலும், எதற்காகவும் தற்கொலை என்பது கூடவே கூடாது. அது கோழைச் செயல். வாழ்ந்து காட்டுவதும், தான் எதிர்கொண்டது போன்ற சவாலைச் சமாளிக்க பிறரைத் தயாரிப்பதும் பெருமைக்குரிய செயல்.

Share