மழை! மழை! | |||
|
குயிலக்கா பாடல் கேட்டுக் கோலஎழில் தோகை கொண்டு மயில்மாமா மகிழ்வாய் ஆட மழைமேகம் கருக்கு தம்மா!
தவளையண்ணா சத்த மிட்டே தாளமுடன் குரலெ ழுப்பக் கவலையுடன் நண்டும் ஓடக் கனமழைதான் கொட்டு தம்மா!
வான்பறவை கூட்டை நோக்கி வட்டமிட்டுப் பறந்தே ஓடத் தேன்வண்டும் ஓய்வெ டுக்கத் திசையெங்கும் மழைதா னம்மா!
எருமையுடன் விலங்கெல் லாமே இன்பத்தை அனுப விக்க பெருமழைதான் பெய்யு திங்கே; பிள்ளைகளின் கொண்டாட் டம்தான்!
நாடெல்லாம் மழைமி குந்தால் நலமாகும் உழவர் வாழ்வு; காடெல்லாம் பசுமை யாகும்; காசினியின் பஞ்சம் நீங்கும்!
நகரத்தில் மழைபெய் திட்டால் நம்பள்ளி விடுமு றைதான்; சுகமாக மழையில் ஆடிச் சுறுசுறுப்பாய் ஆவான் கிட்டு!
- கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர்,
கோவை-641005
|