Home முந்தைய இதழ்கள் 2021 அக்டோபர் 2021 கதை கேளு.. கதை கேளு.. கல்பனாவின்
செவ்வாய், 28 மார்ச் 2023
கதை கேளு.. கதை கேளு.. கல்பனாவின்
Print E-mail

விழியன்

ரவா லட்டு மீது கல்பனாவிற்குக் கொள்ளை ஆசை. இத்தனைக்கும் அவள் இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே ரவா லட்டு சாப்பிட்டு இருக்கிறாள். தன் வகுப்பு நண்பன் ராமுவின் பிறந்தநாளன்று ரவா லட்டின் ஒரு சிறு துண்டை அவன் அவளுக்குக் கொடுத்தான். அதுதான் அவள் முதன்முதலாகவும் கடைசியாகவும் சாப்பிட்ட ரவா லட்டு. அதன் பின்னர் அவளுக்கு ரவா லட்டின் மீது அதிக விருப்பம் ஏற்பட்டுவிட்டது.  பலரிடமும் கேட்டு ரவா லட்டு செய்யத் தேவையான பொருள்களை அறிந்துகொண்டாள். பால், சர்க்கரை, முந்திரி, ரவை, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகிய பொருள்கள் தேவை. ஊரில் எங்காவது திருமணம் அல்லது விழாக்களுக்குச் சென்றால் அப்பாவுடன் சமையற்கூடத்துக்குச் சென்று “ரவா லட்டு செய்திருக்கீங்களா?” என்று கேட்டுவிடுவாள். ஒருமுறை அப்படிக் கேட்டு “இல்லை” என்று பதில் வந்ததும், “உங்களுக்குச் செய்யத் தெரியாதா?” என்று கேட்பாள். “இல்லம்மா, அது எளிதில் உதிர்ந்திடும். அதனால் நிறைய பேருக்கு இனிப்பு செய்யும்போது அது வேண்டாம்னு சொல்லிடுவாங்க. உனக்கு நான் செய்து தரவா?”ன்னு ஒரு சமையல்காரத் தாத்தா கேட்டார். “வேண்டாம்”ன்னு சொல்லிவிட்டாள் கல்பனா. தன் மகளுக்கு ரவா லட்டு என்றால் அவ்வளவு பிடிக்கும் என அப்போதுதான் அவள் அப்பாவுக்குத் தெரிந்தது.

காதுகுத்து நிகழ்வுக்குச் சென்று வந்து “கல்பனா, இதோ பார் ரவா லட்டு” என இரண்டு லட்டுகளை நீட்டினார் அப்பா. அது கோதுமை நிறத்தில் இருந்தது. “இல்லைப்பா, எனக்கு இந்த லட்டுகள் பிடிக்காது. பால் கலர்ல இருக்கும் ரவா லட்டுதான் எனக்குப் பிடிக்கும். நீங்களும் அம்மாவும் சாப்பிடுங்க” என்றாள். “வீட்டில் ரவா லட்டு செய்யட்டுமா?” என அம்மா கேட்டார். அப்பா “வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். தன்னுடைய மகள் முதன்முதலாக தன்னிடம் ஒரு பொருள் கேட்டிருக்கின்றாள். தானே அதைச் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அதுவும் நடைபெறவில்லை. மிக மிகச் சுவையான ரவா லட்டு பக்கத்து ஊர் சுங்காபட்டியில் கங்கா இனிப்பகத்தில் கிடைக்கும் எனக் கேள்விப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு சுங்காபட்டிக்குச் சென்றார். கல்பனாவும் உடன் சென்றாள்.

வழக்கமாக இருக்கும் சந்தைக்கு பக்கத்தில்தான் கங்கா இனிப்பகம் இருந்தது. இனிப்பகம் பளபளப்பாக இருந்தது. முதலாளி இருக்கை காலியாக இருந்தது. கடையில் வேலை செய்யும் பையன் மட்டுமே இருந்தான். கண்ணாடிக்கு உள்ளே பால் நிற ரவாலட்டைப் பார்த்ததுமே கல்பனாவின் கண்கள் அகல விரிந்தன. “அப்பா, ரவா லட்டு!!” எனக் கத்தினாள். அந்தக் கடைக்காரப் பையன் சிரித்தான். “புள்ள, உனக்கு எத்தனை லட்டு வேணும்” என்று அப்பா கேட்டார். மனதில் கொஞ்சம் கணக்கு போட்டு ‘அய்ந்து’ என்றாள். “கால் கிலோவுக்கு அஞ்சு நிற்கும் சார்” என்றான் கடைக்காரப் பையன். டிஜிட்டல் தராசில் அய்ந்து ரவா லட்டினை வைத்ததும் அது 275 கிராம் என்று காட்டியது. உடனே ஒரு காகிதப் பெட்டியில் லட்டுகள் அடுக்கிக் கொடுக்கப்பட்டன. கல்பனா அதனை கையில் பிடித்துக்கொண்டாள். சைக்கிளின் பின்னிருக்கையில் அமரும் போதும் பத்திரமாக அமர்ந்தாள். லட்டு உதிர்ந்து விடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாகப் பிடித்துக் கொண்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்து பார்த்தால் அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி! பெட்டிக்குள் இருந்தன ஆறு லட்டுகள். ‘வர்ற வழியில லட்டு குட்டி போட்டு இருக்குமோ’ என யோசித்தாள். அவள் அய்ந்து லட்டு என கணக்குப் போடும்போது அப்பாவுக்கு ஒன்றும் அம்மாவுக்கு ஒன்றும் என கணக்குப் போட்டிருந்தாள். அவர்கள் இருவரும், “நீயே சாப்பிடு குழந்தை” எனச் சொல்லிவிட்டார்கள். கல்பனாவுக்கு தலைகால் புரியலை. “ஆறு லட்டும் எனக்கேவா!” என்று மகிழ்ந்தாள். ஆறு லட்டுகளையும் ஒரு கண்ணாடிப் பாட்டிலுக்குள் மாற்றினாள். இரண்டு நாளுக்கு ஒரு லட்டு சாப்பிடலாம்... அப்படியெனில் பன்னிரண்டு நாள்களுக்கு வரும் என திட்டம் போட்டாள். சந்தைக்குப் போய் வந்த மறுநாள்தான் சின்னதாக பிட்டு சுவைத்தாள். ஆஹா, என்ன சுவை! என்ன சுவை! அந்த ரவா லட்டு தன் தொண்டைக்குள் இறங்கி கழுத்துப் பகுதிக்குச் சென்று வயிற்றை அடையும் வரை கவனித்தாள். கையில் ஒட்டி இருந்த ரவை எதையும் விடவில்லை. பாட்டிலை மூடி சமையற்கட்டின் மேல் அடுக்கில் வைத்துவிட்டாள்.

விளையாடிவிட்டு வரும்போதுதான் ராணுவ வீரர்களைப்போல வரிசையாக எறும்புகள் எங்கோ செல்வதைக் கவனித்தாள். ஏதோ ஓர் இசைக்கு ஏற்றவாறு நடந்து செல்வதுபோல இருந்தது. தரையில் அமர்ந்து அவை செல்வதைக் கவனித்தாள் கல்பனா. அப்போதுதான் திடீரென ‘தன் ரவா லட்டினை எறும்பு சாப்பிட்டு இருக்குமோ?’ என்ற கேள்வி எழுந்தது. ஒரு ஸ்டூல்போட்டு மேல் அடுக்கில் வைத்திருந்த பாட்டிலை எடுத்தாள். ஆறு லட்டுகளும் பத்திரமாக இருந்தன. திரும்பவும் பாட்டிலை வைக்கும்போதுதான் ஒரு சின்ன எறும்பைக் கவனித்தாள். அது லட்டின் வாசனை பிடித்து வந்திருக்கவேண்டும். என்னதான் செய்கின்றது என்று கவனித்தாள் கல்பனா. சிரமப்பட்டு பாட்டிலின் மேல் ஏறியது. பாட்டிலின் மீது நின்று  இங்கிருந்து செல்ல வேறு ஏதேனும் வழி இருக்கா என்று யோசித்தது. பின்னர் மூடிக்குள் எங்கேனும் ஓட்டை இருக்கா என்று பரிசோதனை செய்தது. ஓர் இடத்தில் மிகச்சிறிய வழி இருந்தது. அதன் வழியே பாட்டிலுக்குள் சென்று மிகச் சிறியளவு லட்டைச் சுவைத்தது. அது நல்ல உணவுதானா என பரிசோதனை செய்தது. ‘ஆமா, சுவையான உணவும்கூட.’

அங்கிருந்து எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. உள்ளே சென்ற வழியே வெளியே வந்தது. கல்பனா கவனித்துக்கொண்டே இருந்தாள். அந்த ஒற்றை எறும்பு எங்கே செல்கின்றது எனக் கவனித்தாள். மேலிருந்து தரைக்கு வந்துவிட்டது. எறும்பின் மோப்ப சக்தியினைக் கண்டு வியந்தாள். அது போகும் திசையில் சென்றாள்.

வாசலில் இருந்த எறும்புக் கூட்டத்தினை அடைந்தது. ஏதோ சொன்னது. ”அங்கே சுவையான ஆறு லட்டுகள் இருக்கின்றன. வாங்க” என சொல்லி இருக்குமோ? ஓர் எறும்புப் படை உருவானது. சமையற்கட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தன. அப்போதுதான் கல்பனாவுக்கு உரைத்தது _ அவை தன்னுடைய சுவையான ரவாலட்டை நோக்கிச் செல்கின்றன என்று. குடுகுடுவென சமையற்கட்டுக்குச் சென்று ஸ்டூல்மீது ஏறி பாட்டிலை எடுத்துவிட்டாள். எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டாள். எறும்புகள் மெல்ல வீரநடைபோட்டு சமையற்கட்டுக்கு வந்தன. முன்னர் இங்கே வந்து சென்ற எறும்புதான் வழிநடத்தி வந்தது. தரையில் இருந்து மேல் அடுக்கிற்கு சுவரின் மீது ஏறின. கற்பனையே செய்துபார்க்க முடியாத இடத்தில் அது சுவரில் இருந்து அடுக்கிற்கு தாவின. அவை பாட்டில் இருந்த இடத்தினை நோக்கி நடந்தன. பாட்டில் இருந்த இடத்தினை வந்து சேர்ந்ததும் ஏமாந்தன. மற்ற எறும்புகள் முதலில் வந்த எறும்பிடம் ஏதோ பேசின. அநேகமாக திட்டி இருக்க வேண்டும். பின்னர் சமாதானம் செய்துகொண்டு அங்கிருந்து வந்த வழியே அவை திரும்பின. சுவரில் தாவிக் குதித்து மேலிருந்து கீழே இறங்கின.

தரையில் இறங்கியதும் எறும்புகளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவை தேடி வந்த ரவாலட்டின் சிறு துண்டு அங்கே தரையில் இருந்தது. “யே” என மகிழ்ந்தன. முதலில் கொஞ்சம் பகுதியினை எடுத்துக்கொண்டு மீண்டும் பெரும் படையுடன் வந்து மீதம் இருந்த லட்டின் பகுதிகளை எடுத்துச்சென்றன. இவை எல்லாவற்றையும் கல்பனா பார்த்து ரசித்தாள். அவள் ஒரு லட்டின் அய்ம்பதில் ஒரு பகுதியைகூடப் பிட்டு வைத்திருக்க மாட்டாள். எறும்புகள் அந்த அய்ம்பதில் ஒரு பகுதியை மொத்தமாக தங்கள் இருப்பிடத்துக்கு எடுத்துச் சென்றதும் மீதம் இருந்த லட்டைச் சுவைத்தாள் கல்பனா. அது மிக மிக மிக மிக சுவையாக இருந்தது. இப்போது பாட்டிலை வேறு இடத்தில் வைத்தாள்.

Share